கடந்த ஆண்டு மார்ச் மாதம் – தமிழ்நாட்டில் பீகாரிகளை வெட்டிக்கொலை செய்து வீதிகளில் உடல்களைத் தொங்கவிடுகிறார்கள் – என்று போலி செய்தி பரப்பிய மனீஷ் காஷ்யப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் இருந்து பீகாரில் உள்ள தர்பங்கா சிறைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு நிதிஷ்குமார் பாஜக பக்கம் சரிந்த பிறகு அவருக்குப் பிணை வழங்கப்பட்ட நிலையில் அவரை பாஜக ஆதரவு ஊடகங்கள் பேட்டி காண்கின்றன. பேட்டியில் அவர் வெளிப் படையாகவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்களைப் பற்றி தவறான வகையில் விமர்சனம் செய்கிறார்.
“மதுரை சிறையில் வேகாத சோறும், புளித் தண்ணீரும் உப்பும் மட்டுமே தந்தார்கள். அங்கே உள்ள அரசு ‘பாரத தருமத்தை’ சிதைக்கும் அரசாகவே உள்ளது. இந்த நாட்டின்மீது பற்று வைத்திருக்கும் நபர்களை விரோதிகளாக பார்க்கின்றனர்” என்று கூறுகிறார் “மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், அரியானா போன்ற மாநிலங்களில் வீட்டுக்கு வீடு சென்று அனைவரது காலிலும் விழுந்து தர்ம விரோதியாக செயல்படும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வரும் காங்கிரஸ் கட்சி உள்பட எந்தக் கட்சிக்கும் ஓட்டுப் போடக் கூடாது என்று இன்றிலிருந்தே பரப்புரைக்கு கிளம்பி விட்டேன்” என்று தொடர்ந்து கூறுகிறார்.
நாடு எந்தத் திசையில் போய்க் கொண்டு இருக்கிறது? அபாண்டமான பொய்ப் பரப் புரைகளை மேற்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கானோரைப் பணியமர்த்தி செயல்படும் வேலையில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு வருகிறது.
மனீஷ் கஷ்யப் செய்த பிரச்சாரம் எத் தகைய பார தூர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது – உள்நாட்டுக் கலவரத்தை உண் டாக்கக் கூடியது. வட மாநிலங்களில் வாழும் தமிழர்கள்மீது தாக்குதலைத் தூண்டச் செய்யும் விபரீத பிரச்சாரம் அல்லவா!
நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து, கலவரங்களை உண்டாக்கி, அதன் மூலம் அரசியல் குளிர் காய்வதுதானே ஆர்.எஸ்.எஸின் சித்தாந்த அணுகுமுறை!
பி.ஜே.பி.யில் சேர்ந்து விட்டால் எப்படிப் பட்ட குற்றவாளியும் பரிசுத்த மாமனிதனாக ஆக்கப்பட்டு விடுவான்!
பிணையில் வெளிவந்துள்ள இந்தக் குற்றவாளி வீடு வீடாகச் சென்று காலில் விழுந்து, தமிழ்நாட்டை தர்மத்திற்கு விரோதமான மாநிலமாகச் சித்தரித்து, பிஜேபிக்கு வாக்கு சேகரிக்கப் போவதாகக் கூறியுள்ளது எதைக் காட்டுகிறது?
சாதுவான – தவமிருந்த சம்புகனைப் படு கொலை செய்த ராமனுக்குத்தான் பன்னூறு கோடி ரூபாய் செலவில் புதுக் கோயில்!
மக்களே உஷார்! உஷார்!! இந்த ஆட்சியை வரும் தேர்தலில் வாக்குச் சீட்டு மூலம் வீழ்த்தாவிடில் நாடு காடாகும் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானம் மிகவும் முக்கியமானதே!
No comments:
Post a Comment