சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நிர்வாகியாக செயல்பட்டவர் சு. அறிவுக்கரசு படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் இரங்கல் உரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 6, 2024

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நிர்வாகியாக செயல்பட்டவர் சு. அறிவுக்கரசு படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் இரங்கல் உரை!

featured image

கடலூர்,பிப்.6 மேனாள் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களின் படத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வீரவணக்க உரை ஆற்றினார். நிகழ்வில் பல்வேறு அமைப்பினர், தமிழ்நாடு முழுவதும் இருந்து கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சுயமரியாதைச் சுடரொளியான
சு. அறிவுக்கரசுவுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

சுயமரியாதைச் சுடரொளி ஆனார்
சு. அறிவுக்கரசு!
சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நிர்வாகி ஆகிய பண்புகள் நிறைந்த மேனாள் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அதிகாலை 12.05 க்கு உடல்நலக்குறைவால் காலமானார். அன்னாருக்கு 3.2.2024 அன்று கடலூர் மாவட்டம், இம்பீரியல் சாலையிலுள்ள வள்ளி விலாஸ் செல்வ மகால் மண்டபத்தில் காலை 10.30 மணி அளவில் படத்திறப்பும், நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு படத்தைத் திறந்து வைத்து இரங்கல் உரை ஆற்றினார். முன்னதாக அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் உள்ள அண்ணாவின் சிலைக்கு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் படியேறி மேலே சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் இள.புகழேந்தியுடன் கலந்து கொண்டனர்.

தோழர்களின் இரங்கல் உரைகள்!
படத்திறப்பு நிகழ்ச்சியை அறிவுக்கரசு அவர்களின் குடும்பத்தினர் சார்பில் முனைவர் த.ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினர். அதைத் தொடர்ந்து குடும்ப நண்பரும், கழகக் காப்பாளருமான அரங்க.பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா. ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில தொழிலாளரணிச் செயலாளர் திருச்சி மு.சேகர், தலைமைக்கழக அமைப்பாளர்கள் ஊமை.ஜெயராமன், இல.திருப்பதி, த.சீ.இளந்திரையன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் சிதம்பரம் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், கடலூர் மாவட்டத் தலைவர் சொ. தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில், சு. அறிவுக்கரசு எழுதிய 37 ஆம் புத்தகம், திராவிடர் கழக வெளியீடாக சென்னை புத்தகக் காட்சியில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட, “நீதிக்கட்சியும், சமூகநீதியும்” எனும் தலைப்பிலான புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டு 90 பிரதிகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு அமைப்பினர் இரங்கல் உரை!
அதேபோல் வழக்குரைஞரும் மேனாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளருமான இள. புகழேந்தி, ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன், வி.சி.க. மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் திருமார்பன் ஆகியோரும் முன்னிலை ஏற்று இரங்கல் உரை ஆற்றினர்.
அதேபோல் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் என்.ஜி.ஓ. யூனியன் மேனாள் அமைப்புச் செயலாளர் ஈரோடு சம்பத், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெரம்பலூர் ஓவியர் முகுந்தன், தூய தாவீது மேல்நிலைப்பள்ளி மேனாள் மாணவர் சங்கம் சார்பில் த. சண்முகசுந்தரம், த.மு.எ.க. சங்கம் சார்பில் எழுத்தாளர் பால்கி, நியூசிலாந்து தமிழ்ச்சங்கம் சார்பில் பேராசிரியர் முனைவர் இலக்குவன் சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்று இரங்கல் உரை வழங்கினர்.

திராவிடப் படைத்தளபதி மறைந்தாரே!
இறுதியில் தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல் உரை ஆற்றி னார். அவர் தனது உரையின் தொடக்கத்தில் ஒரு சிறந்த உவமை மூலம் அறிவுக்கரசு எப்படிப்பட்ட கொள்கையாளர் என்பதை விளக் கினார். அதாவது, “ஆரியர் திரா விடர் போராட்டத்தின் உச்சக்கட்டப் போரில், ஒரு படைப்பிரிவின் தளபதி மரணமடைவது, அந்த படையை நடத்துகின்ற தலைவருக்கு எப்படிப்பட்ட இழப்போ, அதே போல்தான் அறிவுக்கரசு வின் இழப்பும் எனக்கு மிகுந்த துயரத்தைத் தருகிறது” என்றார். இதைக்கேட்டதும் ஆசிரியரின் துயரத்தின் கனபரிமாணத்தை உணர்ந்த அனைவரும் ஆசிரியரே இப்படி கலங்குகிறாரே, நம்மை தேற்றுவது யார்? என்று தடுமாறிய போது ஆசிரியர், “அதற்காக போரை நிறுத்த முடியுமா? அல்லது பின் வாங்கத்தான் முடியுமா? அல்லது இன எதிரி வெல்லட்டும் என்று விட்டுக் கொடுக்க தான் வேண்டுமா?” என்று அதிரடியாக கேள்விகள் எழுப்பி அனைவரையும் திகைக்க வைத்துவிட்டார். அடுத்து, “முடியாது! முன்னிலும் வேகமாக பாசிச பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவாரங்களை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவைகளை வீழ்த்த நாம் செய்ய வேண்டியது பிரச்சாரம்! பிரச்சாரம்! பிரச்சாரம்!” என்று கூறி மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கி விட்டார் திராவிடப் படையின் தலைவர் ஆசிரியர் வீரமணி! ஆசிரியரின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கும் விதமாக சட்டென்று கையொலி எழுப்பினர் தடுமாறி நின்ற திராவிடப் படையின் வீரர்கள்!

ஆசிரியர் உரையில் துயரமும்! எழுச்சியும்!
அதைத் தொடர்ந்து, அறிவுக்கரசு வுக்கும் தனக்கும் உள்ள கொள்கையுறவு, நட்புறவு, உரிமை கலந்த வரலாற்று சம்பவங்களைக் கூறியும், பெயரன், பெயர்த்தி வரையிலும் கொள்கை உணர்வோடு வளர்த்தெடுத்த அறிவுக்கரசு வைப் பாராட்டியதோடு குடும்பத்தினரையும் பாராட்டிவிட்டு, ”ஓர் அறிவுக்கரசு அல்ல, 1000 அறிவுக்கரசுகள் நமக்குத் தேவை. அப்பணியில் நம்மை ஒப்படைத்துக் கொள்வோம்” என்று இரங்கலுரையை துயரத்துடன் தொடங்கி, ஆரிய திராவிடப் போரின் உச்சக்கட்ட போருக்கான அழைப்பைக் கொடுத்து நிறைவு செய்தார். இரங்கலுரை வழங்கியவர்களுக்கு முனைவர் த. ஜெயக்குமார், அறிவுக்கரசு எழுதிய புத்தகங்கள் வழங்கினார். இறுதியில் நியூசாலாந்திலிருக்கும் அறிவுக்கரசு வின் மகன் பொறியாளர் மணி நிலவன் குடும்பத்தினர் சார்பாக நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இறுதியில் அனைவரும் 2 மணித்துளிகள் அமைதி காத்து வீரவணக்கம் செய்தனர்.

ஆயிரக்கணக்கில் தோழர்கள் பங்கேற்பு!
முன்னதாக தோழர் கலைமணி அவர்களுக்கு சின்னமனூர் சோமு அவர்கள் சார்பில் ”சு. அறிவுக்கரசு நினைவு தொண்டூழிய நிதி” ஆசிரியர் மூலமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு சுயமரியாதைச் சுடரொளி ஆகிவிட்ட அறிவுக்கரசு அய்யாவுக்கு வீரவணக்கம் செலுத்தி கடமையாற்றினர்.

No comments:

Post a Comment