(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
துக்ளக்குக்குப் பதிலடி
திராவிட மாடல் என்றால் தேள்கொட்டுவது ஏன்?
கவிஞர் கலி.பூங்குன்றன்
சாரை விறுவிறுத்தால் வளையில் தங்காது என்பது ஒரு பழமொழி! இது ‘துக்ளக்’ கும்பலுக்குப் பொருத்தமானது.
திராவிடம் – பெரியார் – அண்ணா – கலைஞர் –
கி.வீரமணி – மு.க.ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டாலே அக்குளில் தேள் கொட்டியது போல துடியாய்த் துடிக்கிறார்கள்.
7.2.2024 நாளிட்ட துக்ளக் – பக்கம் 33இல் ‘திராவிட மாடலோ திராவிட மாடல்!’ என்ற தலைப்பில் ஒரு க(£)ட் டுரை வெளியாகியுள்ளது. திராவிட மாடல் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் கூறிவிட்டாராம்!
“ஆகா, ஆரியர்களாகிய நம்மை அடையாளம் கண்டு கொண்டு விட்டார்களே!” என்ற அச்சம் உச்சிக்குடுமியை ஒரு குலுக்கு குலுக்கிறது போலும்!
(1) ‘திராவிடம்’ என்பது சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்குள் முடங்கிப் பல மாமாங்கங்கள் ஆகிவிட்டன. ஈ.வெ.ரா.வுக்கே திராவிடம் பற்றிப் பெரிய அக்கறை கிடையாது. …. ஞாபக மறதியாக, ஏதோ ஞாபகத்தில் ‘திரா விடர் கழகம்’ என்று பெயர் வைத்தாரே தவிர, காலமெல்லாம் தமிழ்நாட்டுப் பிராமணர்களை எதிர்த்துக் கொண்டும் – கடவுள் மறுப்பு, பகுத்தறிவு என்று கூறிக் கொண்டும் இருந்தார். அதை தி.மு.க.வின் அடிவருடியான வீரமணியும் பிடித்துக் கொண்டு, திராவிட மாடல் என்ற கதைக்கிறார். ‘திராவிடமாவது, மாடலாவது?’ என்று கதைக்கிறது ‘துக்ளக்’.
திராவிடம், திராவிடர் என்று தந்தை பெரியார் புதிதாகக் கண்டு பிடித்துச் சொன்னது போல மடைமாற்றம் செய்யப் பார்க்கிறது துக்ளக். எந்த வார்த்தையைச் சொன்னால் ஆரியம் அலறுமோ, அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார் தந்தை பெரியார் – வரலாற்றுக் காரணங்களின் அடிப்படை யில்! ‘துக்ளக்’கின் தூக்கத்தைக் கலைத்து துரத்தியடித் திருக்கிறது. திராவிடம் என்பதிலிருந்தே தந்தை பெரியார் பயன்படுத்திய திராவிடத்தின் வீரியம் எத்தகையது என்பது விளங்கி விட்டது!
ஆரியம், திராவிடம் என்பது தந்தை பெரியாரோ, அறிஞர் அண்ணாவோ, முத்தமிழ் அறிஞர் கலைஞரோ, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களோ கற்பித்தது அல்ல! வரலாற்றின் ‘அ’, ‘ஆ’ எழுத்துக் களைத் தெரிந்திருக்கும் எவருமே, துக்ளக்கின் பிதற்றலை எண்ணி நகையாடுவர்! சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்
நாகரிகம் என்று அகழ்வாராய்ச்சி நிரூபிக்கவில்லையா?
மொகஞ்சதாரோ கி.மு. 2,600ஆம் ஆண்டு அளவில் உருவாகி கி.மு. 1,700ஆம் ஆண்டு அளவில் அழிந்து போனதாக சர்ஜான் மார்ஷல் என்ற தொல்லியல் ஆய்வாளர் தலைமையில் கண்டுபிடித்து அறிவித்து நூற்றாண்டு ஆகிவிட்டது. அங்கு நிலவியது திராவிடர் நாகரிகமே என்று அறுதியிட்டு அறிவிக்கப்பட்டது. சர்ஜான் மார்ஷல் நினை வாக அவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்னும் மொகஞ்சதாரோ அருங்காட்சிய கத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கட்டும்!
தினமணி மேனாள் ஆசிரியர் அய்ராவதம் மகாதேவன் போன்றோரும் அதனை வழிமொழிந்தனரே!
சிந்து சமவெளி கண்டுப்பிடிப்பில் திராவிடத்தின் சின்னமான காளையைக் குதிரையாக போட்டோ ஷாப் முறையில் மாற்றிக் காட்டியது பிஜேபி ஆட்சியின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி என்பதையும் மறந்து விட முடியுமா?
இந்தியா முழுவதும் திராவிடர்கள்
“இந்தியர்”களின் பூர்வீகம் எது?
கொல்கத்தாவைச் சேர்ந்த பேராசிரியர் பர்தா முஜீம்தார் இதுபற்றி ஆராய்ச்சி நடத்தினார். இதற்கு மரபு அணுக்களை ஆதாரமாக எடுத்துக் கொண்டார்.
இந்தியா முழுவதுமிருந்து 1,200 இந்தியர்களிடமிருந்து இரத்தம் எடுத்தார். தென்னிந்தியா – வடஇந்தியா, மேல்ஜாதி – கீழ்ஜாதி, முற்பட்டவர்-பிற்பட்டவர், ஆண்-பெண், மலை ஜாதியினர் என்று அத்தனை பேரும் இதில் அடக்கம்.
அந்த இரத்தத்திலிருந்து மரபு அணுக்களைப் பிரித் தெடுத்தார். அந்த அணுக்களை ஆராய்ந்து “இந்தியர்”களின் பூர்விகத்தைக் கண்டுபிடித்தார்.
பேராசிரியர் முஜீம்தார் கண்ட முடிவுகள் வருமாறு:
(1) இந்தியா முழுவதும் திராவிடர் வாழ்ந்தார்கள்.
(2) மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்கள் அலை அலையாக வரவே, திராவிடர்கள் தெற்கே நகர்ந்தார்கள்.
(3) ஆரியர்கள் தான் ஜாதி முறைகளை உண்டாக் கினார்கள். “நாங்கள் உயர்ந்த ஜாதி” என்று ஆரியர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதையேதான் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.
வரலாற்று ஆசிரியர்கள், மொழி ஆராய்ச்சியாளர்கள், இன ஆராய்ச்சியாளர்களின் கருத்தும் இதுதான். இதையே பேராசிரியர் முஜீம்தார், மரபணு சோதனை வழி உறுதிப் படுத்தி இருக்கிறார்.
– ராணி, 23.11.2003
பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் என்ன சொல் கிறார்?
“இதுவரை நமக்குக் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது தென் இந்தியாவின் திராவிடர்களும், வடஇந்தியாவின் அசுரர் களும் அல்லது நாகர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது.”
* * *
“நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய விடயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் ஒரே மொழியாக இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது என்பதேயாம், உண்மையில் இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழியாகவும் திராவிடம் திகழ்ந்தது.
– அண்ணல் அம்பேத்கர்
(தமிழ் இலெமூரியா, 15.1.2011, பக். 12,13)
டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் 2000-2001ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து “திரவிடியன் என்சைக்ளோபீடியா” என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, இந்நூலின் பெயரிலுள்ள ‘திரவிடியன்’ என்ற சொல்லை நீக்கிவிடலாமன்றோ என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அமைச்சரை நோக்கி, நீங்கள் நாட்டுப் பண்ணிலிருந்து “திராவிடம்” என்ற சொல்லை நீக்கிவிடுங்கள்; நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து “திராவிடம்” என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்றார். இது 2003 பிப்ரவரியில் வெளியான “டிஎல்ஏ நியூஸ்”இல் இது காணப்படுகின்றது.
1892இல் இரட்டைமலை சீனிவாசன் ஆதி திராவிடர் மகாஜன சபையை ஏற்படுத்தியதுண்டே! சேலத்தில் தமிழ்ப் பேரவையால் பாவாணருக்கு “திராவிட மொழி ஞாயிறு” என்று பட்டமளிக்கப்பட்டது பார்ப்பன எழுத்தாளருக்குத் தெரியுமா?
ஞாபக மறதியாக, ஏதோ ஞாபகத்தில் ‘திராவிடர் கழகம்’ என்று பெரியார் பெயர் வைத்தாராம்.
கருத்தைக் கருத்தால் சந்திக்க வக்கில்லாத இந்தக் கூட்டம் இப்படித் தப்பிதமாக தத்து – பித்து என்று உளறித் தொலைக்கிறது.
மனுதர்மத்திலேயே திராவிடம் பேசப்படுகிறதே! “பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், பால்ஹீகம், சீளம் கிராதம், தரதம் கசம், இந்தத் தேசங்களை யாண்டவர்கள் அனைவரையும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள்.
(மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 44)
மனு கூட ஞாபக மறதியாய் திராவிடம் பற்றிக் கூறிவிட்டார் என்று நவீன மனுவான துக்ளக் கூறப் போகிறதா?
தந்தை பெரியார் பற்றி இதே ‘துக்ளக்’ (15.1.1973) ‘95 வயதாகியும் கடைசி வரை புத்தி தீட்சண்யத்துடன் பெரியார் ஈ.வெ.ரா. வாழ்ந்தது இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு‘ என்று எழுதியதே – புத்தி தீட்சண்யத்துடன் பெரியார் பற்றி 50 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ‘துக்ளக்’ புத்தி தீட்சண்யத்தை இழந்து, ஞாபக மறதியாக திராவிடம் என்று பெயர் வைத்தார் என்று இப்பொழுது எழுதியுள்ளதை நினைத்தால் வாயால் சிரிக்க முடியுமா?
திராவிடம் என்பது சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்குள் முடங்கிப் பல மாமாங்கங்கள் ஆகிவிட்டனவாம் – எழுதுகிறது துக்ளக்.
தொடரும்
No comments:
Post a Comment