உஷார்! உஷார்!! உஷார்!!! (கோபால் நாயுடு, வண்ணை)
இம்மாதம் 24ஆம் வெளியான ‘ஆனந்த விகடன்’, உயர் திருவாளர் டாக்டர். ஏ.லட்சு மண சுவாமி முதலியாரைப் பரிகசித்துக் கேவலமாக எழுதியுள்ளான். விகடனுக்கு ‘எது விகடம்?’ எது தவறு? கூடத் தெரியவில்லை.
‘தமிழன் மூளை’ என மகுடமிட்டுத் தோழர் சோமசுந்தர பாரதியாரை ஏளனம் செய்தான்; அதற்குச் சரியான ‘ஆப்பு’ ‘விடுதலை’ விடுத்தது. அத்துடன் அடங்கிக் கிடந்த விகடன் இப்போது தன் வாலை நீட்டத் தொடங்கி இருக்கிறான்.
‘ஆனந்த விகடன்’ துக்க விகடனாக மாற விருப்பமோ என்னவோ தெரியவில்லை. ‘‘கேடுவரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே’’ என்பது தமிழ்ப் பழமொழி.
அது விகடனுக்குச் சாஸ்வத காபிரைட் போலும்!
டாக்டர், ஏ. லட்சுமணசுவாமி முதலியார் ‘சர்வகலாசாலை முசோலினி’ என விகடன் பிதற்றுகிறான். அவர் முசோலினியாக இருந்து சாதித்த காரியங்களில் தீங்கென்ன?
அவர் – ஒரு பார்ப்பனரல்லாதார், வைஸ் சான்சிலராக இருந்தது பார்ப்பன விகடனுக்கு வயிற்று எரிச்சல், அவருக்குச் சின்டிகேட்டில் ‘மெஜாரிட்டி’ இருப்பதும் பார்ப்பனருக்கு வயிற்றெரிச்சல். முதலியார் கொசுவைத் தட்டக் கை எடுத்தாராம். உடனே எல்லா மெம்பர்களும் கைத்தூக்கி விட்டனராம். சிலர் அவர் தயவைப் பெற இரண்டு கைகளையும் தூக்கினராம், என்ன அயோக்கியத்தனம்!
பல்கலைக் கழக மெம்பர்கள் அவ்வளவு மூடர்கள் என்பதல்லவா இதன் பொருள்!
இது பல்கலைக் கழக மெம்பர் அனை வருக்கும் அவமானத்தைக் கொணரும் கூற் றல்லவா? சில மாதங்கட்கு முன்னதாகப் ‘‘பார்ப்பனர் அல்லாதார் விஷயத்தில் தலையிடாதே’’ என தலையில் அடித்திருந்தும், ‘விகடன்’ தனது வாலை நீட்ட முயல்வது அவனது திமிரையே காட்டுகிறது. ‘விகடனை’ப் படிக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் தங்கள் பிரமுகர் ஒருவரை இவ்வாறு ‘விகடன்’ பரிக சித்திருப்பதை அவமானமாக உணர்ந்தால் ‘விகடன்’ கதி யாதாகும்? ஆனந்த விகடா ! நீ பிழைப்பது யாரால்? பார்ப்பனரல்லாப் பாமர மக்களின் பணத்தால் அல்லவா ? அவர்கள் பணத்தைத் தின்று, அவர்கள் பிரமுகரையே இழிவாகப் பேசுவது உனது இரு பிறப்புப் புத்தியைத் தானே காட்டுகிறது!
சில மாதங்கட்கு முன்தானே அரசாங்கம் உன்னை எச்சரித்து விட்டது!! அதற்குள் கர்வம் கொண்டு அலைகிறாயே உஷார்! இனி பார்ப்பனர் அல்லாத பெருமக்களிடையே மரியாதையாக நட. இன்றேல் உன்னை ஒழித்து விட நேரம் அதிகமாகாது என்பதனையும் அறிந்துகொள், ‘விளையாட்டு வினையாகும்’ என்பதையும் அறிந்துகொள். உன் விளை யாட்டைச் சாஸ்திரிகள் கூத்தியாரோடு, சரஸ லீலைகள் செய்வதிலும், ஒன்றாக உராய்ந்து கொண்டு கார்களில் போவதிலும், கிருஷ்ணய் யர் ஹோட்டலில் காபி சாப்பிடுவதிலும், காலம் போக்கும் பக்தரிடம் காட்டு! இங்கே வேண் டாம் ஆழம் பார்க்காது காலை விடாதே.உஷார்!
டாக்டர் முதலியாரைப் பற்றி எழுதிய விக டத்தை உன் பார்ப்பனச் சாதியினரே இழிவா கக் கருதுகிறார்கள் என்பதையும் அறிக. இனி எந்தப் பார்ப்பன மெம்பராவது வந்து உன்னி டம் டாக்டரைப் பற்றி எழுதும்படிக் கூறினால், ‘‘அய்யா,அந்தத் தொல்லை வேண்டா; விடுதலை ‘ஆப்பு’ அறையும்’’ என்று பதில் கூறிவிடு. இப்போதும் உன்னை எழுதத் தூண்டிய பார்ப்பனர் யாவர் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். அதை இங்குக் கூற வேண்டுவதில்லை.
உரைப்பார் உரைத்தால் ‘‘உன் மதி’’ எங்குப் போச்சு?
இனியும் வால் நீட்டினால்..
உஷார்! உஷார்!! உஷார்!!!
– ‘விடுதலை’ – 7.11.1936
Saturday, February 10, 2024
ஆனந்த விகடனுக்கு ‘ஆப்பு’ விகடம் காலித்தனமாக மாறுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment