சென்னை,பிப்.23- முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘‘பெண்களுக்கு நல்ல படிப்பு கொடுத்து, அவர்கள் வாழ்விற்குத் தேவையான ஊதியம் கிடைக்கும்படியான ஒரு தொழிலையும் கற்றுக் கொடுத்து விட்டால் – அவர்கள் தாங்களாகவே வாழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டால், எந்தப் பெண்ணும் ஒருவனுக்கு அடிமையாக இருக்க விரும்பமாட்டாள்” என்று ஓங்கி ஒலித்த தந்தை பெரியாரின் வழியில் பெண்களின் சமூக – பொருளாதார விடுதலைக்காக உழைத்து வருகிறது நமது ‘திராவிட மாடல்’ அரசு.
அதில் மற்றுமொரு பெருமுயற்சியாக, மகளிரின் உடல் நலன், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, அரசியல் பங்கேற்பு, தொழில்முனைவு போன்றவற்றை மேம்படுத்து வதை இலக்காகக் கொண்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”-அய் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிட்டேன். பாலினநீதி இல்லாமல் சமூக நீதி இல்லை.
மேலும், காவல்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவலர் குடியிருப்புகள், காவல் நிலையக் கட்டடங்கள், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பொதுத்துறை சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு ஓய்வு இல்லத்தையும் திறந்து வைத்தேன்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment