ஒன்றிய அரசின் உதவி கிடைக்காமையால் மாநில அரசின் கடன் நிதி பற்றாக்குறை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 23, 2024

ஒன்றிய அரசின் உதவி கிடைக்காமையால் மாநில அரசின் கடன் நிதி பற்றாக்குறை அதிகரிப்பு

featured image

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை, பிப்.23 தமிழ்நாடு சட்டப் பேரவையில் பொது நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (22.2.2024) பேசியதாவது:
இந்த அரசுக்கென்று மாபெரும் தமிழ்கனவு உள்ளது. சமூக நீதி, கடைக் கோடி தமிழர் நலன் உள்ளிட்ட இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள் ளது. சமூக நீதி தத்துவம்தான் நிதி நிலை அறிக்கையில் வெளிப்பட்டுள் ளது.புதியவறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியோர் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளும் வழங்கப்படும்.
ஒன்றிய அரசு திட்டங்களின் பெய ரில்தான் தமிழ்நாடு அரசு திட்டங்களைச் சொல்வதாக திட்டமிட்ட பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒன்றிய அரசு திட்டங்களில் தமிழ்நாடு அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் (ஊரகம்) ஒன்றிய அரசு 30 சதவீதம் தொகையான ரூ.72 ஆயிரம் மட்டுமே தருகிறது. மாநில அரசு ரூ.1.68 லட்சத்தை வழங்குகிறது. நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.1.5 லட்சம் தான். மாநில அரசின் பங்கு 7 லட்சமாக உள்ளது. முதல்வர் கிராம சாலை திட்டத்தின் முழு நிதியும், மாநில அரசே வழங்குகிறது.
பிரதமரின் கிராமசாலை திட்டம் ரூ.1,945 கோடிக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுகளுக்கும் நிதி வழங்கப் படவில்லை. தேசிய கல்விக் கொள்கை யில் கூறப்பட்ட காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடு முழுவதற்கும் பின்பற்றப்படும் மாதிரி திட்டமாக வழிநடத்தி வருகிறது.

பேரிடர் மேலாண்மை‘மிக்ஜாம்’ புயல் பாதிப்புகளைச் சீரமைக்க ரூ.19,650 கோடியும், தென் மாவட்டப் பாதிப்புகளுக்கு ரூ.18,214 கோடியும் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை நிதி தரப்படவில்லை. நிதிக்குழு பரிந் துரைப்படி வழங்கும் நிதியை, மிகைப்படுத்தி நிதி வழங்கப்பட்டு விட்டதாக கட்டமைக்கப்பார்க்கின்ற னர். ஏழை மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்குஆதரவாக இருப்பதால் ஒன் றிய அரசு பாரபட்சம் காட்டுகிறதோ என தோன்றுகிறது. தூத்துக்குடிக்கு பிரதமர் வருவதற்கு முன்னதாக ஒன்றிய அரசு உரிய நிதியை வழங்கும் என்று நம்புகிறோம்.

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட் டத்துக்கான ஒப்புதல் வழங்கப்படாத நிலையில் ரூ.63,246 நிதியையும் தமிழ்நாடு அரசே ஏற்கவேண்டியுள்ளது. ஒன்றிய அரசு தனது கடமையை நிறைவேற்றாததால் மாநில அரசின் கடனும், பற்றாக்குறையும் அதிகரித்துள் ளது. ஒன்றிய அரசு கூட்டாட்சி தத்து வத்தைக் கடைப்பிடித்து, கூடுதல் வரி, மேல் வரியில் இருந்து மாநில அரசுக்கு பங்கு தரும் என்றால், மாநிலத்தின் கடன், நிதிச்சுமை குறைந்திருக்கும்.
மாநிலத்தின் வளர்ச்சியை அதி கரிக்க ரூ.59 ஆயிரம் கோடியாக மூலதனச் செலவை உயர்த்தியுள்ளோம். வரும் காலத்திலும் அதிக முதலீடுகள் செய்வோம். மாபெரும் தமிழ்க் கனவுகளை உருவாக்க செதுக்கப்பட்ட இதுபோன்ற அறிவிப்புகள் தமிழர் களின் வாழ்வை வளம்பெறச்செய்யும்.கடனை பொறுத்தவரை, நிதிக்குழு நிர்ணயித்த அளவுக்குள்ளே உள்ளது. இவ்வாறு தென்னரசு பேசினார்.

மின்விபத்து உயிரிழப்பு நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்வு: சட்டப் பேர வையில், தமிழ்நாடு அரசின் பொது நிதி நிலை அறிக்கை மீதானபதிலுரையின் இறுதியாக, பேரவை உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன் (விசிக), ஈ.ஆர்.ஈஸ் வரன் (கொமதேக), பி.தங்கமணி (அதி முக) உள்ளிட்டோர் கோரிக்கைகளை ஏற்று, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:

மாணவர்கள் எண்ணிக்கை, தேவை யைக் கருத்தில் கொண்டு 521 ஆதி திராவிடர், பழங்குடியினர் பள்ளிகள், விடுதிகள் கண்டறியப்பட்டு, வரும் கல்வியாண்டு தொடங்கும் முன் ரூ.100 கோடியில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆதிதிராவிடர் தொழில்முனைவோருக்காக, 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட முதலிபாளையம் உள்ளிட்ட 2 தொழிற்கூடங்களை நவீன கட்டமைப்பு வசதியுடன் ரூ.50கோடியில் மேம்படுத் தப்படும். பேருந்து நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் காத் திருப்போருக்காக சிறிய நூலகங்கள் ரூ.3 கோடியில் அமைக்கப்படும். மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படாத நிலையில் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சமும், உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சமும் தற்போது இழப்பீடாக வழங்கப்படுகிறது. இந்த தொகை உயிரிழப்பு ஏற்படாத நிலையில், ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சமாகவும், உயரிழப்பு ஏற்பட்டால் நிவாரணம் ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.

No comments:

Post a Comment