மே.த. கவர்னர் அவர்கள் திருநெல்வேலிக்கு விஜயம் செய்யும் போது, அவருக்கு உபசாரப் பத்திரமளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் ஆதிக்கம் பெற்ற திருநெல்வேலி ஜில்லா போர்டு எப்படியோ தீர்மானித்து விட்டது. அது தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டிக்குப் பிடிக்கவில்லை. ஜில்லா போர்டு உபசாரப் பத்திரமளிக்கத் தீர்மானித்திருந்தாலும் ஜில்லா போர்டு தலைவர் உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்கக் கூடாதென்று தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டி ஜில்லா போர்டு தலைவருக்குக் கட்டளை பிறப்பித்திருக்கிறதாம். சட்டப்படி பார்த்தால் ஜில்லா போர்டுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. கட்சி சம்பிரதாயப்படி, தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு ஜில்லா போர்டு தலைவர் மீது குதிரையேற அதிகாரமி ருக்கலாம். ஆனால், காரியக் கமிட்டி ஞானமில்லாத ஒரு கூட்டம் என ஏற்கனவே காட்டிக்கொண்டிருக்கிறது. திருச்சி வாக்காளர் விருப்பத்துக்கு மாறாகக் காரியக் கமிட்டி நடந்ததினால் திருச்சியிலே காங்கிரஸே குடைசாய்ந்து கிடக்கிறது. இரண்டு பிரபல காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் விதவைகளாகும் படியும் நேர்ந்தது. காரியக் கமிட்டியாரின் முட்டாள் போக்கினால் திருச்சி காங்கிரஸ் பொது ஜன ஆதரவைப் பூராவாக இழந்து விட்டது. அதற்கு சமீபத்தில் நடைபெற்ற நகரசபைத் தேர்தலே அத்தாட்சி, மற்றும், காங்கிரஸ் கமிட்டிக்கு நிருவாகம் நடத்தத் திராணியில்லை யென்றும் அது உடனே ராஜிநாமா செய்ய வேண்டுமென்றும் ‘தினமணி’ போன்ற அசல் காங்கிரஸ் பத்திரிகைகளே தீர்ப்புக் கூறியிருக்கின்றன.
இந்நிலையில் செல்லாக்காசான தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கட்டளையை திருநெல்வேலி ஜில்லா போர்டு தலைவர் லட்சியம் செய்வார் என்று நாம் எண்ணவில்லை. ஜில்லா போர்டு தலைவர் திரு. குமாரசாமி முதலியார், காங்கிரஸ்வாதி என்று சொல்லிக்கொள்ளப்பட்டாலும் தலைவரான போதே அவர் பொது மனிதராகி விட்டார். மே. த. கவர்னருக்கு உபசாரப் பத்திரமளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் மட்டும் தீர்மானிக்க வில்லை. ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களும் சேர்ந்துதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆகவே, ஜில்லா போர்டின் கட்ட ளையை நிறைவேற்றி வைக்க வேண்டியது ஜில்லா போர்டு தலைவரின் நீங்காக் கடமை. அக்கடமையை நிறைவேற்றி வைக்க அவர் துணிந்து நிற்பதாகவும் தெரிய வருகிறது.
ஆனால், சமீபத்தில் திருநெல்வேலிக்கு திக் விஜயம் செய்த சத்தியமூர்த்தி கம்பெனியார், தலைவரைச் சந்தித்து மிரட்டிப் பார்த்தார்கள்; தலைவர் அசையவில்லை. ஆகவே, பாளையங் கோட்டை கோபாலசாமி கோவில் மண்டத்தில் ஒரு கூட்டம் தலைவரையும், மற்றும் காங்கிரஸ் மெம்பர்களையும் திட்டி, தொண்டை கிழியும் மட்டும் கத்தினார்களாம். திரு. சத்தியமூர்த்தி பேசுகையில், ‘‘திருநெல்வேலி ஜில்லா போர்டு நிலைமை திருப்தி கரமாயில்லை, காங்கரஸ் கட்சி ஒரு மாதிரியாக இருக்கிறது, காங்கிரஸ் கட்சியார் காங்கிரஸ் கட்டளைப்படி நடக்கிறார்களா இல்லையா என்று சோதிக்க 16.11.1936இல் ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது, அந்தச் சோதனையில் காங்கிரஸ்காரர் தவறிவிட்டால், பொது வாழ்வில் அவர்கள் மூக்கறுபட்டுப் போகும்” என்றெல்லாம் வெளுத்து வாங்கினாராம்.
அவரது பேச்சைப் பாராட்டி ‘தினமணி’ எழுதுகையில் “கவர்னருக்கு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுப்பதென்று ஜில்லா போர்டு தீர்மானித்தது முதல் முட்டாள் தனம். அப்படிச் செய்யக் கூடாதென்று காங்கிரஸ் சொல்லிய பின்பும் சிலர் செய்துதான் தீருவோமென்று பிடிவாதம் செய்வதாயிருந்தால் அதை விடப் பெரிய முட்டாள் தனம் வேறில்லை” எனச் செப்புகிறது. ஆனால், காங்கிரஸ்காரர்களிடம் முட்டாள் தனத்தையன்றி புத்திசாலித் தனத்தைக் கடுகத்தனையாவது எதிர்பார்க்க முடியாதென்ற உண்மை ‘தினமணி’யின் மர மண்டையில் இதுவரை ஏறவில் லையா? கணபதிக்குக் குட்டும்போதே காங்கிரஸ்காரர் முட்டாள் தனமாக நடந்து கொண்டதை ‘தினமணி’ உணரவில்லையா? அக்காலத்து காங்கரஸ்காரரின் முட்டாள் தனத்தை ‘தினமணி’ ஆதரிக்கவில்லையா? வாஸ்தவத்தில் திருநெல்வேலி ஜில்லா போர்டு தேர்தல் விஷயமாக காங்கிரஸ்காரர் காட்டிக் கொண்ட முட்டாள்தனத்தில் ‘தினமணி’க்கும் ஒரு பெரிய பங்குண்டு.
ஜில்லா போர்டு தலைவர் தேர்தலுக்கு காங்கிரஸ் பேரால் அபேட்சகரை நிறுத்தக்கூடிய கூட்டத்தன்று, காங்கிரஸ் மெம்பரான ஒருவரை, தலைவர் பதவிக்கு அபேட்சகராக நிறுத்தியது முதல் முட்டாள்தனம்; காங்கிரஸ் வாடையே அறியாத ஒருவர் கடைசி வரை காங்கிரஸ் கட்டளைப்படி நடப்பார் என நம்பியது இரண் டாவது முட்டாள் தனம்; ஜில்லா போர்டு தலைவர் பதவி கொடுப்பதாக வாக்களித்து காங்கிரசில் சேர்த்த ஒருவரை, கடைசி நேரத்தில் கை விட்டு, காங்கிரஸ் கட்சிக்குள் பிளவையுண்டு பண்ணியது மூன்றாவது முட்டாள் தனம்; ஜில்லா போர்டு காங்கரஸ் மெம்பர்களின் அட்டூழியங்களைப் பொறுக்க முடியாமல் அவர் களில் ஒரு பகுதியார் தனிக் கட்சி ஸ்தாபித்துக்கொண்டு ஏட்டிக்குப் போட்டி நாடகம் ஆடுவதைப் பார்த்த பிறகும், திருநெல்வேலி ஜில்லா போர்டு விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளாதது தமிழ்நாடு காங்கிரஸ் காரியக்கமிட்டியாரின் நான்காவது முட்டாள் தனம்; காங்கிரசின் போக்கை அறிந்திருந்தும், கவர்னருக்கு உபசாரப் பத்திரமளிப்பதென்று துணிந்து தீர்மானம் நிறைவேற்றிய திருநெல்வேலி ஜில்லா போர்டு காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் காரியக்கமிட்டியாரின் ஓலைப் பாம்புக்கு பயந்துவிடுவார்கள் என எண்ணியது அய்ந்தாவது முட்டாள் தனம்; ஜில்லா போர்டு தலைவருடைய உறுதியையும், காங்கிரஸ் மெம்பர்களுடைய உறுதியையும் பிரத்தியட்சமாகப் பிறகும், ‘மூக்கறுபட்டுப் போகும். அப்புறம் இந்த ஜன்மத்தில் பொது வாழ்க்கையில் தலையிட முடியாது என்றெல்லாம் திரு.சத்திய மூர்த்தியும் ‘தினமணி’யும் புலம்புவது ஆறாவதான இமாலய அடி முட்டாள்தனம்.
வாஸ்தவத்தில் நவம்பர் 16இல் காங்கிரசுக்கு ஒரு சோதனை நாள்தான். காங்கிரசின் சாயம் அன்றுதான் வெளுக்கப்போகிறது உலகமறிய ராஜ விசுவாசப் பிரமாணம் செய்து இம்மாதம் 3ஆம் தேதி சென்னை நகரசபையில் அங்கத்தினராய் உட்கார்ந்த காங் கிரஸ்காரர், திருநெல்வேலி ஜில்லா போர்டு தலைவர் கவர்னருக்கு உபச்சாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்கக் கூடாதென்று கூறுவது போக்கிரித்தனமா இல்லையா என்பதை நவம்பர் 16ஆம் தேதி திருநெல்வேலி ஜில்லா போர்டு காங்கிரஸ் மெம்பர்கள் முடிவு செய்யப் போகிறார்கள்.
ஆகவே, திரு.சத்தியமூர்த்தியும் ‘தின மணி’யும் புலம்புவதில் பயனில்லை. ‘தினமணி’ கூறுவதுபோல் திருநெல்வேலி ஜில்லா போர்டு காங்கிரஸ் மெம்பர்களுக்கு “தலைக்கிறுக்கு” இல்லை. சத்தியமூர்த்தி சும்பெனியாருக்கும், ‘தினமணி’க்கும்தான் தலைக் கிறுக்கு ஏற்பட்டிருக்கிறது.
– ‘விடுதலை’ – 7.11.1936
No comments:
Post a Comment