தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று கழக தொண்டர்களின் ஒருங்கிணைப்பில் செயல்வீரராக வெற்றி கண்டு தலைமை பொறுப்பதன் கடமையை தன்மானத்தோடு தொடரும் தளபதியின் பயணம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சரித்திரத்தை உலகளவில் கொண்டு செல்கிறது. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பதவி – புகழ் என்பன பல போராட்டங்கள், பல சிறை வாசகங்கள், பலரின் நம்பிக்கைகள் விடாமுயற்சியின் மூலமாகவே கிடைத்தது.
தமிழ்நாடு போற்றும் தளபதி முதிர்ச்சியும், பக்குவமும் பக்க பலமாகக் கொண்டவர். அவருக்கு ஒடிசலான தேகம் என்றாலும் அவரது முகம் விரசம் இல்லாமல் வசீகரமானது. பதவியில் இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் மக்களுக்காக உழைக்கின்ற தாரக மந்திரத்தை, தனது தந்தையார் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி என்றும், மக்கள் மனதில் வாழும் சரித்திர நாயகன் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் கற்றுக் கொண்டார். மாவட்டங்களில், நகரங்களில் நடைபெறும் எந்த பொதுக் கூட்டங்களிலும் கூட மனுக்களுடன் அவரைச் சந்திக்க வரும் பொது மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
துணை முதலமைச்சராக பணியாற்றியபோது, இரவு, பகல் என பார்க்காமல், தன் துறை சார்ந்த அதிகாரிகள், உதவியாளர்களுடன் மக்கள் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காண்பார்.
ஓயாத உழைப்பும், சுறுசுறுப்பும் எப்படி வந்தது? என வியந்து இவரிடம் கேட்டால் “கலைஞரின் சுறுசுறுப்பு, ஓயாத உழைப்புக்கு முன்னால் நான் எம் மாத்திரம்” என்பார். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்காமல், கலைஞர் போலவே கழகப் பணிகளை தொய்வின்றி, ஓய்வின்றி பணியாற்றுவதே இவரின் வெற்றிக்குக் காரணம். சிறு வயதில் மாணவர் அணியில் இணைந்து செயல்படத் துவங்கினார்.
23 வயதில் அவர் இளைஞர் அணியின் செயலாளர் ஆனார். இளைஞர் அணியிலிருந்து பலர் எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.களாக, அமைச்சர்களாகவும், மாவட்ட செயலாளர்களாகவும் உள்ளனர். ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது 36 வயதில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
அவரது பணி சிறக்க சென்னையின் மேயராகவும், உள்ளாட்சித் துறையின் அமைச்சராகவும் தனது முத்திரை பதித்தார். தனது “56ஆவது” வயதில் தமிழ்நாடு துணை முதலமைச்சராக தமிழ்நாடு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு தமிழ்நாட்டு மக்களையும், அரசையும், சிறப்புற வழி நடத்தினார். 10 சதவிகிதம் இளம் வாக்காளர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் இல்லா நாகரிகமான அரசியலையே விரும்புகிறார்கள். இன்றைய படித்த நடுத்தர வர்க்க, மேல் தட்டு மக்கள் பலருக்கும் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடும், அணுகு முறையும் அரசியல் பிரச்சினைகளையும் பொது மக்கள் நலன்களை பாதுகாக்கும் முறையும் மிகச் சிறந்ததாகும்.
இளைய தலைமுறை கொண்டாடும் தலைவர் ஆவதற்கு இளைஞராக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இளைஞர்களின் கனவுகளை “நனவாக்கும் திறன், மனப் பக்குவம், வளமான தமிழ்நாட்டை உருவாக்கும் கனவுகளும், திட்டங்களும் இருந்தாலே போதும். அப்படியான தலைமைப் பொறுப்பில் தமிழ்நாட்டில் வலம் வரும் மூத்த அரசியல் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
No comments:
Post a Comment