இந்தியா கூட்டணியிலிருந்து எவர் போனாலும் வெற்றி பெறுவோம்! தலைவர்களை நம்பி அல்ல இந்தத் தேர்தல் - மக்களை நம்பி இருக்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 8, 2024

இந்தியா கூட்டணியிலிருந்து எவர் போனாலும் வெற்றி பெறுவோம்! தலைவர்களை நம்பி அல்ல இந்தத் தேர்தல் - மக்களை நம்பி இருக்கிறது!

featured image

எந்தத் தலைவர், என்ன முடிவெடுக்கிறார் என்பது அலட்சியப்படுத்தப்படவேண்டிய செய்தியாகும்!

சென்னை சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சென்னை, பிப்.8 இந்தியா கூட்டணியிலிருந்து எவர் போனாலும் வெற்றி பெறுவோம்; எப்படி என்று கேட்டால், தலைவர்களை நம்பி அல்ல இந்தத் தேர்தல்; மக்களை நம்பி இருக்கிறது; மக்களாட்சி வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். எனவே, எந்தத் தலைவர், என்ன முடிவெடுக்கிறார் என்பது அலட்சியப்படுத்தப்படவேண்டிய செய்தியாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் – கடமையும்!’’ -திராவிட மாணவர் கழகத்தின் சிறப்புக் கருத்தரங்கம்
கடந்த 1-2-2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும்- கடமையும்‘’ -திராவிட மாணவர் கழகத்தினர் நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:-

எஸ்சி., எஸ்டி., ஓபிசி., சிறுபான்மை சமூகத்தினர், உயர்ஜாதி சமூகத்தினர் எல்லோரும். அது FC கோட்டா அல்ல; OC வேறு; FC வேறு. மீதம் உள்ள 50 சதவிகிதத் திற்கு எல்லோரும் போட்டி போடலாம். ஆனால், அவர்கள் எப்படி மாற்றினார்கள் என்றால், அதை அப்படியே OC – Open Competition என்பதை Other Community என்று.
கெட்டிக்காரராக இருப்பவர்களும் அதற்குப் போட்டி போடலாம்; அவர் எந்த ஜாதி என்பதைப்பற்றிக் கவலையில்லை. OC – Open Competition என்று ஏன் வைத்திருக்கிறார்கள் என்றால், காலங்காலமாக வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் அதில் வாய்ப்புக் கொடுக்கவேண் டும் என்பதற்காகத்தான். ஆனால், அதை அப்படியே தலைகீழாக மாற்றினார்கள்.
அதைக் கண்டுபிடித்து, அதை அப்படியே கிழித்தெறிந்தது யார்? திராவிடர் கழகம் அல்லவா! நம்முடைய இயக்கம் அல்லவா!

ரூ.9 ஆயிரம் வருமான வரம்பை எதிர்த்துப் போராடிய இயக்கம்
நமது இயக்கம்!

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது இது நடந்தது. அதற்குத் திருத்தம் சொன்ன சுகாதார அமைச்சராக இருந்தவர் இருக்கிறார்.
வழக்குப் போட்டோம்; வழக்கு விசாரணை யின்போது விளக்கிச் சொன்னோம்.
அவரையே குழப்பி, பொருளாதார அடிப்படை என்றார்கள். 9 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக வருமானம் உள்ளவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள். 9,100 ரூபாய் வருமானம் வாங்கினால், அவன் முன்னேறிய ஜாதி என்று சொன்னார்கள்.
அதை எதிர்த்து ஓராண்டு போராடி, அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்தோம்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராம்!

ஆனால், அது இன்றைக்கு வேறொரு ரூபத்தில், அகில இந்திய அளவில் EWS – Economically Weaker Section (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) கவிஞர் இங்கே சொன்னார் அல்லவா – ஒரு நாளைக்கு 2,200 ரூபாய் சம்பாதிக்கின்றவர் ஏழை. எல்லா ஜாதிக் காரர்களும் ஏழையல்ல – அதே 2,200 ரூபாயை மற்ற ஜாதிக்காரர்கள் சம்பாதித்தால், அவர்கள் ஏழையாக இருக்க முடியாது – அவர்களுடைய வரையறைப்படி.
ஏழையென்றால், நகரத்தில் ஏழை ரூ.31; கிராமத்தில் ஏழை ரூ.24. வறுமைக்கோட்டிற்குக் கீழே!
வறுமைக்கோடு என்றாலே நம்மாட்கள் பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் இருக்கிறதா என்று கேட்கின் றார்கள்.
வறுமைக்கோடு என்றால் என்ன?
இன்றைக்குக்கூட ஒன்றிய நிதியமைச்சராக இருக்கக் கூடிய அம்மையார் சொல்கிறார், ‘‘பொதுமக்கள் கோவில் உண்டியலில் பணத்தைப் போடாதீர்கள்; அதற்குப் பதிலாக அர்ச்சகர் தட்டில் போடுங்கள்” என்று.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில், தலையில் தட்டைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார்களே, அவர்கள் எல்லாம் யார்?
ஒரு நாளைக்கு ரூ.2,200 ஊதியம் பெறுபவர்கள் ஏழைகளா?
நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்த தாய்மார்கள்; நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்த வயதான முதியோர். வேகாத வெயிலில், மண் வெட்டியை எடுத்து வேலை செய்கிறார்களே, அவர்கள் எல்லாம் யார்?
ஒரு நாளைக்கு 2,200 ரூபாய் ஊதியமாகப் பெற்று, குளிர்சாதன அறையில் பணியாற்றுபவர்களா?
அந்தத் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கான ஊதியம்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவர் கள் ஏழைகளா? ஒரு நாளைக்கு ரூ.2,200 ஊதியம் பெறுபவர்கள் ஏழைகளா?
சமூகநீதிக்கு நாங்கள்தான் அடையாளம் என்கிறார் கள்; மோடி யார்? பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள்.
நாங்கள்தானே பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆக்கியுள்ளோம் என்கிறார்கள்.
புலி முகமூடியை முகத்தில் போட்டுக்கொண்டு காட்டுவதுபோல், எல்லாவற்றிற்கும் காட்டுவார்கள்.
இதுதான் சமூகநீதிக்கு அடையாளமா?
ஓர் உதாரணம் சொல்லுகிறேன்,
அம்பு இலக்கை நோக்கிச் சென்றதால், அம்பு முக்கி யமா? அல்லது அந்த அம்பை நாணில் ஏற்றி, சரியான இலக்கை நோக்கி செலுத்திய கைகள் முக்கியமா?
கைகள் இல்லாமல், எவ்வளவு கூர்மையான அம்பாக இருந்தாலும், இலக்கை நோக்கிச் செல்லுமா?
அதேபோன்று துப்பாக்கி. துப்பாக்கியிலுள்ள ட்ரிக் கரை கைகள் இழுத்தால்தானே வெடிக்கும். ஏ.கே.47 அல்லது நவீன ரக துப்பாக்கியோ ஆனால், கைகள்தானே ட்ரிக்கரை இயக்குகிறது.
அந்தக் கைதான் பார்ப்பனியம். இவர்கள் எல்லாம் வெறும் கருவிகள். இதுதான் அடையாளம்.
பார்ப்பனியத்தின் அடிப்படை தத்துவம்
ஒவ்வொரு காலகட்டத்திலும், பார்ப்பனர்கள் நம்மாட் களில் உள்ள விபீடணர்களைத்தான் வைத்துக் கொள் வார்கள்.
இராமாயணக் கதையை எடுத்துக்கொண்டால், வேலை செய்தது எல்லாம் அனுமார்; இராவணனைக் காட்டிக் கொடுத்தது யார் என்றால், விபீடணன்.
பார்ப்பனர்களுடைய தத்துவமே, அவர்கள் நேரிடை யாக இதுவரையில் வந்ததாக வரலாறு கிடையாது. மற்ற வர்களைத் தூண்டிவிட்டு செய்வதுதான் அவர்களுடைய வழக்கம். அதுதான் பார்ப்பனியத்தினுடைய அடிப்படை தத்துவமாகும்.
அந்த அடிப்படை தத்துவப்படிதான், இவர்களையெல் லாம் ஆர்.எஸ்.எஸ். தேர்ந்தெடுத்து செயல்படுகிறார்கள்.
அம்பேத்கரை அணைத்துக் கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்; அது அம்பேத்கருடைய கொள்கைக்கு நேர் விரோதமாகும்.
காந்தியாரை, கோட்சே என்ன செய்தார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.
ஒரு பக்கத்தில் காந்தியாரை இழிவுப்படுத்திக் கொண்டு, இன்னொரு பக்கம் ரூபாய் நோட்டில் அச் சடித்து, நாங்கள் காந்தியாருக்கு வணக்கம் செலுத்து கிறோம் என்கிறார்கள்.
ஆகவேதான், புறவேஷம் வேறு; அதை வெளி வேஷம் என்று ஒரே வார்த்தையில் சொல்வார்கள் தமிழில். அது போன்று இருக்கக்கூடிய நிலையை புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, முதலில் கல்விக் கண்களைக் குத்தியதை, பிறகு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. என் பதையெல்லாம் மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும்.

பக்தியைக் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்!

ஆகவே, பக்தியைக் காட்டி, இராமனைக் காட்டி இந்த ஆட்சி மீண்டும் வந்தால் – என்ன நடக்கும்? ரயிலில் பயணம் செய்யும்பொழுது மயக்க பிஸ்கெட்டைக் கொடுப்பார்கள். கொடுக்கின்றவர் முதலில் சாப்பிட்டுக் காட்டுவார்; அது வேறு பிஸ்கெட்டாக இருக்கும். அவர்தான் சாப்பிடுகிறாரே என்று எதிரில் இருப்பவர் அதை வாங்கிச் சாப்பிட்டு மயங்கிவிடுவார்; கடைசியில், அவருடைய பொருள்கள் ஒன்றும் இருக்காது. அதுபோன்று வாக்கு வங்கியைப் பயன்படுத்தவேண்டும் என்று நினைக்கின்றார்கள் – இன்றைக்கு சமூகநீதியை ஒழிப்பது – மதச்சார்பின்மை என்பதை அறவே குழிதோண்டிப் புதைப்பது – பெண்ணடிமையை வலியுறுத்துவது – இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக, மனுதர்மம்தான் அந்த இடத்தில் வரவேண்டும் என்பதற்காகத்தான் பக்தியைக் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
நம்மால் முடியுமா? என்று
தந்தை பெரியார் நினைத்திருந்தால், சமூகத்தில் இத்தனை மாறுதல்கள் வந்திருக்க முடியுமா?
இங்கே இருக்கின்ற, இன்னும் வராத இளை ஞர்களுடைய பங்கு என்பது நான்கு மாதங்களுக்கு கடுமையான பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண் டும். நம்மால் முடியுமா? என்று நினைக்காதீர்கள். நம்மால் முடியுமா? என்று தந்தை பெரியார் அவர்கள் நினைத்திருந்தால், சமூகத்தில் இத்தனை மாறுதல்கள் வந்திருக்க முடியுமா?
நம்மால்தான் முடியும் என்கிற உணர்வை நீங்கள் பெறவேண்டும்.
‘‘யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” என்கிற உணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கருத்தரங்கம்.
வீட்டிற்கு வீடு, தெருவுக்குத் தெரு, திண்ணைப் பிரச்சாரங்களை செய்யவேண்டும்.
இந்தியா கூட்டணி என்று உருவாகி, வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இப்பொழுது நமக்கு எல்லோருக்கும் சந்தேகம் வருவதுபோன்று, சந்தேகத்தை முதலில் தெளிக் கிறார்கள்; இது ஒரு மனோதத்துவ ரீதியான பிரச்சார முறையாகும்.
அவர்களுடைய ஏமாற்று வேலை – பிரச்சாரம்!
அது என்னவென்றால், ‘‘இந்தியா கூட்டணி உடைந்து போயிற்று; அவர் அந்தக் கூட்டணியிலிருந்து போய் விட்டார்; இந்த மாநிலத்தில் அவர்கள் தனியே போய் விட்டார்கள்” என்று சொல்கிறார்கள். இது அவர் களுடைய ஏமாற்று வேலை.
நம்மூரில் உள்ள ஊடகங்களை யார் நடத்துகிறார்கள் என்றால், பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகள்தான். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அந்தச் செய்தி யைத்தான் அதில் பணியாற்றுபவர்கள் ஒளிபரப்பவேண் டும்; அதற்கு மாறான செய்திகளை ஒளிபரப்பினால், உடனே அவர்களை வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

மோடியின் உத்தரவாதம் அல்ல;
வெறும் வாதம்தான் மக்களுக்கு!

ஆகவே, அவர்களுடைய தொலைக்காட்சிகளில் ‘‘மோடியின் உத்தரவாதம்” என்று ஒளிபரப்புகிறார்கள். சரி, ஏற்கெனவே அவர் கொடுத்த உத்தரவாதம் என்னாயிற்று?
‘‘ஜூம்லா”தான்!
இப்பொழுது கொடுக்கின்ற உத்தரவாதம் ‘‘அம்லா”வா?
அம்லா என்றால், நெல்லிக்காய்.
உத்தரவாதம் அல்ல; வெறும் வாதம்தான் மக்களுக்கு. பிடிவாதம்தான் அதில் இருக்குமே தவிர, வேறொன்று மில்லை.
தொடர்ந்து பார்ப்பனிய சக்திகள் பத்திரிகைகளை மிரட்டி இரண்டு செய்திகளை மிகப்பெரிய அளவில் பரப்புகின்றனர்.
முன்பு, ஊழல், ஊழல் என்று சொல்லிப் பார்த்தார்கள், அந்த ஊழல் செய்தி மக்களிடையே எடுபடவில்லை என்றவுடன், ‘‘மோடிதான் மறுபடியும் மூன்றாவதாக பிரத மராக வருவார்” என்று மோடி வித்தை காட்டுகிறார்கள்.
நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால், ‘‘மீண்டும் மோடி பிரதமராக வர முடியாது; தோல்வி அடைவது உறுதி” என்கிற பிரச்சாரத்தை வீட்டுக்கு வீடு, தெரு வுக்குத் தெரு சொல்லவேண்டும்.
இந்தியா கூட்டணி உடைந்து போயிற்று என்று சொல் வதை நம்பாதீர்கள். ஏனென்று கேட்டால், ஓரிருவர் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறலாம். இந்தியா வில் உள்ள மாநில கட்சிகள் பெரிய அளவிற்கு செல் வாக்கு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அந்த செல் வாக்கோடு தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற் காக அவரவர்களுடைய சிந்தனைகள் தனியே இருக்க லாம். ஆனால், அது முக்கியமல்ல!
‘‘தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை; இதுதான் மற்றவர்களுக்குக் கற்றிடம்’’ என்றோம்!
தமிழ்நாட்டில் நம்முடைய சமூகநீதிக்கான சரித் திர நாயகர் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடைபெறுகிறது. அவர் ஆட் சிக்குவரு வதற்கு முன் என்ன சொன்னார்கள், ‘‘கலைஞர் இல்லை, ஜெயலலிதா இல்லை; தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது” என்று சொன் னார்கள்.
நாம்தான் சொன்னோம், இதே மேடையில் சொன்னோம், ‘‘தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை; இதுதான் மற்றவர்களுக்குக் கற்றிடம்” என்று சொன்னோம்.
அதன்படி வெற்றி பெற்றோமா, இல்லையா?
‘‘திராவிடம் வெல்லும், அதை நாளைய வரலாறு என்றும் சொல்லும்” என்றோம்.

நாடாளுமன்றத் தேர்தலில்
40 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும்!

எதிர்க்கட்சியாக இருந்தவர் ஆளுங்கட்சியானார். அதற்கு முன்பு, நாடாளுமன்றத்தில் 40 இடத்தில் 39 இடத் தில் வெற்றி பெற்றார்கள். இந்த முறை 40 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும் என்ற அளவில் இருக்கிறது.
சமூகநீதி, பெண்களுக்கான நீதி 50 விழுக்காடு கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு எங்கே பார்த்தாலும், பெண் மேயர்கள், பெண் தலைவர்கள் இருக்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி – கொள்கைக் கூட்டணி!

தமிழ்நாட்டில் இருக்கின்ற கூட்டணிக்கும் – வட மாநிலங்களில் இருக்கின்ற கூட்டணிக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.
ஏனென்றால், நாம்தான் எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கின்றவர்களாக இருக்கின்றோம். வட மாநிலங்களில் இன்னும் தெளிவு வரவில்லை. அங்கே கூட்டணி என்பதே பதவிக்காக சேருகின்ற கூட்டணியாகும். அதனால்தான் அங்கே சிக்கல்.
தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி- பதவி என்பது இரண்டாம் பட்சம்தான். அதனால்தான் இந்தக் கூட்டணி வலுவாக இருக்கிறது – வழிகாட்டியாக இருக்கிறது.
இப்பொழுது அந்தக் கொள்கை உணர்வை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் 1925 ஆம் ஆண்டு, சமூகநீதிக்காக காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்தார். இன்றைக்கு அதே காங்கிரஸ் கட்சி, சமூகநீதியை கட்சிக்குள்ளேயும் செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடக்கூடிய அளவிற்கு உணர்வு பெற்று இருக்கிறது; பெரியார் வெற்றி பெற்று இருக்கிறார்.

தலைவர்களை நம்பி அல்ல இந்தத் தேர்தல்; மக்களை நம்பி இருக்கிறது!

இந்தியா கூட்டணியிலிருந்து எவர் போனாலும் வெற்றி பெறுவோம் என்று நீங்கள் மக்களிடம் சொல் லலாம்.
எப்படி என்று கேட்டால், தலைவர்களை நம்பி அல்ல இந்தத் தேர்தல்; மக்களை நம்பி இருக்கிறது; மக்களாட்சி வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
எனவே, எந்தத் தலைவர், என்ன முடிவெடுக்கிறார் என்பது அலட்சியப்படுத்தவேண்டிய செய்தியாகும்.
இந்தத் தகவலை தெருவுக்குத் தெரு சென்று, ஒவ்வொரு வீட்டின் கதவைத் தட்டிச் சொல்லுங்கள். மாணவர்கள்தான் அதற்குமுன் வரவேண்டும்.

மாணவர்கள் நினைத்தால், முடியாதது என்று எதுவுமில்லை!

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவின் ஆட்சி வந்தது எப்படி? காரணம் மாணவர்கள்தான்! மாணவர்கள் நினைத்தால், முடியாதது என்று எதுவுமில்லை.
கண்ணை மூடிக்கொண்டு நாம் எதையும் சொல்ல வில்லை. பகுத்தறிவுவாதிகள் நாம்.
பிரதமர் மோடி அவர்களே!
ஓராண்டில் இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னீர்களே, செய்தீர்களா?
ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று சொன்னார்களே, போட் டார்களா?
பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்தார்களா?
விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்போம்; அவர்களுடைய வாழ்க்கையை இரட் டிப்பு மடங்கு உயர்த்துவோம் என்று சொன்னார்களே, அதன்படி செய்தார்களா?

கேள்விக்குப் பதில் சொல்லாமல், திசை திருப்புகிறார்கள்!

இதையெல்லாம் கேட்டால், இராமன் கோவில் கட்டியிருக்கிறோம்; இத்தனை லட்சம் பேர் திரண்டார்கள் என்று சொல்கிறார்களே, அதனால் யாருக்கு லாபம்; அர்ச்சகர் தட்டில் பணம் விழுந்தால், அது பார்ப்பானுக்கு லாபம். கேள்வி கேட்டால், அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், திசை திருப்புகிறார்கள்.
உலகச் சந்தையில் பெட்ரோலிய கச்சாப் பொருளின் விலை குறைந்திருக்கிறது; ஆனால், பெட்ரோலியப் பொருள்களின் விலையை இந்தியாவில் குறைக்க வில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையும், சமையல் எரிவாயு உருளையின் விலையும் விண்ணைத் தொட்டிருக்கின்றன. அதைப்பற்றி ஒன்றிய அரசை நடத்துபவர்கள் கவலைப்படுவதில்லை. அதேநேரத்தில், மாநில அரசினுடைய கழுத்தை நெரிக்கிறார்கள்.

புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மனிதநேயத்தோடு சென்று பார்க்கக்கூட மோடி தயாராக இல்லை!

புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியைக் கொடுக்கவில்லை. மக்கள் கொடுக்கின்ற வரிப் பணத்தில்தானே ஒன்றிய அரசே நடைபெறுகிறது என்று மக்களிடம் சொல்லவேண்டும்.
தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர், தனுஷ்கோடிக்குச் சென்று ஒரு நாள் முழுவதும் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் அவர், புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மனிதநேயத்தோடு சென்று பார்க்கக்கூட அவர் தயாராக இல்லாமல், வாக்கு வாங்குவதற்கு மட்டும் வருகிறாரே, இது நியாயமா? என்று மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். மக்களைக் கேட்க வையுங்கள்.

ஒவ்வொருவரும் உறுதியேற்றுக் கொள்ளுங்கள்!

ஆகவேதான், மாணவர்களாகிய நீங்கள் எல்லாம் மிகப்பெரிய கருவிகள். உங்களால் முடியும். ஒவ்வொருவரும் உறுதியேற்றுக் கொள் ளுங்கள் – பா.ஜ.க. கூட்டணிக்கு விழுகின்ற 10 வாக்குப் போடுபவர்களின் எண்ணத்தை, அவர் களுக்கு விளக்கம் சொல்லி மாற்றிக் காட்டுவேன் என்று.
நாம் ஏமாந்தால், அவர்கள் கொடுக்கும் மயக்க மருந்தால் உங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும் என்பதை விளக்கிச் சொல்லுங்கள்.
இரண்டு பொய்ப் பிரச்சாரத்தை அவர்கள் திட்டமிட்டு இன்றைக்கு செய்கிறார்கள்.
மீண்டும் வருவாரா என்பதைவிட, மீண்டு வருவாரா, மக்களுடைய கோபத்திலிருந்து?
ஒன்று, மீண்டும் மோடிதான் பிரதமராக வருவார் என்று. அவர்கள் சொல்வது திட்டமிட்டப் பொய்ப் பிரச்சாரம். மீண்டும் வருவாரா என்பதைவிட, மீண்டு வருவாரா, மக்களுடைய கோபத்திலிருந்து?
‘‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்” என்பதற்கு மக்களே விடை காணுவார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்த உணர்வு வரவேண்டும்.
இரண்டாவது, சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளையே பதிவிடுவது.
அந்தப் பொய்ச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும். நம்முடைய இயக்க ஏடுகளைப் படியுங்கள்.
பா.ஜ.க. மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால் என்னாகும்?
இட ஒதுக்கீடு கிடையாது – கல்வி கிடையாது – மீண்டும் துரோணாச்சாரி காலம் வரவேண்டுமா? மீண்டும் சம்புகன் கதை திரும்ப வேண்டுமா?

நம்முடைய பயணத்தில் வெற்றி பெறுவோம்!

இதையெல்லாம் கேட்கக்கூடிய அறிவும், ஆற்றலும், துணிவும் மாணவச் செல்வங்களே, உங்களுக்குத்தான் உண்டு.
எனவே, நம்முடைய பயணத்தில் வெற்றி பெறு வோம்! வெற்றி பெறுவோம்!!
மாணவர்கள் நினைத்தால், இந்த மாநிலத்தை மட்டுமல்ல, மக்கள் குலத்தையே மாற்ற முடியும் என்பதைத்தான் நாங்கள் இதுவரை கண்டிருக்கிறோம்.

நம்முடைய வெற்றி உறுதி!

நாம் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் – கிளர்ச்சியில் நம்பிக்கை இல்லாதவர்கள்!
காரணம், பாதை தெளிவான, உறுதியான பாதை. நடத்துகின்றவர்கள் தெளிவானவர்கள். யாரைப்பற்றியும் கவலைப்படவேண்டாம் – கொள்கை இருக்கிறது – தடுமாற்றம் இல்லாத கொள்கை – அந்தக் கொள்கை ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்ற சமூகநீதி – அந்த சமூகநீதிக் கொடி தலைதாழாமல் பறக்கவேண்டும் என்றால், பாலியல் நீதியைக் காப்பாற்றவேண்டுமானால், மாணவச் செல்வங்களே, மாணவ சிங்கக் குட்டிகளே, ‘‘பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது – சிறுத்தையே வெளியில் வா!” என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, நீங்கள் அத்துணை பேரும் தெளிவாக இருந்து வீடுதோறும் சொல்லுங்கள் – நாம் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் – கிளர்ச்சியில் நம்பிக்கை இல்லாதவர்கள்.
அறிவார்ந்த பிரச்சாரம், களம் என்பன இரண்டுமே மிக முக்கியம் வாய்ந்தவையாகும்.

பாசறை வீரர்களாகத்தான் இங்கே இருந்து நீங்கள் திரும்புகிறீர்கள்!

தயாராகிற உங்களை ஆளாக்கிக் கொள்கின்ற பாசறை வீரர்களாகத்தான் இங்கே இருந்து நீங்கள் திரும்புகிறீர்கள்.
ஒவ்வொருவரும் மற்றவர்களைத் தயாரித்துக் கொள் ளுங்கள்; பெற்றோருக்கு நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள் – பொதுமக்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள்

வெற்றி நமதே!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

 

No comments:

Post a Comment