“அயோத்தி ராமன் கோவில் தினமும் ஒரு மணிநேரம் மூடப்படும்” என்று தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். “கோவில் கருவறையில் உள்ள குழந்தை வடிவ ராமனுக்கு 5 வயது தான் ஆகிறது. காலை 4 மணிக்கு தூக்கத்தில் கண்விழிக்கும் அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருக்க முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமன் கோவில் கட்டப்பட்டுள்ளது. நாகரா கட்டடக்கலை நுட்பத்தில் சிற்ப தூண்களுடன் ராமன் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் குடமுழுக்கும் நடந்தது.
22.1.2024 அன்று மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் நடந்த குட முழுக்கில் பிரதமர் மோடி பங்கேற்று கோவிலில் நிறுவப்பட்டுள்ள 5 வயது பால ராமர் சிலைக்கு சடங்குகள் செய்து வைத்தார். அதன்பிறகு சிலையின் கண்கள் திறக்கப் பட்டன. தற்போது பக்தர்கள் கோவிலில் ‘தரிசனம்’ செய்து வருகின்றனர்.
கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள இந்த 5 வயது பால ராமன் சிலையை கருநாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செய்துள்ளார். 51 அங்குல உயரம் 200 கிலோ எடையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமன் விஷ்ணுவின் அவதாரமாக உள்ளார். இந்நிலையில் தான் ராமன் சிலையை சுற்றி விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் சிற்பமாக இடம் பெற்றுள்ளன.
குடமுழுக்கன்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் படவில்லை. பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். அதன்பிறகு ஜனவரி 23ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில் அருகே குவிந்து தரிசனத்துக்கு தயாராகி விடுகின்றனர்.
இந்நிலையில் தான் “தினமும் அயோத்தி ராமன் கோவில் ஒரு மணி நேரம் மூடப்படும்” என கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அயோத்தி ராமன் கோவிலில் உள்ள ராமன் 5 வயது குழந்தையாக இருக்கிறார். அவரால் நீண்ட நேரம் கண்விழித்து இருக்க முடியாது. அவருக்கு ஓய்வு என்பது வழங்கப்பட வேண்டி உள்ளது.
இதனால் கோவில் கதவுகளை தினமும் ஒருமணிநேரம் மூடி வைக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதன்படி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை கோவில் கதவுகள் சாத்தப்பட்டு குழந்தை ராமனுக்கு ஓய்வு அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து புத்தியைப் பயன்படுத்தும் எவருக்கும் சில கேள்விகள் இயல்பாகவே எழும்.
(1) கடவுளுக்கு உருவம் கிடையாது என்று சொல்பவர்களுக்கு ராமன் சிலை எங்கிருந்து வந்தது?
(2) பாலராமருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. குழந்தை ராமன் என்பதால் அவரால் கண் விழித்து இருக்க முடியாதாம். அதனால் மதியத்தில் ஒரு மணி நேரம் ஓய்வு தேவைப்படுகிறதாம்!
இப்படியாகக் கதைகள் நீண்டு கொண்டு போகின்றன. அதுவோ சிலை – கண் விழித்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால் இடையில் ஒரு மணி நேரம் ஓய்வு தேவைப்படுகிறதாம். ஓய்வு என்றால் பக்கத்தில் படுத்துறங்க ஏதாவது கட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? நட்ட கல்லு உருவம் அப்படியேதானே இருக்கிறது – இதில் கண் விழிப்பு – ஓய்வு என்பது எல்லாம் எங்கிருந்து குதித்தது?
“நட்ட கல்லும் பேசுமோ” என்று பத்திரகிரியார் என்ற சித்தர் பாடினார்.
கடவுளுக்கு உயிர் கொடுப்போர் யார்? எண்ணற்ற சிலைகளை உருவாக்கி வரலாறு படைத்த பிரபல சிற்பி கணபதிஸ்தபதி என்ன கூறுகிறார்?
“ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்கிறாங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படறீங்க? நீங்க, அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டுவரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்குறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?”
(பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி, 11.6.2006 ‘கல்கி’ இதழில்),
கடவுளை உண்டாக்கியவர்கள் யார்? என்று இப்பொழுது விளங்குகிறதா?
No comments:
Post a Comment