அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 10, 2024

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை

featured image

‘‘ஆயுதமும், காகிதமும் பூஜை செய்வதற்கு அல்ல; அது புரட்சி செய்வதற்கு’’ என்று சொன்னது மட்டுமல்லாமல், தான் வாழ்ந்து மடியும்வரை ஆயுதத்தைக் கையில் எடுக்காமல், தன்னுடைய கொள்கைகளின் மூலமாகப் புரட்சி செய்தவர் தந்தை பெரியார்!
‘‘அவரவர்களுக்கான இருக்கைகள் இருக்கிறது; சுயமரியாதையோடு, தன்மானத்தோடு அதில் அமருங்கள்’’ என்று சொன்னவர் தந்தை பெரியார்!
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்விழாவும் அதைத்தான் நிலைநாட்டி இருக்கிறது!

சென்னை, பிப்.10 ‘‘ஆயுதமும், காகிதமும் பூஜை செய் வதற்கு அல்ல; அது புரட்சி செய்வதற்கு’’ என்று சொன்னது மட்டுமல்லாமல், தான் வாழ்ந்து மடியும்வரை ஆயுதத்தைக் கையில் எடுக்காமல், தன்னுடைய கொள்கைகளின் மூலமாகப் புரட்சி செய்தவர் தந்தை பெரியார் அவர்கள். ‘‘அவரவர்களுக்கான இருக்கைகள் இருக்கிறது; சுயமரியாதையோடு, தன்மானத்தோடு அதில் அமருங்கள்’’ என்று சொன்னவர் தந்தை பெரியார். இந்தப் பள்ளியின் பொன்விழாவும் அதைத் தான் நிலைநாட்டியிருக்கிறது என்றார் தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்விழா ஆண்டு!
கடந்த 8-2-2024 அன்று மாலை திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழா ஆண்டு விழாவில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கம்.
‘‘If you want your criticism say nothing, do nothing, be nothing” என்று அரிஸ்டாட்டில் சொல்வார்.
‘‘விமர்சனம் உனக்கு வரக்கூடாது என்று நினைத்தால், எதுவும் சொல்லாதே, எதுவும் செய்யாதே, எதுவுமே இல்லாத மாதிரி இரு” என்று சொல்வார்.
அதை முறியடித்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
இங்கே மேடையில் அனைவருக்கும் விருதுகள் வழங்கும்பொழுது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது.
எங்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து, எங்களுக்கும் விருதுகள் வழங்கவில்லையே ஆசிரியர் அவர்கள் என்று நினைத்தேன்.

பள்ளி பொன்விழா ஆண்டு விழாவில் கலந்துகொள்வதே விருதுதான்!
அவர் சொல்லாமல் சொல்வது என்பது, ‘‘இந்த ஆண்டு விழாவில் நீ கலந்துகொள்கிறாயே, அதுவே உனக்கான விருதுதான்” என்பதை சொல் லாமல் சொல்கிறார் என்றுதான் நான் நினைக் கின்றேன்.
அந்த வகையில், இங்கே உரையாற்றி அமர்ந்திருக் கின்ற, எங்களுடைய திருச்சி மாவட்டத்தில், எங்களை யெல்லாம் வழிநடத்திக் கொண்டிருக்கின்ற மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் அவர்களே,
வணக்கத்திற்குரிய மேயர் அண்ணன் அன்பழகன் அவர்களே, மண்டல குழுவின் தலைவர் அண்ணன் மதிவாணன் அவர்களே,
தலைமை ஆசிரியை அவர்களே, இங்கே பல்வேறு விருதுகளைப் பெற்று அமர்ந்திருக்கின்ற திலகவதி அம்மையார் அவர்களே, ராசாத்தி அம்மையார் அவர் களே, விஜயலட்சுமி அம்மையார் அவர்களே,
‘‘பர்ஸ்ட் ஸ்டூடண்ட் ஆஃப் தி ஸ்கூல்” என்று இன்று பெருமையோடு வந்து நின்று விருதை பெற்றிருக்கின்ற தங்காத்தாள் அம்மா அவர்களே,
மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அண்ணன் சேகர் அவர்களே, அண்ணன் ஆரோக்கியராஜ் அவர்களே,
இங்கே வருகை தந்திருக்கின்ற –
இந்த விழாவில் நாங்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று எங்களை அழைத்தபோது, குறிப்பாக வந்தே ஆகவேண்டும் என்று சொன்ன எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் அன்புராஜ் அவர்கள் உள்ளிட்ட மேடையில் இருக்கின்ற அனைத்து சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றைக்குமே மாணவன்தான்
ஆசிரியரை வரவேற்கவேண்டும்!
ஒரு பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இவ் விழாவில் நான் பங்கு பெறவேண்டும் என்கின்ற வேண்டுகோளை அவர்கள் வைத்தார்கள் என்று சொன் னாலும், ஆசிரியர் அவர்கள் வருவதற்கு முன்பே நான் இங்கே வந்துவிட்டேன்.
எனக்குத் தொலைப்பேசியில், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அவர்கள், ‘‘ஆசிரியர் கிளம்பிட்டாருப்பா, நீ சீக்கிரம் போ” என்று சொன்னார்கள்.
ஆசிரியர், வேனிலிருந்து இறங்கும்பொழுதே சொன் னார்கள், ‘‘நான் அல்லவா உங்களை வரவேற்கவேண்டும்; நீங்கள் வரவேற்கிறீர்களே?” என்று.
‘‘என்றைக்குமே மாணவன்தான் அய்யா ஆசிரியரை வரவேற்கவேண்டும்” என்று நான் சொன்னேன்.

இது எங்களுடைய பள்ளி – எங்களுடைய வீடு என்கிற பெருமையோடுதான்…
அப்படி ஒரு பெருமையோடு நடைபெறுகின்ற ஒரு நல்ல நிகழ்ச்சி. இங்கே மாண்புமிகு அமைச்சர் அண்ணன் சொன்னதைப்போல, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக ஏறத்தாழ 32 மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆண்டு விழாக்களில் நாங்கள் கலந்துகொண்டிருக்கின்றோம் என்று சொன்னாலும், இந்தப் பள்ளியின் பொன்விழாவில் கலந்துகொள்வது என்பது – இது எங்களுடைய பள்ளி – எங்களுடைய வீடு என்கிற பெருமையோடுதான் நான் இவ்விழாவில் கலந்துகொள்கிறேன்.

‘‘தந்தை பெரியார்
என்ன செய்தார்?’’ என்று
கேட்பவர்களுக்கு நம்முடைய பதில்!
எல்லோரும் கேட்கிறார்கள், ‘‘தந்தை பெரியார் என்ன செய்தார்?” என்று.
தந்தை பெரியார், தமிழர்களை தலைநிமிர வைத்தார்!
தந்தை பெரியார், தமிழர்களைப் படிக்க வைத்தார்!
தந்தை பெரியார், தமிழை வாழ வைத்தார்!
தந்தை பெரியார், தமிழர்களை ஆள வைத்தார்!
தந்தை பெரியார், பிற்போக்குச் சக்திகளை யெல்லாம் விரட்டி விட்டு, அதற்கான புரட்சியைச் செய்தார் என்று தந்தை பெரியாரைப்பற்றி நாம் சொல்லலாம்.
அதேபோன்று, அன்னை மணியம்மையாரைப் பற்றி நாம் சொல்லவேண்டும் என்று சொன்னால், தன்னுடைய இளம் வயதிலேயே, சுயமரியாதை உணர்வை அனைத்து மக்களுக்கும் அதனைக் கொண்டு செல்லவேண்டும் என்கிற விதத்தில், தொடர்ந்து வீரியத்துடன் பல்வேறு போராட்டங் களில் கலந்துகொண்டவர்.

தன்னுடைய கொள்கைகளின் மூலமாகப் புரட்சி செய்தவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியார் சொல்வார், ‘‘ஆயுதமும், காகிதமும் பூஜை செய்வதற்கு அல்ல; அது புரட்சி செய்வதற்கு” என்று சொன்னது மட்டுமல்லாமல், தான் வாழ்ந்து மடியும்வரை ஆயுதத்தைக் கையில் எடுக்காமல், தன்னு டைய கொள்கைகளின் மூலமாகப் புரட்சி செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
நான், பல்வேறு ஆண்டு விழாக்களில் பங்கேற்கும் போது சொல்வேன் – இன்றைக்குக்கூட இவ்வாண்டு விழாவில், நம்முடைய மாணவச் செல்வங்கள் கலை விழாக்களை நடத்தி, பல்வேறு பரிசுகளைப் பெற்றார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் பெருமையோடு
எடுத்துச் சொல்வோம்!
‘‘வீட்டில் ஒரு பெண் பிள்ளை படிக்கின்றார் என்று சொன்னால், அவரைச் சுற்றி இருக்கின்ற அந்த ஊரும், நாடும் வளர்ச்சியடையும்” என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார்.
இன்றைக்கு ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் எடுத்துக்கொண்டால், உயர்கல்வித் துறையில் படிக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 35.7 மில்லியன். இதில், மாணவிகள் 16.7 மில்லியன். இதைத்தான் தந்தை பெரியார் செய்தார் என்பதை நாங்கள் பெருமையோடு எடுத்துச் சொல்வோம்.
இன்றைக்குக் குடிமைப் பணிகளைப்பற்றிச் சொல் கின்றோம். அது அய்.ஏ.எஸ். பணியாக இருந்தாலும் சரி, அய்.பி.எஸ். பணியாக இருந்தாலும் சரி – அவையெல்லாம் முதன்மையாகக் கருதக்கூடியவை.
இதில், நம்முடைய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிள்ளைகள் தேர்ச்சி பெறவேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள்தான் முதலாவதாகவும், அதிகமாகவும் வந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் நமக்கான பெருமையாகக் கருதுகின்றேன்.

பெண்களை ஒரு நாடு தவிர்த்தது என்று சொன்னால், அந்நாடு வளர்ச்சியடையாது!
பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் சொல்வது என்னவென்றால், பொருளாதாரமாக இருந்தாலும் சரி, வணிகமாக இருந்தாலும் சரி, தொழில் துறையாக இருந் தாலும் சரி – இதில் பெண்களை ஒரு நாடு தவிர்த்தது என்று சொன்னால், அது வளர்ச்சியடையாது என்று தெளிவாகத் தெரியும். இன்றைக்கு உள்நாட்டு உற்பத்தியில், மிகவும் பின்தங்கித்தான் இருக்கிறது. இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்.
இன்றைக்கு யூரோப்பில் உள்ள நாடுகளை எடுத்துக் கொண்டால், பெண்களுக்கு அதிகப்படியான முக்கித் துவம் கொடுத்து, பெண்களை அதிக இடத்தில் பயன் படுத்துகிறார்கள் – அதனால், உற்பத்தியினுடைய அளவு 10 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.

‘‘அவரவர்களுக்கான இருக்கைகள் இருக்கிறது; சுயமரியாதையோடு, தன்மானத்தோடு அதில் அமருங்கள்”: தந்தை பெரியார்!
ஆகவே, பெண்களாக இருக்கக்கூடிய நீங்கள் பெருமைப்படக்கூடியது நீங்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாடும் உங்களால் வளர்ச்சி பெறுகிறது. இதனால், உங்களைத் தவிர்க்க முடியாது; அந்தத் தவிர்க்க முடியாத இடத்திற்கு நீங்கள் வருகை தந்திருக்கின்றீர்கள் என்று சொல்லும்பொழுது, இந்த விழா தொடங்கும்பொழுது, ‘‘தமிழ்த் தாய் வாழ்த்து” பாடுவதற்கு முன், மாணவிகள், ‘‘அவர வர்கள் உங்கள் இருக்கையில் அமருங்கள்” என்று சொன்னார்கள். அந்த இருக்கையில் அமருங்கள் என்று சொன்னார்கள் பாருங்கள், அது எங்கே இருந்து வந்தது என்று சொன்னால், தந்தை பெரியாரிடமிருந்துதான் வந்தது.
‘‘அவரவர்களுக்கான இருக்கைகள் இருக்கிறது; சுயமரியாதையோடு, தன்மானத்தோடு அதில் அமருங்கள்” என்று சொன்னவர் தந்தை பெரியார். இந்த விழாவும் அதைத்தான் நிலைநாட்டியிருக் கிறது.

தந்தை பெரியாரின் மிகப்பெரிய கனவு!
மாணவச் செல்வங்களே, வகுப்பறையில் படிப்பது மட்டும் கல்வியல்ல; அதையும் தாண்டியும் நீங்கள் பொது அறிவினை வளர்த்துக் கொள்ளவேண்டும். இது தந்தை பெரியார் அவர்களுடைய மிகப்பெரிய கனவாகும்.
மெக்சிகோவில் ஓர் அமைப்பு இருக்கிறது; அந்த அமைப்பினுடைய பணி, நுண்ணறிவினுடைய அறி வைத் தெரிந்துகொள்வதுதான். அந்த அமைப்பில் உறுப்பினராக சேரவேண்டும் என்று சொன்னால், ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் அதற்காகப் போட்டி போடுகிறார்கள். அந்த அமைப்பிற்குத் தேர்வு செய்யப்படும் எண்ணிக்கை வெறும் 250 பேர்தான்.
அந்த 250 பேர் சொன்னது என்றால், ‘‘வகுப்பறையில் கற்றுக்கொள்ளும் பாடங்களை நாங்கள் அடிப்படையாக வைத்துக் கொள்கிறோம். அதைத் தாண்டி எங்களுக்கு விருப்பமான பாடங்களை அதிகமாகப் படிக்கவேண்டும், தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், இதுபோன்ற அமைப்பில் உறுப்பினராக சேர்ந்ததால் அது சாத்திய மாகிறது” என்று சொன்னார்கள்.
‘‘யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், யாரும் எங் களுக்கு அறிவுறுத்தாமல், எங்களுக்கு என்ன பிடிக் கிறதோ, அதை நாங்கள் படிக்கின்றோம்” என்றார்கள்.

பெற்றோருக்கும் – ஆசிரியர்களுக்கும்
என்னுடைய வேண்டுகோள்!
பெற்றோர்களுக்கு நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால், உங்களுடைய பிள்ளைகளை, மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடாதீர்கள். உங்கள் பிள்ளை களுக்கு இருக்கின்ற அறிவு என்ன? திறமை என்ன? என்பதை கண்டுபிடிக்கவேண்டியதுதான் பெற்றோர் களுடைய பொறுப்பு – ஆசிரியர் பெருமக்களுடைய பொறுப்பாகும்.
இது ஒரு கூட்டுப் பொறுப்பாக இருக்கவேண்டும் என்று நான் எல்லா இடங்களிலும் வற்புறுத்துவேன். அதையே தான் நான் இங்கேயும் வலியுறுத்தக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

உலக அறிவையும்
நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்
இப்படித் தொடர்ந்து வகுப்பறையில் படிக்கின்ற படிப்பை மட்டுமல்லாமல், உலக அறிவையும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.
என்றைக்குப் பிறக்கிறோமோ அந்த நாளிலிருந்து இறக்கும் வரைக்கும் சுயமரியாதையோடு, தன்மானத் தோடு இருக்கவேண்டும் என்று தந்தை பெரியார் ஆசைப்பட்டார். அப்படிப்பட்ட அந்த தந்தை பெரியாரு டைய இந்த வளாகத்தில், இன்று உரையாற்றுகிறேன் என்பது எனக்குக் கிடைத்த பெருமை!
இந்தப் பெருமையை எனக்கு அளித்திருக்கின்ற ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இன்னும் கூடுதல் பெருமை.
ஏனென்றால், அவர் பிறந்து, 44 ஆண்டுகள் கழித்து, அதே நாளில் (2-12-1977) பிறந்தவன்தான் இந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அது எனக்குக் கூடுதலான பெருமை!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இன்னும் பெருமைகளை எடுத்துச் சொல்லவேண்டுமானால், இன்றைக்கு எங்களுடைய மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் உரை யாற்றும்பொழுது, ‘‘என்னுடைய சொந்த ஊருக்கு வந்த உணர்வோடு நான் உரையாற்றுகிறேன்” என்று சொன்னார்.
அந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நவம்பர் 27 ஆம் தேதிதான் – ஆசிரியர் அய்யா அவர்கள் திராவிடர் கழகத்தினுடைய தலைவராகப் பொறுப்பேற்றார்.
ஆகவே, இந்த ஒரு ஒற்றுமை என்றைக்கும், எங்களுக்கும், திராவிடர் கழகத்திற்கும் உண்டு என்கின்ற வகையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில், நான் தனிப்பட்ட பெருமையாகக் கருதுகின்றேன்.

‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும்
புரட்சிகரமான திட்டங்கள்!
அந்த வகையில், வருகை தந்திருக்கின்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது வாழ்த்துகள். ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டுவந்தி ருக்கும் திட்டங்கள் ஒவ்வொன்றும் புரட்சிகரமான திட்டங்களாகும்.
அதிலும் குறிப்பாக, ‘‘புதுமைப்பெண்” என்ற திட்டத்தை நாம் இன்றைக்கு எடுத்துச் சொல்லலாம். பெண்களுடைய கல்வியை நாம் எந்த அளவிற்கு உயர்த்தவேண்டும் என்பதை புரிந்துகொண்டிருப் பவர் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள். அதற்கு அடித்தளம் அமைத்தவர் தந்தை பெரியார்.
‘‘பெண்கள் அனைவரும் படிக்கவேண்டும் என்று சொன்னால், அதிகப்படியான பெண்கள் கல்லூரியை உருவாக்கவேண்டும்” என்று சொன்னவர் தந்தை பெரியார்.

படிப்பதில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்!
அந்த வகையில், ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவச் செல்வங்களுக்கு விடுக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால், ‘‘இந்த வயது என்பது, படிப்பு, படிப்பு, படிப்புதான். அதில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்; மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கின்றேன். முதலமைச்சராக இதை சொல்லவில்லை. உங்கள் தந்தையின் நிலையிலிருந்து இதைச் சொல்லுகின்றேன்” என்றார்.

ஆசிரியப் பெருமக்கள், இல்லை என்று சொன்னால், மேடையில் நிற்கின்ற நாங்கள் இல்லை!
அவருடைய எண்ணம், மாணவர்கள் நன்றாகப் படித்து, நல்ல இடத்திற்கு வரவேண்டும்; படித்த பள்ளியை, படித்த கல்லூரியை மறந்துவிடாதீர்கள். அதேபோன்று நம்முடைய பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்கள், அவர்கள் இல்லை என்று சொன்னால், மேடையில் நிற்கின்ற நாங்கள் இல்லை. ஆகவே, அவர்களையும் மறக்காதீர்கள்.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பள்ளியின் 50 ஆம் ஆண்டு விழா இன்று நடைபெறுகிறது. இன்னும் நூறாண்டைக் கடந்து செல்லவேண்டும்.

என்னால் முடிந்த அளவிற்கு…
இந்தப் பள்ளி வளாகத்திற்கு என்னால் முடிந்த அளவிற்கு நானும் நிச்சயமாக நற்பணிகளைச் செய்வேன் என்கிற உறுதிமொழியோடு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து என்னுரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment