தலைவன் யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

தலைவன் யார்?

featured image

நெப்போலியன் பிரெஞ்சு நாட்டிலே பெரிய தலைவனாகி பிரெஞ்சு நாட்டிற்கே பெரிய சக்கரவர்த்தியாகி அய்ரோப்பாக் கண்டத்திலே உள்ள பல நாடுகளையெல்லாம் தன்னுடைய நெரித்த புருவத்தினாலேயே கைப்பற்றினான். கடைசியிலே மிச்சமிருப்பது ரஷ்யா ஒன்றுதான். ‘ரஷ்யா மீதும் படை யெடுக்க வேண்டு’மென்றான். அவனுடைய தளபதிகள் அவனுக்குச் சொன்னார்கள்- ‘ரஷ்யா மீது படையெடுக்கலாம்; வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் இது மாரிக் காலம் – பனி பெய்கின்ற காலம், இந்த காலத்திலே கூடாது’ என்றார்கள்.

உடனே நெப்போலியன், மாரியும், கோடையும் உங்களுக்குத்தான் -எனக்கல்ல’ என்றான். அவர்களோ நீங்கள் மட்டும் ரஷ்யா மீது படையெடுப்பதானால் மாரியுமில்லை – கோடையுமில்லை. ஆனால், சாதாரண மக்களல்லவா சோல்ஜர்களாக இருக்கிறார்கள், இவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டுபோய் ரஷ்யாவை இந்தக் காலத்திலே பிடிப்பதென்றால் முடியாது – இது மாரிக் காலம்; மாரிக் காலத்திலே ரஷ்யாவில் கடும்பனி பெய்யும். பெரிய பெரிய பனிக்கட்டிகள் விழுந்து பாதைகள் அடைபட்டுப் போகும், இந்த நேரத்திலே நம்முடைய பட்டாளம் அங்கே போனால், பசியிலும் — பட்டினியினாலும் தாக்கப்படும், பாதைகளெல்லாம் கண்களுக்குத் தெரியாது. பயங்கரமான பள்ளங்களெல்லாம் பனியினாலே மூடப்பட்டிருக்கும்.

அது சாதாரணப் பாதையென்று உள்ளே போனால் படுபாதாளத்தில் படைகளெல்லாம் விழுந்துவிடும்’ என்று எவ்வளவோ புத்திமதி சொன்னார்கள்.
ஆனால், நெப்போலியனோ, நெரித்த புருவத்தோடு கேட்டான் – ‘பிரெஞ்சு நாட்டிற்கு நான் தலைவனா? நீங்கள் தலைவர்களா?’ என்று! ‘நீங்கள்தான் தலைவர்’ என்றார்கள். ‘அப்படியானாவ் வாருங்கள்’ என்று அழைத்தான் அவர் களும் சென்றார்கள்.
எவ்வளவு பேர் ரஷ்யா மீது படையெடுத்துச் சென்றார்களோ, அவர்களில் பத்தில் ஒரு பாகத்தினர் மட்டும் திரும்பி வந்தார்கள்; ரஷ்யாவைப் பிடித்து அல்ல – ரஷ்யாவிலிருந்து வெளியேறிவிட்டால் போதுமென்று ஓடி வந்தார்கள்.
(அறிஞர் அண்ணா சொன்ன “குட்டிக் கதைகள் 100” என்ற நூலிலிருந்து…)

No comments:

Post a Comment