தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு நாடாளுமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 11, 2024

தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு நாடாளுமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு

புதுடில்லி, பிப்.11 நாடாளு மன்ற நிதிநிலை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று (10.2.2024) தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் நாடாளுமன்ற தி.மு.க. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய் தனர். இலங்கை கடற் படையால் கடந்த 28 நாள் களில் மட்டும் 88 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் 12 மீன்பிடி பட குகள் சிறைபிடிக்கப்பட்டுள் ளன. இதுதொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் (9.2.2024) கடிதம் எழுதினார்.

இந்நிலையில், நாடாளு மன்ற நிதிநிலை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று, மக்களவையில் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு, தமிழ்நாடு மீனவர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி திமுக உறுப்பினர்கள் தாக்கீது கொடுத்திருந்தனர். அவை கூடியதும், ராமன் கோயில் கட்டப்பட்டது மற்றும் குழந்தை ராமன் சிலை பிராண பிரதிஷ்டை குறித்த தீர்மானத் தின் மீதான விவாதத்தை மக்களவை தலைவர் ஓம் பிர்லா தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் தமிழ்நாடு மீனவர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமெனவும், அதுதொடர்பான தாக்கீதுக்கு அனுமதி வழங்கவும் முழக்க மிட்டனர். இதற்கு மக்களவைத் தலைவர் அனுமதிக்காததால், அவையை புறக்கணித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதே போல, மாநிலங்கள வையில் வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் பேசிய மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் திருச்சி என்.சிவா, ‘‘ சென்னை வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய பா.ஜ. அரசு ஒரு ரூபாய் கூட நிதி தராமல் உள்ளது’’ என்றார். மேலும், ஒன்றிய பா.ஜ. அரசின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக திருச்சி சிவா கூறும் முன்பாகவே அவர் பேசுவது கேட்காமல் இருக்க மைக் அணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள்அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment