தமிழ்நாட்டில் நடந்து வந்த ‛”கேலோ இந்தியா” விளையாட்டுப் போட்டிகள் 31.1.2024 அன்று முடிவடைந்துள்ளன. இந்தப் போட்டிகளில் முதல் முறையாக தமிழ்நாடு பதக்கப் பட்டியலில் முதல் 3இல் இடம் பிடித்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் கூறியுள்ளதுடன், தமிழ்நாடு விளையாட்டுத் தலைநகராக மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கேலோ இந்தியா போட்டிகள் 31.01.2024 அன்று நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து சென்னையில் நிறைவு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு அமைய அனைத்துத் தகுதியும் உள்ளது. இதற்காக விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. கேலோ இந்தியா போட்டியின் பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு இந்த முறைதான் முதல் 3 இடத்திற்குள் வந்துள்ளது. இதற்கு திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.
முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களை கண்டறிய வாய்ப்பாக அமைந்தது. சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு மாறும். விளையாட்டு என்பதை இயக்கமாக தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது. குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமின்றி அனைவரும் விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.
மேலும் மணிப்பூரை சேர்ந்த வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கப்பட்டது. அதில் 2 பேர் பதக்கம் வென்றுள்ளனர்” என்றார்.
இந்த கேலோ இந்தியா போட்டியில் பதக்கப்பட்டியலில் மகாராட்டிரா முதலிடம் பிடித்தது. தமிழ்நாடு அணி 2ஆவது இடம் பிடித்து அசத்தியது. தமிழ்நாடு அணி சார்பில் 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 97 பதக்கங்களை வீரர், வீராங்கனைகள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“திராவிட மாடல்” அரசு என்றால் குறிப்பிட்ட துறைகளில், திசைகளில் அதன் சாதனை, முத்திரைப் பதிப்பு என்று சுருக்கிவிட முடியாது.
கல்வி, சமூகநீதி, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, பெண்கள் நலம் என்பது எல்லாம் முன்னுரிமை அளிக்கப்பட்டு முன் வரிசையில் முந்தி நிற்பது முற்றிலும் உண்மைதான்.
அதற்காக மற்றமற்ற துறைகளில் திராவிட மாடல் அரசு அக்கறை காட்டவில்லை என்று பொருளாகாது.
எடுத்துக்காட்டாக விளையாட்டுத் துறையில் புதிய மைல் கல்லைத் தொட்டு இருப்பதைக் கூறலாம்.
இன்னும் சொல்லப் போனால் வெறும் ஏட்டுப் படிப்புதான் கல்வி என்று எண்ணிவிடக் கூடாது விளையாட்டுத் துறையும் கல்வியைச் சார்ந்தது தான்.
விளையாட்டுத் துறை – என்.சி.சி. பயிற்சி என்பதெல்லாம் மாணவர்களின் சிந்தனையை வேறு தவறான பாதைகளிலிருந்து மடைமாற்றம் செய்வதே என்பதைக் கல்வெட்டில் செதுக்கிட வேண்டும்.
இந்தியாவே திராவிட மாடல் அரசாக மாற வேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கூறி வருவது கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும்!
No comments:
Post a Comment