சிறீநகர்,பிப்.28- மக்களவை தேர்தலில் பாஜவின் வெற்றி வாய்ப்பை குறைப்பதே இந்தியா கூட்டணியின் முக்கிய இலக்கு என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் காங்கிரஸ், பாஜ கட்சிகள் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. அதன்படி ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சியிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நேற்று (27.2.2024) செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் மொத்தம் 6 இடங்கள் உள்ளன. இதில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஜம்மு, உதம்பூர், லடாக் தொகுதிகளில் பாஜ வென்றது. சிறீநகர், பாரமுல்லா, அனந்த்நாக் தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி வென்றது. இப்போது ஜம்மு, உதம்பூர், லடாக் தொகுதிகளில் போட்டியிட தேசிய மாநாட்டு கட்சி முடிவு செய்துள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்து வருகிறோம். மக்களவை தேர்தலில் பாஜவின் வெற்றி வாய்ப்பை குறைப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம். கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பை குறைப்பது அல்ல என்பதால், காங்கிரசுடனான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படும். முதல் சுற்று பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் வைத்த முன்மொழிவுகளை தேசிய மாநாட்டு கட்சியின் மேலிடம் ஏற்கவில்லை. இதனால் விரைவில் 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment