பொழுது விடிந்து பொழுது போனால் கோயில் பஞ்சாயத்துத் தானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

பொழுது விடிந்து பொழுது போனால் கோயில் பஞ்சாயத்துத் தானா?

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள கோயிலில் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மசூதி தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
“மசூதி வளாகத்திற்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபடுவதற்கான உரிமையைக் கொடுப்பதால், மசூதியின் தன்மை கோயிலாக மாறாது” என தெரிவித்த நீதிபதி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் காவிகள் கூறுகின்றனர். மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை நாள்தோறும் வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மசூ திக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத்துறைக்கு (ஏ.எஸ்.அய்.) உத்தரவிட்டது. கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரிய வந்ததாம். ஆனால், அது நீரூற்றுப் பகுதி என்றும், தொழுகைக்கு வருபவர்கள் கை, கால் கழுவுவதற்காக அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது (ஒசுகானா) என்றும், மசூதி நிர்வாகம் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் தரைகீழ் தளத்தில் உள்ள மூடி முத்திரை வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை அலகாபாத் உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் தொடர்ந்து பூஜை செய்ய அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்துக்கள் வழிபடுவதால், மசூதியின் தன்மை மாறாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
பொழுது விடிந்து பொழுது போனால் இந்தக் கோயில் பஞ்சாயத்தே சரியாக இருக்கும் போல் தோன்றுகிறது.
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்கள் காசி ஞானவாபிதான் தங்களின் அடுத்த குறி என்றனர். அதனுடைய தொடர்ச்சிதான் இப்பொழுது காசி ஞானவாபி மசூதிப் பிரச்சினை.

தொல் பொருள் ஆய்வு கூறுகிறதாம் – ஞானவாபி மசூதிக்குக் கீழ் சிவன் கோயில் இருந்ததாம். 1947 ஆகஸ்டு 15இல் மத வழிபாட்டு நிலையங்கள் எந்த நிலையில் இருந்ததோ அது தொடரப்பட வேண்டும் என்று தனி சட்டம் இயற்றப்பட்டதே! (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991).
அதை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு “தடி எடுத்தவன் தண்டல்காரன்” என்ற நிலையில் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி கும்பல் நிர்வாண ஆட்டம் போடுவது சரிதானா? நீதிமன்றங்களும் அந்தச் சட்டத்தை மதிக்காமல் தலையாட்டிப் பொம்மைகளாக இருக்கலாமா?
அப்படிப் பார்க்கப் போனால் எத்தனை எத்தனையோ இந்துக் கோயில்கள் புத்த சமணப் பள்ளிகளை இடித்துக் கட்டப்பட்டுள்ளன என்பதற்கு ஏராள ஆதாரங்கள் உள்ளனவே! மயிலை சீனி வெங்கடசாமி அவர்களால் ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட ‘பவுத்தமும் தமிழும்’, “சமணமும் தமிழும்” என்ற நூல்களைப் படித்துப் பார்க்கட்டும்.
காஞ்சிபுரத்தில் பல இந்துக் கோயில்களும் தப்பாதே! (காமாட்சியம்மன் கோயில் உள்பட) “இந்துக்கள் வழிபடுவதால் மசூதியின் தன்மை மாறாது” என்று வாரணாசி நீதிமன்றம் கூறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பழனி கோயிலில் இந்துக்கள் அல்லாதார் உள்ளே வரக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளதே – ஏனிந்த முரண்பாடு?

No comments:

Post a Comment