நாளை (1-3-2024) நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியான தி.மு.க. ஆட்சியின் முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 71 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!
இது – வெறும் கட்சி விழா வாகவோ, அதிகாரவர்க்க விழாவாகவோ அல்லாமல், மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் மக்கள் விழாவாக இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அயலகத்தில் உள்ள நம் மக்கள் உள்பட அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடுகிறார்கள்.
காரணம், அவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாமனிதர் – செயற்கரிய செய்து நாளும் மக்களின் இதயச் சிம்மாசனத்தில் இடம்பெறுபவராக ஆகிவருகிறார்!
உள்ளத்தில் பொய்யாது ஒழுகுகிறார்!
அதன் காரணமாக, உலகத்தாரின் உள்ளத்தில் பாசத்துடன் இடம்பிடித்து தமது ஆட்சியை, வெறும் காட்சியாக அமைக்காமல்-
ஒடுக்கப்பட்ட கோடானு கோடி மக்கள் –
மக்கள் தொகையில் சரி பகுதி உள்ள பெண்கள் –
‘‘கல்வி பெற கதியில்லையே, காரணம் நம்மை வறுமை வாட்டுகிறதே; வாழ்வாதார வயிற்றுக் கஞ்சிக்கே வகை தேடித் திரியும் நிலையில், எப்படி நம் பிள்ளைகளைப் படிக்க வைப்பது!’’ என்று ஏங்கிய மக்களின் பிள்ளைகளுக்கு முந்தைய பகல் உணவு, சத்துணவு தாண்டி, காலைச் சிற்றுண்டியும் தந்து, ஒரு கல்விப் புரட்சியை – அமைதிப் புரட்சியாக்கி இந்தியாவிற்கே வழிகாட்டும் கல்வி வள்ளலாகி, கவலை போக்கும் காவல் ஆட்சித் தலைவராக நின்று, ‘‘ஆளும் இதயத்தை அன்பு நதியினில் நனைத்து ஆளும் நம் முதலமைச்சரை’’ அவர்களும் நாளும் வாழ்த்துகின்றனர்!
‘‘அய்யகோ, எங்கள் பெண் குழந்தைகள் உயர்கல்வியைப் பெற ஆசைப்பட்டும், அதைப் பெற்றுத் தரும் வசதி எம்மிடம் இல்லையே’’ என்று வருந்தி, கசிந்துருகி, கண்ணீர் விட்ட பெற்றோர் தங்கள் கண்ணீரைத் துடைத்து, ‘‘என்ன, மாதந்தோறும் ஆயிரம் ரூபாயா! அதுவும் எனது குடும்பத்திலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மூன்று பிள்ளைகளுக்கும் கூடவா!’’ என்று வியப்பின் விளிம்பில் நின்று இப்போது மகிழ்ச்சிக் கண்ணீர் வழிகிறது!
அவர்களும் வாழ்த்துகின்றார்கள், நன்றிப் பெருக்குடன்!
‘‘நாளெல்லாம் வீட்டில் மாடென உழைத்தும், அடுப்புப் புகையும், அவலக் கண்ணீரும்தானே நமக்கு மிஞ்சியது! அக்கம் பக்கத்தில் வாங்கிய கடனைக்கூட அடைக்க வழியில்லையே, மானம் காக்க நாம் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லையே’’ என்று கண்ணீரும், கம்பலையுமாய் இருந்த ஏழைக் குடும்பத் தலைவிக்கு, ‘‘மாதாமாதம் 1000 ரூபாய் வந்து வீட்டுக் கதவைத் தட்டுகிறதே’’ என்று உவகை பொங்கும் உள்ளத்தோடு உலவும் தாய்மார்களான
அவர்களும் வாழ்த்துகிறார்கள்!
புதிய புதிய தொழில் முதலீடுகளைத் தேடி, நாடிச் சென்றும், உலகத்தோரை இந்த ‘அமைதிப் பூங்கா’வாம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைத்து, வேதனையின் உச்சத்தில், வருந்திய விரக்தியில், வேலை கிட்டா ஆயிரக்கணக்கான நம் இளைஞர்களுக்குப் புதிய புதிய தொழில் வாய்ப்புகள் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று கிடைத்த மகிழ்ச்சியினால்
அவர்களும் வாழ்த்துகிறார்கள்!
சமூகநீதிக்காகப் போராட்டக் களத்தில் களமாடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை என்பதை நாளும் செயல்படுத்தி, அதற்கான வழிமுறை சட்டங்கள், ஆணைகள், ஆணைய அமைப்புகளோடு – இட ஒதுக்கீடு சரியாக செயல்படுகிறதா என்று கண்காணிக்கும் குழுவை நியமித்து, ஆய்வு செய்து, பிறகு ஆவன நடவடிக்கைக்கு ஆணை பிறப்பித்தல், சமூகநீதி இவ்வாட்சியில் வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ அல்ல – நிதர்சனமான உண்மை என்பதை உணர்ந்து, பயன்பெறும் பல்லாயிரம் தமிழ்நாட்டு இளைஞர்கள், படித்து வேலை வாய்ப்பற்று இருந்தவர்களுக்குக் கதவு திறக்கப்பட்டது.
அவர்களும் வாழ்த்துகிறார்கள்!
இவ்வளவு செய்ய, நமக்குரிய நிதியை ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு தராமல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களின் மழை வெள்ளக் கொடுமைக்கான நிவாரணத்தைக்கூட ஒரு ரூபாய் அளவில்கூடத் தராமல் – ஈரமற்ற இதயத்தோடு, ‘‘தமிழ்நாடு அரசு எப்படி நடக்கிறது, பார்க்கிறோம்‘’ என்று நிதிக் குரல்வளையைப் பிடித்து வஞ்சித்தாலும், தமது பொறுமையும், பொறுப்பும் அமைந்த அவரது அணுகுமுறையால், ‘‘எதிர்நீச்சலிலும் எப்போதும் வெற்றி பெறுவேன். அது எனது தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞரிடம் நான் கற்ற துணிச்சலின் அணுகுமுறை’’ என்பதை வழிமுறையாகக் காட்டி, கோபம் நிறைந்த வேகம் காட்டவேண்டிய தருணத்தில் கூட பொறுமையுடன், ‘‘விவேகமே வெற்றி தரும்‘’ என்ற தனது ராஜதந்திரம் (Statesmanship) மூலம், மலையாய் வந்த சோதனைகளைப் பனியாய் உருகிப் போகச் செய்து, அவர் ஆளும் நேர்மை, நேர்த்தியைச் சான்றோர்களான பொது மனிதர்களும் பாராட்டுகிறார்கள்!
ஆம் அவர்களும் வாழ்த்துகிறார்கள்!
இப்படி மாமழையெனக் குவியும் வாழ்த்துகளையும் கண்டு அவர் உற்சாகமாகியுள்ளார்!
வசவுகளைக் கண்டு மேலும் உழைக்க உறுதிமேல் உறுதி கொண்டு, உழைப்பின் உருவமாக உலா வருகிறார்!
‘‘கடமையாற்றிக் காலத்தை வெல்லும்‘’ எங்கள் காவலரே, முதல்வரே, வாழி! வாழி!! பல்லாண்டு நலமுடன் வாழி, என்று நாமும் வாழ்த்துகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29-2-2024
No comments:
Post a Comment