தமிழ்நாட்டில், முன்சீப் நியமனங்களிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது!
முன்சீப்பை யார் தேர்வு செய்கிறார்களோ, அந்தத்
தேர்வுக் குழுவில், 69 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை!
எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் சமூகநீதியாகும்!
சென்னை, பிப்.3 தமிழ்நாட்டில், 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது. முன்சீப் நியமனங்களிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், முன்சீப்பை யார் தேர்வு செய்கிறார்களோ, அந்தத் தேர்வுக் குழுவில், 69 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை. ஆகவே, தேர்வுக் குழுவில், எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும். தேவைப் பட்டால், சுழற்சி முறையில்கூட இருக்கலாம் என்றார் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள்.
“தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும் – சமூகநீதியும்! சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!”
கடந்த 27.1.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் “தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும் – சமூகநீதியும்! சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!” என்ற தலைப்பில் நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அப்படி சொல்லிவிட்டு,
‘‘Thus, the recommendations of the Committee on this subject are purely in the public interest; the Judiciary may look into them as Vox populi, the voice of the people.”
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘எனவே, இந்த விஷயத்தில் குழுவின் பரிந்துரைகள் முற்றிலும் பொது நலனுக்காக உள்ளன; நீதித்துறை அவற்றை மக்களின் குரலாகவே பார்க்கக்கூடும்.”
ஆனால், அதை யாரும் பார்க்க மாட்டார்கள். உயர் நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ இன்னுங்கூட அந்தப் பார்வை கிடையாது.
1950 ஆம் ஆண்டிலிருந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர்தான்!
உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் இருக்கிறார்கள். அதில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகளை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டிலிருந்து முதலில் ஜஸ்டிஸ் வரதராஜன் போனார்; அடுத்ததாக ஆந்திரா விலிருந்து இராமசாமி போனார்; மூன்றாவதாக மேற்கு வங்காளத்திலிருந்து ஒருவர் போனார். நான்காவதாக கேரளாவிலிருந்து பாலகிருஷ்ணன் போனார். நான்கு பேர்தான் 1950 ஆம் ஆண்டிலிருந்து இருந்தார்கள்.
பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்களை எடுத் துக்கொண்டால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முதல் நீதிபதி இரத்தினவேல்பாண்டியன் அவர்கள்.
முதல் ஏ.சி. ஜட்ஜ் ஃப்ரம் தமிழ்நாடு
முதல் பி.சி. ஜட்ஜ் ஃப்ரம் தமிழ்நாடு
முதல் உமன் பி.சி. ஜட்ஜ் ஃப்ரம் தமிழ்நாடு – நீதிபதி பானுமதி.
பெண் நீதிபதிகள் அதிகமுள்ள
மாநிலம் தமிழ்நாடு!
இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அதிகமாக பெண்கள் நீதிபதிகளாக உள்ள மாநிலம் தமிழ்நாடும் – பஞ்சாபும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.
பஞ்சாப், அரியானா, சண்டிகர் மூன்றையும் சேர்ந்த உயர்நீதிமன்றம் பஞ்சாப் உயர்நீதிமன்றம்.
சமூகநீதிக்காக, சமூகப் பன்முகத்தன்மை வேண்டும். பார்லிமெண்ட்டரி கமிட்டியில் ஒருவர்தான் உரக்கப் பேசியிருக்கிறார். அதை பதிவு செய்திருக்கிறார். அவர் தான் பி.வில்சன் எம்.பி..
சமூகநீதி வேண்டும் என்று நான் மட்டும் சொல்ல வில்லை; பார்லிமெண்ட்டரி கமிட்டி சொல்கிறது. அதுதான் அரசமைப்புச சட்டத்தினுடைய நோக்கமாகும்.
‘‘சமூகநீதியை நாம் அடையாமல் போனால், அரசியல் நீதியை இழந்துவிடுவோம்!‘’
சமூகநீதி அடையாமல் போனால் என்னாகும் என்று, 25.11.1949 ஆம் நாளில் அம்பேத்கர் அவர்கள், ‘‘சமூக நீதியை நாம் அடையாமல் போனால், அரசியல் நீதியை இழந்துவிடுவோம்” என்று சொல்கிறார்.
அப்படிப் பார்க்கும்பொழுது இங்கே இருக்கக்கூடிய செலக்ஷன் கமிட்டியில், பட்டியல் இனத்தவரும், சிறுபான்மை சமுகத்தவர்களும் இருக்கவேண்டும்.
பட்டியல் இனத்தில், சீனியர் ஜட்ஜ் வேல்முருகன் இருக்கிறார்; வாச்சாத்தி தீர்ப்புக் கொடுத்தவர். சரவணன் என்ற ஒருவர் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நிறைய பேர் இருக்கிறார்கள்; அதேபோன்று சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சமுகத்தைச் சேர்ந்த நீதிபதி குத்தூஸ், அண்மையில் ஒருவரையும் நியமித் திருக்கிறார்கள். கிறித்துவ சமுதாயத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் சந்திரா, நிஷா பானு ஆகிய நீதிபதிகள்.
இந்த சிறப்புக் கூட்டத்தினுடைய நோக்கம்!
நீதிபதிகள் இருக்கிறார்கள்; ஆனால், ஏன் அவர்களை நியமிக்கவில்லை? இதைத்தான் நாம் கேள்வியாகக் கேட்கிறோம்.
இவர்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று நாம் கேட்பது நியாயமானது; சமூகநீதியின்பாற்பட்டது; இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம் அதனை வலியுறுத் துவதுதான்.
பார்ப்பனர்களை நியமிக்கக்கூடாது என்பதல்ல நமது நோக்கம்; நான்கு பேரில், இரண்டு பார்ப்பனர்களை நியமிப்பது தவறு. ஏற்கெனவே அவர்கள் 9 பேராக இருப்பதும் தவறு. இத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு பார்ப்பனர்கள் யாரையும் நியமிக்கக் கூடாது.
மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஆகவில்லை!
ஏனென்றால், அவர்களுடைய சதவிகிதம் என் னவோ அந்த அளவிற்கு நியமிக்கலாம். அதிகபட்சமாக 5 பார்ப்பனர்களை நியமிக்கலாம்; 9 பேர் என்பது இரண்டு மடங்கு அல்லவா? மொத்தத்தில் அவர்கள் 3 சதவிகிதத்திற்கும் கீழேதான் உள்ளனர்.
இன்னும் தமிழ்நாட்டில் உள்ள மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஆகவில்லை.
நான் சொல்லுகின்ற தகவல் உங்களுக்கு ஆச்சரி யமாக இருக்கும். யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் வழக்குரைஞராக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியானது 2017 ஆம் ஆண்டுதான் – புகழேந்திதான் முதல் நீதிபதி.
ஆச்சாரியார் சமுதாயத்தில் உள்ள வழக்குரைஞர்கள் யாரும் உயர்நீதிமன்ற நீதிபதியாகவில்லை.
நான் சொல்வது வழக்குரைஞராக இருந்து, உயர்நீதி மன்ற நீதிபதி ஆகவில்லை என்றுதான் சொல்கிறேன்; மாவட்ட நீதிபதியாக இருந்து என்று சொல்லவில்லை.
69 சதவிகித இட ஒதுக்கீடு இருப்பதால்…
மாவட்ட நீதிபதியாக இருந்து, உயர்நீதிமன்ற நீதிபதி யாக வருவார்கள்; ஏனென்றால், 69 சதவிகித இட ஒதுக் கீடு இருப்பதால். வழக்குரைஞராக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆவதற்கு பல சமுதாயத்தினருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
வன்னியர் சமுதாயத்திற்கு 1862 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரை மொத்தம் மூன்று பேர்தான். முதல் நீதிபதி கே.எம்.நடராசன், இரண்டாவது குல சேகரன், மூன்றாவது கிருபாகரன்.
அந்த சமுதாயத்தினர் போராட்டம் நடத்துவதை யொட்டி, அந்த சமுதாயத்தினரைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர் நீதிபதிகளாக உள்ளனர்.
அப்படியானால், யார் போராட்டம் நடத்துகிறார்களோ, அவர்களுக்குத்தான் வாய்ப்புக் கிடைக்கிறது.
பட்டியலின சமுதாயத்தினர் போராட்டம் நடத்துவ தால், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக மூன்று பேர் இருக்கின்றனர் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
சமூகநீதிக்காகப் போராட்டம் நடத்தினால்தான், ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும்!
நாமும் போராட்டம் நடத்தினால்தான், இந்தக் கமிட்டியில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அந்தப் போராட்டம்தான் – சமூகநீதிக்கான போராட்ட மாகும். திராவிடர் கழகத்தினுடைய இந்த சிறப்புக் கூட்டத்தினுடைய செய்தி சென்று, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இப்படி யெல்லாம் செய்தால்தான், ஒரு நியாயம் கிடைக்கும் என்று சொன்னார் அவர்.
இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஓரிரு நாள்களில் செய்திருந்தார்கள். இந்தக் கூட்டத்திற்கான அறிவிப்பு நேற்று மாலை ‘விடுதலை’யில் வெளிவந்தது. இன்று காலையில் வெளிவந்துள்ள ‘முரசொலி’யிலும் வெளிவந்தது. ஆளுங்கட்சியினுடைய பத்திரிகையிலும் இந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது.
அப்படியென்றால், நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகமும் – இந்தக் கூட்டத்தின் அறிவிப்பை வெளியிட்டிருப்பதன்மூலமாக, உயர்நீதிமன்றத்திற்குத் தகவல் சொல்லியிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஆசிரியர் அய்யா வேண்டுகோள்!
ஆசிரியர் அய்யா அவர்களும் அறிக்கையின் வாயி லாக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
‘‘உயர்நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத் தைச் சார்ந்தவர்களோ, சிறுபான்மை சமூகத்தவர் களான முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அல்லது மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்களாகவோ இல்லாதது – மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு உரியது. அவர்களுக்கு சமூகநீதிப்படி நியாயம் கிடைத்து போதிய எண்ணிக்கையில் பதவிகள் பெறுவார்களா?
இந்நிலையில் விகிதாசார கணக்கு விகிதப்படி சார்பு நிலை இல்லாமல் நேர்காணல் மூலம் தேர்வுகள் நடைபெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுமோ என்ற சந்தேகம் பெரிதாக பலரிடமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும் நிலை உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!
சொந்த விருப்பு – வெறுப்பில் அல்ல!
தனிப்பட்ட முறையில் நமக்கு எந்த உள் நோக்கமோ, குறிப்பிட்டவர்கள் தேர்வாக வேண் டும் என்ற சொந்த விருப்பு, வெறுப்பு ஒட்டியோ இல்லாமல் பொது நோக்கத்தோடு இதனை நமது பெருமைக்குரிய மதிப்பிற்குரிய மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களின் மேலான பார் வைக்கு உரிய திருத்த நடவடிக்கை அவசரத் தேவை என்ற அடிப்படையில் சமர்ப்பிக்கின்றோம்.
ஓர்ந்து கண்ணோடாது தலைமை நீதிபதி கவனிப்பார்களாக!
தற்போதுள்ள தலைமை நீதிபதி அவர்கள் வந்து பொறுப்பேற்றுள்ள நிலையில், சமூகநீதி மண் இது என்பதை நன்கு உணர்ந்தவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி சமூகநீதி வழங்குதல் என்பது அதன் மாற்றப்படவே முடியாத அடிக் கட்டுமானம் என்பதை நன்கு அறிந்தவர். நியாயம் வழங்குவதில் “அனைவருக்கும் அனைத்தும்” கிடைக்கும் வண்ணம் ஓர்ந்து கண்ணோடாது நடந்து கடமையாற்றும் கண்ணியமிக்க நீதியரசர் ஆவார்.
ஆகவே, இந்த நிலைமையில் உடனே தலையிட்டு, மற்ற நீதிபதிகளுக்கும் – தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இதர பிற்படுத்தப்பட்ட மகளிர், மைனாரிட்டிகளின் பிரதிநிதித்துவம் தந்து 10, 12 நாள்களுக்கும் இந்த நான்கு பேர்களாக மட்டும் பங்கேற்பார்கள் என்ற நிலையில்லாமல், பலரையும் இணைத்து பல்வேறுபட்ட சமூகத்தவர் குறிப்பாக – “அனைவருக்கும் அனைத்தும்“ என்ற நிலைதான் ‘சமூகநீதி’ என்பதற்கொப்ப, மேலும் ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையிலோ அல்லது அவரது மேலான சிந்தனைக்கு ஏற்ப மாறுதலை உடன டியாகச் செய்ய வேண்டுகிறோம். சமுகநீதி என் பது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமை என்பதாலும் – வேண்டு கோளாகவும் வைக் கின்றோம்!
மூன்று சதவிகிதம் உள்ளவர்களிலிருந்து 4-க்கு 2 நீதிபதிகளா?
மக்கள் தொகையில் வெறும் 3 சதவிகிதத்தவரில் இரண்டு நீதிபதிகள் – அதிலும் ஒருவர் பிரச்சினைக் குரியவராகவே மக்கள் மன்றத்தில் உணரப்படுபவர் ஆவார். Diversity is the Necessity என்பதைப் பல முறை நீதிபதிகள் நியமன கொலிஜியத்தின் பரிந்துரைகளில் வெளிப்படையாக கூறியுள்ளது உச்சநீதிமன்றம். பல்லாண்டுக் காலம் பணியாற்ற வாய்ப்புள்ள பதவி நியமனத்தில் சமூகநீதிப் பார்வை அவசியம் அல்லவா!
பல ஆண்டுகள் பதவியில் இருக்கப் போகும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் போதிய அளவு (Adequate representation) தத்துவத்தை செயல்படுத்த, இந்த 4 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மாற்றப்பட்டு, மற்ற சமூக நீதிபதிகள் நியமனம் மூலம், உயர்நீதிமன்றத்தின் நீதி பரிபாலனத்தின்மீது நம்பிக்கை சிதையாமல் காக்க வேண்டும் என்று, சமூகநீதிப் பணியாளர்களின் குரலாக இதனை முன் வைக்கிறோம். இது அவசரம் – அவசியம்!” என்று ஆசிரியர் அய்யா அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில் தெரி வித்துள்ளார்.
முன்சீப்பை யார் தேர்வு செய்கிறார்களோ,
அதில் 69 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை!
மற்ற அரசியல் இயக்கங்கள்கூட, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை தவிர மற்றவர்கள் யாரும் இந்தக் கோரிக் கையை எதிர்க்கமாட்டார்கள். காங்கிரஸ்காரர்கள்கூட தமிழ்நாட்டில் எதிர்க்கமாட்டார்கள். வட மாநிலங்களில் அவர்களுடைய நிலைப்பாடு வேறாக இருக்கலாம். தமிழ்நாட்டில், 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது. முன்சீப் செலக்சனில் இருக்கிறது. ஆனால், முன்சீப்பை யார் தேர்வு செய்கிறார்களோ, அதில் அந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை.
31 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறதே, அது உயர் ஜாதிக்காரர்களுக்கு இல்லை, ஜெனரல். ஜெனரல் என்றால், யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
தேர்வுக் குழுவில், எல்லோருக்கும்
வாய்ப்பு வழங்கவேண்டும்!
ஆகவே, நாம் என்ன சொல்கிறோம் என்றால், அந்தத் தேர்வுக் குழுவில், எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும். தேவைப்பட்டால், சுழற்சி முறை யில்கூட இருக்கலாம். இப்படி செய்தால், குற்றச்சாட்டும் எழாது.
இந்தக் காலகட்டத்தில் மிக வேகமாக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டதினால்தான், இந்தக் கூட்டத்தினுடைய அறிவிப்புப்பற்றி ‘முரசொலி’க்கு அனுப்பி, அவர்களும் இது நல்ல செய்திதான், என்று ‘முரசொலி’யில் வெளியிட்டு, இன்றைக்குக் கூட்டத்தைக் கூட்டி, ஒரு நாள் இடைவெளியில், இவ்வளவு பேர் திரண்டிருப்பதே பெரிய விஷயம்தான்.
நேற்றைய ‘விடுதலை’ நாளிதழ் எனக்கு நாளைக் குத்தான் வரும். அப்படி இருக்கும்பொழுது, இந்தக் கூட்டத்தினுடைய அறிவிப்பு எவ்வளவு பேருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் என்று தெரியவில்லை. அப்படி இருந்தும், இவ்வளவு பேர் இங்கே வந்திருக்கிறீர்கள்.
பார்ப்பனரல்லாத நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் பேசுவார்கள்; வெளிப்படையாக வரமாட்டார்கள்!
பார்ப்பனரல்லாத நீதிபதிகள், எனக்குத் தனிப்பட்ட முறையில் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசு வார்கள். ஆனால், வெளிப்படையாக வரமாட்டார்கள்.
ஏனென்றால், நான் நீதிபதியாக இருந்தபொழுது, உயர்நீதித் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று மதுரையில் இரண்டு கூட்டங்கள் நடத்தினோம். முதல் கூட்டத்தில் நான் உரையாற்றினேன். இரண்டாவது கூட்டத்திற்காக ஒரு ஆளைத் தேடித் தேடி, பிறகு நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் வந்தார். இப்பொழுது ஏதோ ஒரு கமிட்டிக்குத் தலைவராக இருக்கிறார்.
‘‘நீங்கள் செய்வதெல்லாம் சரி;
உங்களுக்கு வாழ்த்துகள்” என்பார்கள்!
மற்றவர்கள் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, ‘‘பிரதர், நீங்கள் செய்வதெல்லாம் சரி; உங் களுக்கு வாழ்த்துகள்; ஆனால், நான் வரவில்லை; நான் அடுத்து பிராக்டீஸ் செய்யப் போகிறேன். எனக்கு அடுத்த சில பதவிகள் வேண்டும். ஆகவே, நான் வரவில்லை” என்று சொல்வார்கள்.
பலருடைய சிந்தனையைத்தான்
நாம் சொல்கிறோம்!
ஆனால், நம்மை எதிர்ப்பவர்கள் கிடையாது. நேற்றுகூட ஒருவர் தொலைப்பேசியில் என்னை தொடர்புகொண்டு, ‘‘என் கருத்து மட்டுமல்ல; நிறைய பேர் இதைத்தான் நினைக்கிறார்கள்; நீங்கள் பேசுங்கள்” என்று சொன்னார்.
அப்படியென்றால், பலருடைய சிந்தனையைத்தான் நாம் சொல்கிறோம். இந்தத் தகவல் தலைமை நீதிபதிக்குச் செல்லவேண்டும். உடனடியாக இதில் தலையிட்டு, மாற்றங்களைச் செய்யவேண்டும் அவர்.
மாவட்ட நீதிபதிகளுக்கான
நேர்காணல் தேர்வு!
ஏனென்றால், அடுத்ததாக மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு நடைபெற்று, அடுத்ததாக நேர்காணல் நடைபெறவிருக்கிறது. ஏனென்றால், மாவட்ட நீதிபதிகளிலிருந்து கணிசமானவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக வருவார்கள்.
முன்சீப் பதவியிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாக வருபவர்கள் குறைவுதான். வருவார்களா, என்று நிச்சயமாக சொல்ல முடியாது.
ஆனால், மாவட்ட நீதிபதியாக இருப்பவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதியாக நிச்சயமாக வருவார்கள்.
அதிலும் அரசியல் செய்யலாம். அவர்களுக்கு வேண்டியவர்களை சின்ன வயதிலேயே நியமிப்பார்கள்.
நான், சந்துரு ஆகியோர் நீதிபதியாகப் பொறுப்பேற்கும்பொழுது 55 வயது. ஆனால், இப்பொழுது அவர்களுக்கு வேண்டியவர்களை 46 வயதிலேயே நியமிக்கிறார்கள்.
அண்ணல் அம்பேத்கரின் சொல்கிறார்!
அம்பேத்கர் அவர்கள் உரையில் சொல்வார், ‘‘பார்ப்பனப் பிள்ளைகள் பிறக்கும்பொழுதே, உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளையும், உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளையும் காலியாக வைத்திருக்கிறார்கள்; நம்முடைய பிள்ளைகள் பிறக்கும்பொழுதே, அவர்களுக்கு ஸ்வீப்பர் போஸ்ட்டுகளை வைத்திருக்கிறார்கள்” என்பார்.
ஏனென்றால், என்னைப் போன்றவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்று, ஏழு ஆண்டுகள் பணியாற்றுவதே சிரமமாக இருக்கிறது. சந்துருவிற்கு ஆறரை ஆண்டுகள்தான்.
ஆனால், அவர்களுக்குப் பதினாறு ஆண்டுகள். உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆவார். அதற்கடுத்து உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆவார்.
எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் சமூகநீதியாகும்!
ஆகவேதான், இதுபோன்ற கமிட்டியில், தேர்வாளர்களாக இருக்கக்கூடியவர்களில் எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் சமூகநீதியாகும்.
இதனை வலியுறுத்துவதற்காக ஓர் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களுக்கும், இங்கே வந்திருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment