திரைப்படத்தில் பகுத்தறிவை ஊட்டிய முதலமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 29, 2024

திரைப்படத்தில் பகுத்தறிவை ஊட்டிய முதலமைச்சர்

featured image

அரசியல் மற்றும் திரைப்படம் ஆகியவை தமிழ்நாட்டில் பிரிக்க முடியாத கூறுகளாகும். திராவிட கட்சிகள் தங்கள் சித்தாந்தங்களை பரப்ப சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்திய வரலாற்றைக் கொண்டுள்ளன. மேடை நாடகங்கள் முதல் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் வரை கலைஞரால் வலுவாக எழுதப்பட்ட திரைக்கதைகள் தமிழ் அரசியல் வரலாற்றைக் கொண்டுள்ளன.

எம்.ஜி.ராமச்சந்திரனின் திரை ஆளுமை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது வெளிப்படையான ஒன்று. அன்று புகழ்பெற்ற நடிகர்களாக மாறிய அரசியல்வாதிகளின் வரலாறு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நடிகரும் – தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் உண்டு.
அவர் தனது முதல் படத்தில் நாயகனாக நடிக்க வில்லை, ஆனால் அவர் ஒரு புரட்சியாளனாக நடித்தார். 35 ஆண்டுகளுக்கு முன்னால் 1987 ஆம் ஆண்டு, ஜுன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் அவரது கதை வசனத்தில் வீரன் வேலுத்தம்பி திரைப்படம் வெளியானது. விஜயகாந்த், நாயகனாக நடித்த இந்தப்படத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடித்திருந்தார்.

வீரன் வேலுத்தம்பி வெளியானதற்கு அடுத்த ஆண்டு 1988 இல் மக்கள் ஆணையிட்டால் படம் வெளியானது. நான் ஆணையிட்டால் என்பது சர்வாதிகாரத்தை காட்டுகிறது. ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள், அவர்களே ஆணையிட வேண்டும் என்ற கருத்தில் மக்கள் ஆணையிட்டால் என்ற பெயர்தாங்கி கலைஞரின் வசனத்தில் இராம நாராயணன் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. இதிலும் விஜயகாந்தே நாயகன். வாகை சந்திரசேகர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். அப்போது திமுக இளைஞரணி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆற அமர யோசிச்சுப் பாரு.. என்ற பாடலில் மு.க.ஸ்டாலினாகவே நடித்திருப்பார்.

மு.க.ஸ்டாலின் 1984இல் தனது 31ஆவது வயதில் முதல் இரண்டு படங்கள் மற்றும் ஒரு சீரியலில் நடித்தார்.
1987இல் வெளியான “ஓரே ரத்தம்“ படத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் ஜாதி எதிர்ப்பு திராவிட சித்தாந்தம் பற்றி திரையில் கருத்துகளை பரப்பினார். அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1988ஆம் ஆண்டு வெளியான ‘ஒரே ரத்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கலைஞரின் வசனத்தில் உருவான ஒரே ரத்தம் திரைப்படத்தில் கார்த்திக், ராதாரவி, பாண்டியராஜ், மனோரமா, சீதா என நடிகர்கள் பட்டாளமே நடித்த இந்த படத்தில் மு.க.ஸ்டாலின் பண்ணையார் வீட்டில் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்டவரின் மகனாக நடித்திருப்பார். அதில் மு.க.ஸ்டாலின் பெயர் நந்தகுமார். தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், சென்னையில் சென்று படித்து பகுத்தறிவு வாதியாக தனது சொந்த ஊருக்கு திரும்பும் மு.க.ஸ்டாலின் முதலில் எதிர்கொள்வது தீண்டாமையைத் தான்.

பட்டணத்தில் இருந்து வரும் மு.க.ஸ்டாலினை, ராதாரவி மாட்டு வண்டியில் அழைத்துச் செல்வார். அப்போது மு.க.ஸ்டாலின் தாழ்த்தப்பட்டவர் என தெரிந்ததும் வரும் உரையாடலில், “கீழே இறங்குடா கீழ் ஜாதிக்காரனே…கழுதையும்,குதிரையும் ஒன்றா… உன்னால் என் வண்டி தீட்டுப்பட்டுப் போயிடுச்சு, பெனாயில் ஊற்றி கழுவ வேண்டும்” என மு.க.ஸ்டாலினை பார்த்து ராதாரவி பேசும் கலைஞரின் வசனம் ஜாதி தீண்டாமையின் உச்சத்தை திரையில் காட்டியது. “குறிஞ்சி மலர்” என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார் அதன் மூலம் தொலைக்காட்சியிலும் பிரலமான முகமாக மாறினார்.
தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட இந்த தொடர் ஒரு நாவலின் தழுவல் ஆகும். அதில் மு.க.ஸ்டாலின் திராவிட கவிஞர் வேடத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– சரவணா ராஜேந்திரன்

 

No comments:

Post a Comment