“திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தனி மனிதர் வாழ்வுமே பொருள் பொதிந்தவை!” செயலவைத் தலைவராக இறுதிக் காலங்களில் பணியாற்றிய அறிவுக்கரசு அவர்களை அறியாதோர் இருக்க மாட்டார்கள்! நம் இயக்கத்தினர் மட்டுமின்றி, அரசியல் கட்சி நண்பர்கள், இன்னபிற அமைப்பினர், அரசு ஊழியர்கள் என அவரின் அடையாளம் சற்றுப் பெரியது.
ஒரு நாத்திகர் வாழ்வு!
காரணம் பெயருக்கேற்ற அறிவார்ந்த மனிதர்! அது கொள்கையாகட்டும், தாம் வகித்த அரசுப் பணி ஆகட்டும்… அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர்! எவ்வளவோ சிறப்புகள் இருந்தாலும், குறைகள் இல்லாத மனிதர்கள் உண்டோ? அந்த வகையில் இவர் குறித்து அனைவரும் கூறும் ஒரே குறை அந்தக் “கோபம்”. இதைச் சொல்வதற்கு அவரின் பிள்ளைகள் கூட தயங்கியதில்லை.
அறிவுக்கரசு அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழா, அறிவு – 75 எனும் பெயரில் கடலூரில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள், “அறிவுக்கரசு கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்; நீண்ட காலம் வாழ வேண்டும்!”, எனத் தம் விருப்பத்தைப் பதிவு செய்தார்கள்.
ஏனெனில் அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது சமூகத்திற்குப் பயன் தரக்கூடிய ஒன்று! இறப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன் முகநூலில் பதிவிட்டதும், தோழர்களிடம் முதல் நாள் வரை பேசிக் கொண்டிருந்ததும், அய்ந்து நாட்களுக்கு முன் தஞ்சாவூர் வடசேரியில் ஒரு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்ததும் என… ஒரு நாத்திகர் வாழ்வு எப்படியானது என்பதற்கு உதாரணங்கள்!
எழுத்து, பேச்சு, உரையாடல்!
மாவட்ட வருவாய் ஆட்சியராக இருந்து, சில காலங்கள் பொறுப்பு மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்து, மாதம் 80 ஆயிரம் ஓய்வூதியம் பெறும் ஒருவர், இறுதிக் காலத்தில் அமைதியாக, பயணங்கள் ஏதுமின்றி, சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்! நீரழிவு நோய் இருந்த நிலையில், உடல் பருமனும் சிரமம் தர, கால் வலி கடும் பிரச்சினை ஏற்படுத்த அப்போதும் எழுத்துப் பணி, பேச்சு, உரையாடல் எனக் கடைசி நிமிடம் வரை சமூகத்திற்காய் வாழ்ந்து, தன்னை முடித்துக் கொண்டுள்ளார்.
இதில் கூடுதல் சங்கடம் என்னவென்றால் அவரின் வாழ்விணையர் ரஞ்சிதம் அம்மாள் 2003 ஆம் ஆண்டு மறைவுற்றார். அது முதல் பெரும்பாலும் தனித்த வாழ்க்கையை மேற்கொண்டவர். மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் பிள்ளையும் இருந்தாலும் இவரின் விருப்ப வாழ்வு என்பது தனித்துவமானது. “அப்பா செய்யும் சில செயல்கள் எங்களுக்கு வருத்தமானது என்றாலும் அவரிடம் சொல்லிவிட முடியாது. எனினும் கூடுமானவரை உதவியாக, துணையாக இருப்போம்,” என அப்பாவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தவர்கள் அவரின் பிள்ளைகள்.
ஆமாம்! கூடவே இருந்து பார்க்க முடியாத சூழல் பிள்ளைகளுக்கு இருந்தது. 2009 ஆம் ஆண்டு இருதய அடைப்பு ஏற்பட்டு, அதற்கும் சிகிச்சை முடிந்துள்ளது. இப்படியான நேரத்தில் எழுதுவதும், பேசுவதும், பயணம் செய்வதுமாக இருந்ததால் – கொள்கை ஒருபுறம் இருந்தாலும், உறவுப் பாசம் மற்றொரு புறம் இருக்கும் தானே!
தமிழ்நாடு அரசின் அங்கீகாரம்!
“திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தனி மனிதர் வாழ்வுமே பொருள் பொதிந்தவை” என முதல் வரியில் குறிப்பிட்டதைப் போல, மேற்கண்ட இவ்வளவு சிரமங்களையும் தாண்டி அவர் 37 புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் ஒரு புத்தகமான “பெரியார் மானுடம்” என்கிற நூலை, ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் உதயநிதி அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குகிறார். இதைத்தான் தம் முகநூல் பக்கத்தில் அறிவுக்கரசு அவர்கள் இறுதி பதிவாக எழுதுகிறார். அவர் மறைவுக்கு அடுத்த நாள், பலரும் இந்தப் பதிவைத் தான் மேற்கோள் காட்டி, வீரவணக்கம் செலுத்தினர்
இதில் இன்னொரு உருக்கமான செய்தி என்னவென்றால், இவரின் கடைசி புத்தகமான “நீதிக்கட்சியும், சமூக நீதியும்” என்கிற நூல் ஜனவரி 16 அன்று, சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு அறிவுக்கரசு அவர்கள் செல்லவில்லை. இப்படியான சூழலில் 22 ஆம் தேதி அதிகாலை 12.05 மணிக்கு அவர் இறந்ததாக மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள். அன்று மதியம் இவர் எழுதிய “நீதிக்கட்சியும், சமூக நீதியும்” என்கிற நூல் கூரியர் மூலம் வீட்டிற்கு வருகிறது. ஆனால் பார்ப்பதற்கு அவர் இல்லை. எனினும் வந்த நூலை என்ன செய்வது? யாருக்கும் புரியவில்லை! திடீரென ஒருவர் அவரின் நூலை அவர் மேல் வைத்துவிட்டார். கடைசி வரை அவர் தம் நெஞ்சிலே சுமந்து சென்றுள்ளார்!
பெரியார் குறித்து 4 ஆயிரம் பக்கங்கள்!
ஆக, அவர் எழுதி வெளிவந்த புத்தகங்கள் 37. அவர் எழுதிக் கொண்டிருந்த 38 ஆவது புத்தகம் “ஆரியம் கண்டாய்! திராவிடம் கண்டாய்!” அவர் எழுத நினைத்த 39 ஆவது புத்தகம் பார்ப்பனர்கள் குறித்தான ஒரு நூல். அதற்கு அவர் தலைப்பிடவில்லை; அதற்குள் அவரே தலைப்புச் செய்தியானார்! அவருடைய 80 ஆவது பிறந்த நாள் விழா 2019ஆம் ஆண்டு விருத்தாசலத்தில் நடைபெற்றது. பாவலர் அறிவுமதி, இமையம் உள்ளிட்ட எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அது! அதில் 50 நூல்களையாவது நீங்கள் எழுதி விட வேண்டும் என அறிவுக்கரசு அவர்களைக் கேட்டுக் கொண்டார்கள். அது சாத்தியம் அல்ல என்று கூறிய அவர், பெரியார் குறித்து 5 ஆயிரம் பக்கங்கள் எழுதுவேன் என்றார். ஆனால் 4 ஆயிரம் பக்கங்களில் முடித்துக் கொண்டார்!
திட்டமிட்ட வாழ்க்கை!
தனது ஓய்வூதியத்தில் பெரும் பகுதியை பிரச்சாரத்திற்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் செலவழித்துக் கொண்டவர் அவர். தமது இணையர் இறந்து, 20 ஆண்டுகள் ஆனாலும், அதில் 10 ஆண்டுகள் தனித்து வாழும் சூழலே நேர்ந்தது. அது தவிர்க்க முடியாததும் கூட! எனினும் சுற்றுப் பயணங்களுக்கு உடன் வர அரிமா வளவன், வீட்டில் உதவிக்கு பரத், பத்திரிகை மற்றும் பொருள்கள் வாங்கிக் கொடுக்க முருகன், ஓட்டுநராக வேலு, துப்புரவு பணி செய்ய வீரம்மாள், சமையல் பணி செய்திட சுமதி, ராஜ், கூடுதல் உதவிக்கு வசந்தி, அமுதா எனத் தம் இயக்கப் பணியையும், அரசுப் பணி போலவே திட்டமிட்டு செய்துள்ளார்.
அதேபோல அறிவுக்கரசு அய்யா அவர்கள் உறவினர்களின் காது குத்து, சடங்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றிற்கும் செல்லமாட்டாராம். “முரட்டு சுயமரியாதைக்காரர்” என உறவினர்களே தயங்குவார்களாம். பொதுவாகப் பகுத்தறிவுவாதிகள் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள்! ஒவ்வொரு இயக்கத் தோழரின் வாழ்விலும் இதற்கான செய்திகளை நாம் பெறலாம். அறிவுக்கரசு அய்யா அவர்கள் இறந்த நாளன்று அவரின் புதிய நூல் ஒன்று அவரின் வீட்டிற்கு வந்ததை முன்பே நினைவு கூர்ந்தோம். அதாவது தள்ளாடும் வயதிலும் எழுத்துப் பணி மற்றும் சமூக ஈடுபாடு! அதேபோல ஓய்வு பெற்றதற்குப் பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., சமூக அறிவியல் (Sociology), எம்.பில்., முடித்துள்ளார். இறுதியாக பி.ஹெச்.டி. படிக்க விரும்பி, அது வாய்ப்பில்லாமல் போனது.
கடலூர் சு.அறிவுக்கரசு – ரஞ்சிதம் அறக்கட்டளை!
இவரின் பேச்சு, எழுத்து, வாசிப்பு போன்றவற்றைப் பார்த்து, கூடுதல் சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என அவரின் குடும்பத்தார் எண்ணினர். ஒரு மனிதரின் மறைவுக்குப் பின்னர் தொடங்கப்படும் அறக்கட்டளை அமைப்பை, இவர் உயிருடன் இருந்த போதே ஏற்படுத்தி, அவருக்குப் பெருமை சேர்த்துவிட்டனர். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் “கடலூர் சு.அறிவுக்கரசு – ரஞ்சிதம் அறக்கட்டளை” எனும் பெயரில் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெரியார் குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு இதில் உதவித் தொகை வழங்கப்பட்டது. அதேபோல சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் அதே பெயரில் அறக்கட்டளை நிறுவப்பட்டது. இது சொற்பொழிவு தொடர்பானது. இதுவரை 7 சொற்பொழிவுகள் நூல்களாக வெளிவந்துள்ளன.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் பெரியார் அறக்கட்டளை சொற்பொழிவில் அறிவுக்கரசு அவர்கள் ஒருமுறை பேசினார். அந்தப் பேச்சே “திராவிடர் கழகம் ஒரு கட்சி அல்ல; புரட்சி இயக்கமே” எனும் பெயரில் நூலாக வந்தது. இதற்கான தலைப்பும், ஏற்பாடும் ஆசிரியர் செய்தவை. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம், அறிவுக்கரசு அவர்களுக்கு மதிப்புறு முனைவர் (Doctor of Literature) பட்டத்தை 2022ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது.
சுவையறிந்து! நாவறிந்து!
இவையெல்லாம் ஒருபுறம் என்றால், அவரின் மற்றொரு பக்கம் அறுசுவையானது! ஆம்! எந்தெந்த ஊரில் என்னென்ன உணவுகள் சிறப்பாக இருக்கும் என்பதில் கற்றுத் தேர்ந்தவர். குற்றாலத்தில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க வருகிறார். நீண்ட நாட்களாக சங்கரன்கோயிலில் ஆட்டுப் பாலில் வேக வைத்த மட்டன், அதனுடன் பிரியாணியின் சுவையை அறிகிறார். தம் ஆவலை அன்று அவர் பூர்த்தி செய்கிறார்.
இப்படியான நிலையில் அறிவுக்கரசு அய்யா அவர்களின் நாவறிந்து, சுவையறிந்து கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் ஒரு விருந்து ஏற்பாடு செய்கிறார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு திருச்சியில் 20.10.2023 அன்று வேன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு வந்த அறிவுக்கரசு அவர்களுக்கு இனாம்குளத்தூர் பிரியாணியும், சிவகங்கை சிங்கப்பூர் சிக்கனும் தருவித்து, அவரை மகிழ்வித்திருக்கிறார். அதேபோல நவம்பர் ஒன்றாம் தேதி, அவரின் 81 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கடலூரில் புதிதாகத் திறக்கப்பட்ட, புகழ்பெற்ற ஆர்.ஆர்.பிரியாணியை வாங்கி, அன்பு கலந்து அவரின் வீட்டிற்கு அனுப்பி, சுவை அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் வீ.அன்புராஜ் அவர்கள்.
தலைக்கறி குழம்பும், குடல் கறியும் விரும்பி சாப்பிடும் இவருக்கு மன்னார்குடி ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அவர்களும், கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் அவர்களும், கடைசி நிகழ்ச்சியான வடசேரிக்குப் போன போது தம் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளனர். இனையனைத்தும் யதேச்சையாக நடந்திருந்தாலும், திடீரென ஏற்பட்ட அவரது மறைவு மேலும் உணர்வுகளைக் கிளறிவிடுகிறது.
பொருளாதார மனம்!
ஆசிரியர் அவர்களின் 90 ஆவது பிறந்த நாளின் போது, தள்ளாடியபடியே பெரியார் திடல் சென்றவர் 100 ரூபாய் நோட்டுகளில் 90 எண்ணிக்கைக் கொடுத்தார். இயக்கத்திற்கு நன்கொடை வழங்குவதும், தோழர்களின் குறிப்பறிந்து உதவிகரமாக இருப்பதும், கல்வி உதவித் தொகை வழங்குவதிலும் என அவர் பொருளாதார மனம் படைத்தவராகவும் இருந்திருக்கிறார்!
உடன்பிறவா அண்ணன்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை “அண்ணன்” என்றே அழைத்திடும் வழக்கம் கொண்டவர். இருவரும் ஒரே ஊர், பக்கத்து தெருக்காரர்கள், இருவரின் தந்தையரும் நண்பர்கள் என்கிற போது நெருக்கத்திற்கு வேறு காரணமும் வேண்டுமோ! அதேநேரம் அண்ணனாக, ஆசிரியராக, தலைவராக ஏற்று இறுதிவரை துணையாய் இருந்து சென்றுள்ளார்! நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்குத் தாளாளராக இருந்தவர்; பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளிக்குச் செயலாளராக இருந்தவர்!
இறுதி நிமிடங்கள்!
இப்படியான பல பணிகள் புரிந்தவர் கடந்த 21.01.2024 அன்று உணவு முடித்து உறங்க செல்கிறார். தூக்கம் வரவில்லை, வீசிங், மற்றும் மூச்சுத் திணறல் போன்று உணர்கிறார். தனது உதவியாளர் பரத் மூலம் சில முதலுதவிகளைச். செய்து கொள்கிறார். சிறிது நேரத்திலே மாரடைப்பு போன்ற அறிகுறிகளை அவர் உணர்கிறார். உடனே மருத்துவ அவசர ஊர்தியை வரவழைக்க சொல்கிறார். மருத்துவமனை விரைகிறார்கள். இரவு 11.30 தொடங்கி, 12.05 வரை அரைமணி நேரச் சுற்றத்தில் மொத்த வாழ்க்கையும் நிசப்தமாகிறது! 22.01.2024 அதிகாலை 12.05 மணிக்கு சு.அறிவுக்கரசு மரணத்தைத் தழுவினார் என மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினர்.
இறந்தும் வாழும் அவர்தம் சிந்தனைகள்!
ஒரு நாத்திகர் வாழ்வு, ஒரு பகுத்தறிவாளர் வாழ்வு இருந்த போது மட்டுமல்ல; இறந்த போதும் பயன்படும் தானே? அந்த வகையில் அதிகாலை 3 மணிக்கே அவரின் விழிகள் இரண்டும் கொடையாக வழங்கப்பட்டன. அடுத்த நாளில் உடலும் கொடையாக வழங்கப்பட்டது.
சு.அறிவுக்கரசு என்றால் இரண்டு செய்திகள் நினைவுக்கு வரும். ஒன்று கோபக்காரர், மற்றொன்று சாப்பாட்டு பிரியர். இதில் ஒளிவு மறைவு எதுவுமில்லை. அவரின் பிள்ளைகளே கூறும் செய்திகள் தான்! அப்படியாக அறியப்பட்டவர், எப்படியாக வாழ்ந்தார் என்பதை அன்றைய தினம் அலறியவர்களின் சத்தத்தில் இருந்து அகத்தைக் கண்டு கொள்ளலாம்!
இயக்கம் கடந்து அரசியல் கட்சி நண்பர்கள், பல்வேறு அமைப்பின் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என 2500 பேருக்கு மேல் கூடி அவரை வழியனுப்பி வைத்தனர். எனினும் அவர் எழுதிய 37 புத்தகங்களும் நம்முடன் தான் இருக்கின்றன
No comments:
Post a Comment