பார்ப்பனர்கள் தமிழர்களா என்று சர் ஏ.டி.பன்னீர் செல்வம் கேட்பதற்காக மட்டும் நாங்களும் தமிழர்களே என்று சொன்னால் போதாது!
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற தமிழர் கொள்கையை ஆதரிக்கின்றார்களா?
பார்ப்பனர்கள் மெய்யாலுமே தமிழர்கள் என்றால் தென்னிந்திய சிவாலாயங்களில் முதலில் வேதபாராயணம் செய்ய வேண்டுமென்றும் அப்புறந்தான் தேவாரம் ஓத வேண்டும் என்று சொல்லுவதேன்?
பார்ப்பனர்கள் தமிழர்களானால் சைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏன்?
பார்ப்பனர்கள் தமிழர்களானால் அறுபத்து மூன்று நாயன்மாரையும், பட்டினத்தார்,தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள் முதலிய பெரியோர்களை ஏன் வணங்கவில்லை?
சைவ சமயாச்சாரிகளை ஏன் கும்பிடவில்லை?
பார்ப்பனர்கள் தமிழரானால் – திராவிடர்களானால் ஓட்டல்களில் தமிழர்கள் எல்லோரும் வேற்றுமை இன்றி ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டியருந்தும்போது பார்ப்பனர்கள் மட்டும் தனியிடத்திலிருந்து உண்பதேன்?
பார்ப்பனர்கள் தமிழரானால் தமிழ் நூல்களென்றோ அவர்களுக்கு முதல் நூல்களாக இருக்க வேண்டும். வேதத்தை அவர்கள் முதல் நூலாகவும் ஆதாரமாகவும் கொள்வதேன்?
பார்ப்பனர்கள் தமிழரானால் சமஸ்கிருதத்திற்கு அவர்கள் உயர்வு கற்பிப்பதேன்?
தமிழ் நூல்களையெல்லாம் வட மொழியிலிருந்து மொழிபெயர்க்க பட்டவைகளே! என்று புனைந்து கூறுவது ஏன்?
பார்ப்பனர்கள் தமிழர்களானால் அவர்களுக்கு மட்டும் சமஸ்கிருதப் பள்ளிகளை ஸ்தாபித்திருப்பதேன்?
அப்பள்ளிகளில் தமிழர்கட்கு அனுமதி அளியாததேன்?
வேதமோதத் தமிழர்களுக்கு உரிமையில்லை எனக் கூறுவதேன்?
பார்ப்பனர்கள் தமிழர்களானால் சமஸ்கிருத மந்திரஞ் சொல்லி கலியாண, இழவுச் சடங்குகள் நடத்துவதேன்?
பார்ப்பனர்கள் தமிழரானால் தமிழர்கள் அநுஷ்டிக்காத பல வகை நோன்புகளையும், சடங்குகளையும் பார்ப்பனர்கள் மட்டும் அநுஷ்டிப்பதேன்?
இப்பொழுதும் தமிழர்களுடன் கலக்காமல் தனித்து வாழ்ந்து வருவதேன்?
தமிழர் பார்த்தால் திருஷ்டி, தோஷம் எனக் கூறி பார்ப்பனர்கள் மறைவிடங்களில் உண்பதேன்?
இவ்வண்ணம் கிரியாம்சையில் தாம் அந்நியர் என்று காட்டிக் கொள்ளும் கூட்டத்தார் வாய்ப்பேச்சில் மட்டும் நாமும் தமிழெரென கூறினால் யாராவது லட்சியம் செய்வார்களா?
பார்ப்பனர்கள் மெய்யாலுமே தமிழரானால் நடை உடை பாவனைகளில் அவர்கள் தமிழராக வேண்டும். முதலில் பூணூலை அறுத்தெறிய வேண்டும். தமிழ் நூல்களையே தமது முதல் நூல்களாக கொள்ள வேண்டும்.
தமிழ் மொழியே தன்னுடைய குலமொழி – கோத்திர மொழியென ஒப்புக் கொள்ள வேண்டும். சமஸ்கிருதம் தமிழை விட உயர்ந்தது என்ற தப்பெண்ணெத்தை விட வேண்டும்.
நடை உடை பாவனைகளால், பழக்கவழக்கங்களால் – மதாசராங்களால், அந்நியர் என்று காட்டிக் கொள்ளும் பார்ப்பனர்கள் விவாதத்துக்காக தமிழர் எனக் கூறிக் கொள்வது சுத்த அசட்டுத்தனமாகும்.
– தந்தை பெரியார், (22-01-1939)
நன்றி : (பன்னீர்செல்வம் – சமூக வலைதளப் பதிவு)
No comments:
Post a Comment