1961-ஆம் ஆண்டுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்தில் நுழைந்து குடியேறியவர்கள், எந்த ஜாதி மற்றும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அடையாளம் காணப்பட்டு, நாடு கடத்தப்படுவார்கள் என்று மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் பல மாதங்களாக கலவர பூமியாக அலங்கோலமாகக் காட்சி அளிக்கிறது. மெய்தி மற்றும் குகி மக்களுக்கு இடையே நடந்து வரும் இந்த இனக்கலவரத்துக்கு, சட்டவிரோதமாக அந்த மாநிலத்தில் குடியேறியவர்களே காரணம் என அம்மாநில பாஜக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்தச் சூழலில் இந்தியா மற்றும் மியான்மர் எல்லையில் வசிப்பவர்கள் விசா இல்லாமல் 16 கி.மீ. தூரம் இரு தரப்பினரும் பயணிக்க அனுமதிக்கும் ஆறு ஆண்டு சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தை (free movement agreement) ஒன்றிய அரசு அண்மையில் ரத்து செய்தது. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு வடகிழக்கு இந்திய மாநிலங்கள் மியான்மர் எல்லையில் அமைந்துள்ளன.
மியான்மருடன் 400 கி.மீ. எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மணிப்பூரில், கடந்தாண்டு மிகப்பெரிய அளவில் இனக்கலவரம் வெடித்தது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி இன மக்களுக்கும் சிறுபான்மை பழங்குடியின குகி மக்களுக்கும் இடையிலான மோதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர், மியான்மரில் அதாவது பழைய பர்மாவில் இருந்து வந்தவர்களால் தான் இந்தக் கலவரம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு குற்றம்சாட்டி வருகிறது.
மியான்மரைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சட்டவிரோத கசகசா பயிரிடுபவர்கள் மற்றும் மணிப்பூரில் புலம்பெயர்ந்த போதைப்பொருள் வியாபாரிகளால்தான் வன்முறைகள் நடந்ததாகவும் அம்மாநில அரசு குற்றம்சாட்டி வந்தது. இது ஒருபுறம் எனில் மியான்மரிலும் அரசியல் நிலைத்தன்மை சரியாக இல்லை. அங்கு ஆயுதக்குழுக்களின் போராட்டங்கள் அதிகரிப்பால் பல ஆயிரம் பேர் அகதிகளாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில் மியான்மரில் இருந்து ஏராளமா னோர் மணிப்பூருக்கு அகதிகளாக வரும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே இந்தியா மற்றும் மியான்மர் எல்லையில் வசிப்பவர்கள் விசா இல்லாமல் 16 கி.மீ. தூரம் இரு தரப்பினரும் பயணிக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. மேலும் எல்லையில் வேலி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங், “1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்தில் நுழைந்து குடியேறியவர்கள், ஜாதிகள் மற்றும் சமூகங்களைப் பொருட்படுத்தாமல் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்” என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் வெளிநாட்டினரை நாடு கடத்தும் மாநில அரசின் திட்டம் குறித்து பெரிய அளவில் கேள்விகள் எழுந்துள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், சம்பந்தப் பட்ட வெளிநாடுகள் அவர்களை தங்கள் நாட்டுக் குடிமக்களாக அங்கீகரிக்கவில்லை என்றால், அவர்கள் எப்படி நாடு கடத்தப்படுவார்கள்? என்று கேள்விகளை முன்வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஏற்கெனவே அசாம் மாநிலத்தில் பல நூற்றாண் டுகளாக வாழும் மக்களை பங்களாதேசிகள் என்று கூறி முகாம்களில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர்.
கருநாடகா, மத்தியப்பிரதேசம், மகாராட்டிரா, ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவிலும் முகாம்கள் கட்டப்பட்டுக் கொண்டு வருகின்றன. ஒருவேளை மணிப்பூர் மாநில முதலமைச்சரின் நடவடிக்கையை குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்த பிறகு பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மேற்கொண்டால் – அவர்களுக்குத் தேவையில்லாத, பாஜகவிற்கு வாக் களிக்காத – அனைவரையுமே குடியுரிமை அற்றவர்களாக அறிவித்து முகாம்களில் அடைக்கும் சூழல் வரலாம்.
எல்லா வகைகளிலும் மனித உரிமைகளுக்கு விரோதமான ஒன்றிய அரசு மற்றும் பிஜேபி ஆளும் மாநிலங்களிலிருந்து பிஜேபி ஆட்சியைத் தூக்கி எறிவதே ஒரே தீர்வு!
No comments:
Post a Comment