கோவை ஜி கே என் எம் மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சி வெளி நோயாளிகள் மய்யம் திறப்பு காணொலி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

கோவை ஜி கே என் எம் மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சி வெளி நோயாளிகள் மய்யம் திறப்பு காணொலி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

featured image

சென்னை, பிப்.28 கோவை: கோயம் புத்தூர் ஜிகேஎன்எம் மருத்துவ மனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளி நோயாளிகள் மய்யத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

சிறப்பான மருத்துவ சேவை அளிப்பதில் முன்னோடியாக திகழும் கோயம்புத்தூர் ஜிகேஎன்எம் மருத்து வமனை, நவீன மருத்துவ வசதிகளுடன் 3.30 லட்சம் சதுரஅடியில் ஒருங் கிணைந்த வெளி நோயாளிகள் மருத்துவ மய்யத்தை அமைத்துள்ளது. இந்த மருத்துவ மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்ப தாவது:

இந்தியாவின் மருத்துவ தலைமை யகமாக தமிழ்நாடு விளங்குகிறது. சென்னையில் உள்ளமருத்துவமனை களின் பங்களிப்பால் மட்டுமின்றி, சென்னைக்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்களிலும் அத்தகைய மருத்துவ கட்டமைப்பு இருப்பதுதான் அதற்கு காரணம். அதிலும், அரசு மருத்துவ மனைகளுக்கு இணையாக தனியார் மருத்துவமனைகளும் மக்களுக்கு மருத்துவ சேவையை அளிக்கின்றன.

அந்த வகையில், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று போற்றப்படும் கோயம்புத்தூர் மாநகரின் அடை யாளமாக விளங்கும் லட்சுமிகுழுமத்தை நிறுவிய ஜி.குப்புசாமி நாயுடு பெயரால் அமைந்த மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன்.
சேவை உள்ளம் படைத்த ஜிகேஎன் குடும்பத்தினருடன் எனக்கு நீண்டகால நட்பு உண்டு. தென்னிந்திய நிறுவ னங்களில் முதல் நிறுவனமாக, சீனாவில் இவர்கள் உற்பத்தி அலகை நிறுவி,அதன் முதல் தயாரிப்பை 2010-ம் ஆண்டு நான் துணை முதலமைச்சராக இருந்தபோது ஷாங்காய் நகரத்தில் தொடங்கி வைத்தேன்.
கடந்த 1952-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 73 ஆண்டுகளாக ஏழை, எளியோருக்கும் தரமான மருத் துவ சிகிச்சை வழங்கிவரும் ஜிகேஎன்எம் மருத்துவமனைதான் கோயம்புத்தூரின் முதல் தனியார் மருத்துவமனை ஆகும். எனினும்,இதையும் மக்கள் அரசு மருத் துவமனை என்றே கருதும் அளவுக்கு, லாபநோக்கின்றி ஏழை, எளிய, நடுத்தர வகுப்பினர் என அனைவருக்குமான மருத்துவ சேவையை அளித்து வந்துள்ளனர்.

வளர்ந்து வரும் காலத்துக்கேற்ப, 3.30 லட்சம் சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வெளி நோயாளிகள் மருத்துவ மய்யத்தை தொடங்கி, இந்திய அளவில் தனி முத் திரையை ஜிகேஎன்எம்மருத்துவமனை பதித்துள்ளது. இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடக்க விழா நிகழ்ச்சியில், முதல மைச்சருடன் கேஎன்சி அறக்கட்டளை அறங்காவலர்கள் சஞ்சய் ஜெயவர்த் தனவேலு, டாக்டர் லலிதா தேவி சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ஆகியோர் பங்கேற்றனர்.

கோவையில் ஜிகேஎன்எம் மருத் துவமனை வெளி நோயாளிகள் மய்யத்தில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கேஎன்சி அறக்கட்டளை தலைவர் பதி, துணைத் தலைவர் ஆர்.கோபிநாத், அறங்காவலர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேசும்போது, ‘‘தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் கோவை நகரம் தரமான மருத்துவ சிகிச்சை வழங்கும் மய்யமாக திகழ்கிறது. இங்கு தற்போது தொடங்கப்பட்டுள்ள ஜிகேஎன்எம் வெளி நோயாளிகள் மய்யத்தில் ஆங்கில மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி யோகா, நேச்சுரோபதி உள்ளிட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது’’ என்றார்.

கேஎன்சி அறக்கட்டளை தலைவர் பதி பேசும்போது, ‘‘கடந்த 1952-இல் 50 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட ஜிகேஎன்எம் பிரசவம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை தற்போது 650 படுக்கைகளுடன் பல்வேறு சிகிச்சைகள்அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக விளங்குகிறது. நோய்களை துல்லியமாக கண்டறிந்து நவீன சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மய்யம் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நவீன மருத்துவ வசதி: ஜிகேஎன்எம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி பேசும்போது, ‘‘ஜிகேஎன்எம் மருத்துவ மனை தற்போது நவீன மருத்துவ வசதிகளுடன் 3.30 லட்சம் சதுரஅடி பரப்பளவில் ஒருங்கிணைந்த வெளி நோயாளிகள் மருத்துவ மய்யத்தை திறந்துள்ளது. பொருளாதாரத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை செயல்படும். எங்கள் பயணத்தில் இந்த மய்யம் ஒரு மைல் கல். நாடு முழுவதும் உள்ள வெளி நோயாளிகளுக்கான சிகிச்சையில் இந்த மய்யம் முன்னோடியாக உள்ளது.

வெளி நோயாளிகள் மய்யம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். உடல்நலனை மதிப்பிடுதல், நோய்களை கண்டறிதல், ஆய்வக வசதிகள், வெளி நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை வசதிகள், யோகா, நேச்சுரோபதி, அக்குபஞ்சர், ஓமியோ பதி என சுமார் 30 மருத்துவ பிரிவுகளில் 250 மருத்துவர்களை கொண்டு இந்த மய்யம் செயல்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment