வெல்லப் போவது இந்தக் கூட்டணிதான், மோடி அல்ல! - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 23, 2024

வெல்லப் போவது இந்தக் கூட்டணிதான், மோடி அல்ல! - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

featured image

♦ இராமேசுவரத்திற்கு வந்து ‘தியானம்’ இருந்த பிரதமர் மோடி – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து குறைந்தபட்சம் ஆறுதல் சொன்னதுண்டா?
♦ மோடி வெற்றி பெறுவார் என்பது கருத்துத் திணிப்பே தவிர, கணிப்பு அல்ல!
♦ இதுவரை பி.ஜே.பி. பெற்ற வாக்கு சதவிகிதம் 37% தான்!
‘இந்தியா’ கூட்டணி உறுதிப்பட்டு வருகிறது –
வெல்லப் போவது இந்தக் கூட்டணிதான், மோடி அல்ல!

குலசேகரப்பட்டினத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

குலசேகரப்பட்டினம், பிப்.23 இராமேசுவரத்திற்கு வந்து ‘தியானம்’ இருந்த பிரதமர் மோடி – வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து குறைந்த பட்சம் ஆறுதல் சொன்னதுண்டா? மோடி வெற்றி பெறுவார் என்பது கருத்துத் திணிப்பே தவிர, கணிப்பு அல்ல! இதுவரை பி.ஜே.பி. பெற்ற வாக்கு சதவிகிதம் 37% தான்! ‘இந்தியா’ கூட்டணி உறுதிப்பட்டு வருகிறது – வெல்லப் போவது இந்தக் கூட்டணிதான், மோடி அல்ல! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (22-2-2024) காலை குலசேகரப்பட்டினத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:

குலசேகரப்பட்டினத்தில் முப்பெரும் விழா!

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குல சேகரப்பட்டினம் நகரத்தில் தொண்டறச் செம்மல் திராவிட இயக்கத்தினுடைய சமூகநீதிக்கான முன் னோடி அய்யா சி.டி.நாயகம் அவர்களுடைய முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்தக் கல்வி வளாகத்தில் மிகச் சிறப்பான வகையில், அவருடைய தொண்டறத்திற்கான பாராட்டு விழா- அதேபோல, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழா – வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள், ஜாதி ஒழிப்புப் பணிக்காக, தீண்டாமை ஒழிப்புப் பணிக்காக செய்த அற்புதமான தொண்டைப் பாராட்டி – கேரள மாநில அரசாங்கமும், தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சரான, நம்முடைய ஒப்பற்ற முதல மைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சியில் – இரண்டு மாநிலங்களும் இணைந்து நடத்தக்கூடிய அவ்விழாவைப்பற்றி சிறப்பாக எடுத்துச் சொல்லக்கூடிய வகையிலும் இங்கே முப்பெரும் விழாவாக இன்று (22-2-2024) நடைபெறுகிறது.

சி.டி.நாயகம்

இன்றைய இளைய தலைமுறையினருக்கு அய்யா சி.டி.நாயகம் அவர்களைப்பற்றிய வரலாறு தெரியாது; வரலாற்றையும், அவருடைய தொண்டறம் எப்படிப்பட்டது என்பதையெல்லாம் இந்த மண்ணிலே வந்து எடுத்துச் சொல்லவேண்டும், இந்தப் பகுதியில் இருக்கின்றவர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருப்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற் காகத்தான் இந்த முயற்சியை நாங்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு செய்திருக்கின்றோம்.
மிகப்பெரிய அளவிற்கு எதிர்நீச்சல் போட்டவர் அவர். எத்தனையோ சோதனைகள், பொருளாதார சிக்கல்கள், புதிய புதிய நெருக்கடிகள் இவற்றையெல்லாம் தாண்டி, இந்த அறக்கட்டளைத் தோழர்கள், இந்தப் பள்ளிக்கூடத்தை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல ஆண்டுகளைத் தாண்டி சிறப்பாக இந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நிறுவனம் நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் என்பதைப்பற்றியெல்லாம் நான் விரிவாக மேடையில் உரையாற்றவிருக்கின்றேன்.
அப்படிப்பட்ட இந்த இடத்திற்கு வருகை தந்து – மேற்சொன்ன முப்பெரும் விழாக்களையும் சிறப்பாக குலசேகரப்பட்டினத்தில் நடத்தவேண்டும் என்பதற் காகத்தான் திராவிடர் கழகம் சார்பிலும், திராவிட இயக்க சார்பிலும் இங்கே வந்திருக்கின்றோம்.
இன்றைக்குத் தவிர்க்க முடியாத காரணத்தினால், அமைச்சர் அவர்களால் இங்கே வர இயலாவிட் டாலும் கூட,அவருடையபேராதரவோடு,அதேபோல, அனைத்துக் கட்சியைச் சார்ந்த நண்பர்கள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக சகோதரர்கள், பொறுப்பாளர்கள் உள்பட எல்லோரும் கலந்துகொள்ளக் கூடிய இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது.
அதில் பல செய்திகளைக் குறிப்பிட்டு பேச விருக்கின்றோம். இந்த நேரத்தில் செய்தியாளர்களாகிய உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமா?

செய்தியாளர்: தமிழ்நாட்டிற்குப் பிரதமர் வரும் பொழுது, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்; அது எந்த அளவிற்கு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்?
தமிழர் தலைவர்: தூத்துக்குடி போன்ற பகுதிகள் எல்லாம் புயல், மழை வெள்ளத்தால் எவ்வளவு பெரிய பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன என்பதை இப்பொழுதுகூட அந்த சாலைகளில் வரும்பொழுது எங்களால் தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
இன்னமும் பழைய சீர்நிலைக்கு வரவில்லை இந்தப் பகுதிகள் என்று தெளிவாகத் தெரிகின்ற சூழ்நிலையில், பிரதமர் மோடி ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டுவது என்பது நீண்ட கால திட்டமாகும்.

அது ஒரு பக்கத்தில் இருந்தாலும், புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி வேண்டும் என்று டில்லிக்கு நேரில் சென்று நம் முடைய முதலமைச்சர் அவர்கள், பிரதமரை சந்தித்து மனு கொடுத்தார்.

தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனி மொழி உள்பட எல்லோரும் உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஒன்றிய அமைச்சர்கள், ஒன்றிய நிதியமைச்சரோடு தமிழ்நாட்டில் எந்த அளவிற்குப் பாதிப்புகள் ஏற்பட்டுள் ளன என்பது குறித்து ஆலோசனையும் நடைபெற்றது.
ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை – சமூக விரோத நடவடிக்கையாகும்!
நேற்று சட்டமன்றத்தில் நம்முடைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சொன்னதைப்போல, நிவாரணப் பணிகளுக்கு ஒரு சல்லிக்காசு கூட தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. இது மாற்றாந்தாய் மனப்பான்மை – சமூக விரோத நடவடிக்கையாகும்.
ஏனென்றால், மக்கள் நலனுக்காக இருக்கக்கூடிய ஓர் ஆட்சி என்று சொன்னால், எப்படி நடந்துகொள்ள வேண்டும்? மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு ஒரு ரூபாய் வசூலித்தால், 29 காசுதான் திருப்பிக் கொடுக்கக்கூடிய சூழல் இருக்கிறது.

தேசியப் பேரிடர் நிதியை தாராளமாகத் தமிழ்நாட் டிற்குக் கொடுக்கலாம். குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்கள் என்றால், உடனே நிவாரண நிதியை தாராளமாகக் கொடுக்கிறார்கள்.

இதுவரையில், புயல், மழை, வெள்ள நிவாரண நிதியாக ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு காசுகூட வரவில்லை என்பதை, அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின்மீதான விவாதத்தின்போது சட்டமன்றத்தில் தெளிவாக நம்மு டைய நிதியமைச்சர் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்பதற்காக வருகிறார்கள்

சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழ்நாட் டிற்கு, இராமேசுவரத்திற்கு வந்தார்; தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் கண்களை மூடிக்கொண்டு ‘தியானம்’ இருந்தார். அடுத்ததாகவும் தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறார். எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்பதற்காக வருகிறார்கள்.
நிவாரண நிதி கொடுப்பதுகூட இரண்டாம்பட்சமாக இருந்தாலும், குறைந்தபட்சம் புயல், மழை, வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தாரா? அவர் களைச் சந்தித்து ஆறுதல் சொன்னாரா? என்றால், இதுவரை இல்லை.

தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக திரும்பத் திரும்ப வருகிறார் பிரதமர். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, எந்த வகையில் சரியானது? ஒன்றிய அரசு எப்படி செயல்படுகிறது என்பதற்கு இது ஓர் அடையாளமாகும்.
கட்சியை வளர்க்கவேண்டும் என்பது எல்லா கட்சிகளுக்கும் இயல்புதான்.

ஆனால், அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்களுக்காக இதுவரையில் ஒரு காசைக்கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லையே!
இராமேசுவரத்திற்கு அவர் வந்தது – மக்களைப் பார்க்கவேண்டும் என்பதற்காக வரவில்லை. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல்களையெல்லாம் செய் தால், அது ஓட்டு வாங்குவதற்கும், பிரச்சாரம் போன்றும் இருக்கும் என்று வருகிறார்.

”மேயரை நாங்களே நியமிக்கிறோம்” என்று உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான் முதல் முறை
ஆகவே, அவருடைய தேர்தல் வித்தைகள் மிகவும் வேடிக்கையானவை. ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்திருக்கிறது.

அதேபால சண்டிகர் மேயர் தேர்தல், எவ்வளவு மோசடியான தேர்தல் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். ”மேயரை நாங்களே நியமிக்கிறோம்” என்று உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான் முதல் முறை யாகும்.
ஆகவே, இப்படியெல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமாக இருக்கக் கூடியவர் – எந்த இடத்திற்கு வந்து போனாலும், அது வித்தையே தவிர- அந்த மாநில மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்காது.

இந்தியாவில் 63 சதவிகித மக்கள் பா.ஜ.க.விற்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள்!

செய்தியாளர்: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
தமிழர் தலைவர்: நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து.
காரணம் என்னவென்றால், இது எங்களுடைய ஆசை அல்ல. கருத்துகணிப்பில், ”மீண்டும் மோடிதான் பிரதமராக வருவார்” என்று சொல்வதையும் நம்பாதீர் கள்.
கருத்துக் கணிப்பு என்பது கருத்துத் திணிப்பே தவிர, கருத்துக் கணிப்பு அல்ல.
இரண்டு முறை மோடி அவர்கள் பிரதமராக வந்தது எப்படி என்றால், 37 சதவிகிதத்திற்குமேல் அவர்கள் ஓட்டு வாங்கவில்லை. அப்படியென்றால், மீதமுள்ள 63 சதவிகித மக்கள் அவரை எதிர்த்துத்தான் வாக்களித்திருக்கிறார்கள்.
ஆகவே, ஜனநாயக ரீதியாக கடந்த 10 ஆண்டுகளாக எல்லா மக்களுடைய ஆதரவோடு ஒன்றிய ஆட்சி நடந்திருக்கிறது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை!

தமிழ்நாட்டில் 39, புதுவையில் 1 இரண்டும் சேர்த்து 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பது எழுதப்பட்டதுதான்; அதுவும் அவர்களே ஒப்புக்கொண்ட ஒன்றுதான். அவர்களுடன் கூட்டணி சேரக்கூட யாரும் தயாராக இல்லை.
இந்த சூழ்நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.
அயோத்தியில் இராமன் கோவில் கட்டிவிட்டோம். அதனால் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால், அது இன்றைக்கு எடுபடவில்லை.

காரணம், விலைவாசி ஏற்றம், பெண்கள் உள்பட நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.
விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றவில்லை!
வடமாநிலங்களில் கல்வி வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. விவசாயிகளுடைய போராட்டம் உச்ச கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, அவர்களுக்கு என்ன உறுதிமொழி கொடுத்தாரோ பிரதமர் மோடி, ”அந்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள்” என்று சொல்லித் தான், இன்றைக்கும் விவசாயிகள் போராடிக் கொண் டிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை கொடுப் போம்; பழைய வழக்குகளைத் திரும்பப் பெறுவோம் போன்ற பல உறுதிமொழிகளைக் கொடுத்தார். ஆனால், எதையுமே நிறைவேற்றவில்லை.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இந்தப் பிரச்சினை மிகப்பெரிய அள விற்கு வெடித்துள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, விவசாயி ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார்.

வெளிநாட்டிற்கும், இந்தியாவில் தமிழ்நாட்டிற்கும், பிற மாநிலங்களுக்கும் செல்கின்ற பிரதமர் மோடி அவர்கள், இன்றுவரையில் கலவரங்கள் நடந்துகொண்டிருக்கும் மணிப்பூருக்குச் செல்ல மறுக்கிறார்.
ஆகவேதான், முன்பு இருந்த சூழ்நிலை என்பது வேறு – அதிலும் முன்பும் அவர்களுக்கு 37 சதவிகிதம் தான் ஆதரவு. இன்றைக்கு அவர்களுக்கு பலத்த எதிர்ப்புகள் இருக்கின்றன.

இந்தியா கூட்டணியிலிருந்து இவர் போய்விட்டார்; அவர் போய்விட்டார் என்று பல பொய்ப் பிரச்சாரத் தைக் கிளம்பி விடுகிறார்கள். தலைவர்களை நம்பி இந்தியா கூட்டணி கிடையாது. மக்களை நம்பித்தான் அக்கூட்டணி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள், நேரிடையாக பாதிக்கப்பட்ட மக்கள் – மக்கள் கட்சி வேறுபாடு இல்லாதவர்கள்.
ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் என்று சொன்னார்கள்; இரண்டு கோடி இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று சொன்னார்கள். ஆனால், அந்த உறுதிமொழிகள் எதுவும் காப்பாற்றப் படவில்லை.
உச்சநீதிமன்றம் தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வருகிறது!
உலக நாடுகள் மத்தியில், நம்முடைய பாது காப்பு வரிசை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இவற் றையெல்லாம் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
உச்சநீதிமன்றமும் வரிசையாக ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்துக் கொண்டிருக்கிறது.

”எந்த மாநிலத்தில் யார் வெற்றி பெற்றாலும், நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்; காரணம் என்னவென்றால், எல்லோரையும் விலைக்கு வாங்குவோம்” என்று கூசாமல் சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் எளிய மக்கள், சாதாரண மக்கள்கூட நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
திரும்பத் திரும்ப அவர்கள் கொடுக்கின்ற விளம் பரங்களைப் பார்த்து மக்கள் ஏமாறமாட்டார்கள்.

”இந்தியா ஒளிர்கிறது” என்றபொழுதும்
வெற்றி பெறவில்லை; இன்றைக்கும் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை!

வாஜ்பேயியும், அத்வானி ஆகியோர் ஒன்றியத் தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபொழுது, ”இந்தியா ஒளிர்கிறது”, ”இந்தியா ஒளிர்கிறது” என்று தொடர்ச்சி யாக விளம்பரங்கள் செய்தார்கள். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாயின.
ஆனால், அன்றைக்கு எப்படி அவர்கள் வெற்றி பெறவில்லையோ, அதேபோலத்தான் இன்றைக்கும் ஏற்படும். நிச்சயமாக இந்தியா கூட்டணிதான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப் பெரும்பான்மை யான இடங்களில் வெற்றி பெறும்.

உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் சண்டை என்று சொன்னார்கள். சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. கதவைத் திறந்து வைத்திருந்தாலும், யாரும் உள்ளே போவதற்குத் தயாராக இல்லை
பீகாரைப் பொறுத்தவரையில், நிதிஷ்குமார் ஒற்றையாகப் போயிருக்கிறார், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக. அங்கேயும் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில், கதவை சாத்தி நீண்ட நாள்களாகி விட்டன. பா.ஜ.க. கதவைத் திறந்து வைத்திருந்தாலும், யாரும் உள்ளே போவதற்குத் தயாராக இல்லை. அதே நிலைதான் காஷ்மீரில் என்பது உங்களுக்கெல்லாம் தெளிவாகத் தெரியும்.

மீண்டும் பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்பதுதான் எங்களுடைய உறுதியான கருத்து!

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது, மக்கள் கொந்தளிப்பு என்பது நாடு முழுவதும் இருக் கின்ற காரணத்தினால், ஒன்றியத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையப் போவதில்லை. எவ்வளவுப் பிரச் சாரப் புழுதியை அவர்கள் வாரி இறைத்தாலும், எவ் வளவு பணத்தை வாரி இறைத்தாலும், எவ்வளவு அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும், மீண்டும் அவர்கள் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்பதுதான் எங்களுடைய உறுதியான கருத்தாகும்.
இது எங்களுடைய ஆசை அல்ல; வாதத்தோடு, ஆதாரத்தோடான கருத்தாகும்.

யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; ஆனால், கொள்கையை முன்னிறுத்தவேண்டும்!

செய்தியாளர்: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறாரே, அதை நீங்கள் எப்படி பார்க் கிறீர்கள்?
தமிழர் தலைவர்: யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். கட்சியைத் தொடங்குவது என்பது மிகச் சுலபம். இரண்டு பேர் இருந்தால் போதும்.
என்ன கொள்கை என்பதை முதலில் சொல்ல வேண்டும்.
கொள்கையை முன்னால் வைத்து, கட்சியைப் பின்னால் வைக்கவேண்டுமே தவிர, கொள்கையைப் பின்னால் சொல்கிறேன் என்று சொல்லக்கூடாது.
முதலில் கொள்கையைச் சொல்லட்டும். பிறகு கருத்துத் தெரிவிக்கிறோம்.
ஏனென்றால், தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன; இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் கட்சியைத் தொடங்கலாம். அது அவரவர் உரிமையாகும்.
ஆனால், அவர்களுக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறதா? இல்லையா? என்பது கொள்கையைப் பொறுத்ததுதான்.
கொள்கையை அவர் அறிவிக்கட்டும்; பிறகு அவரை ஆதரிப்பதா? வரவேற்பதா? அல்லது கண்டிப்பதா? என்பதைப்பற்றி பிறகு தெரிவிக்கின்றோம்.

சூரியன் மேற்கே உதித்தாலும்,
திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காது!

செய்தியாளர்: திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா? ஏனென்றால், புதியவர்கள் எல்லாம் தேர்தலில் போட்டியிடு கிறார்களே?
தமிழர் தலைவர்: சூரியன் மேற்கே உதித் தாலும், திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காது. அப்படி அது நின்றால், அது திராவிடர் கழகமாக இருக்காது.

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.

No comments:

Post a Comment