நாட்டின் பிரதமர் வந்து பார்க்கிறார்… வெறும் பார்வை மட்டும்தான், புன்னகையில்லை; தமிழ்நாட்டுக் கட்சிகளின் தலைவர்கள் வந்து பார்க்கிறார்கள்… வெறும் மவுனப் பார்வைதான், மகிழ்ச்சியில்லை. மற்ற மாநிலத் தலைவர்கள் வந்து பார்க்கிறார்கள்… அப்போதும் அதே நிலைதான், களிப்பில்லை. ஆனால், தன் கட்சிக்காரர்களைக் கண்டதும் அவருக்குத் தானாக முகம் மலர்ந்தது; புன்னகை துளிர்த்தது; கை மெல்ல உயர்ந்தது; அசைந்தது. அப்படி, அவர்களின் வாழ்த்து மழையைப் பெற்றவர் வேறு யாருமல்ல, தமிழ்நாட்டின் தவப் புதல்வனாக இருந்து வாழ்ந்து மறைந்த தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான். அவருடைய பிறந்த நாள் அன்று (3.6.2018) தன்னுடைய கோபாலபுர வாசலில் குழுமியிருந்த தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றார். சமூக வலைதளங்களிலும் #hbdkalaignar95 என்ற ஹேஷ்டேக்கும் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
“ஒரு கட்சியின் ஆயுள், அதன் அடிமட்டத் தொண்டர்களிடத்தில் தான் இருக்கிறது’ என்பதை நன்கறிந்தவர், கலைஞர். அதனால்தான் அவரால் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இல்லாத காலத்திலும் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடிந்தது. மக்கள் கூட்டத்தைப் பார்ப்பதில் கலைஞருக்கு அலாதிப் பிரியம்: அளவில்லா உற்சாகம். அதனால்தான் அவர் வெளி மாநிலங்களுக்குச் சென்றதைத் தவிர்த்து, தமிழ்நாட்டுக்குள் எங்கு பயணம் செய்தாலும் பெரும்பாலும் சாலை வழியாகவோ அல்லது ரயிலிலோதான் செல்ல விரும்புவார். சாலை வழியாகச் சென்றால், ஆங்காங்கே காரை நிறுத்தி கட்சிக்காரர்களைப் பார்த்து கையசைத்துச் செல்வார். இப்படியான தொடர்பை கட்சித் தொண்டர்களிடம், தன் இறுதி நாள்வரை அவர் வைத்திருந்தார். அதனால்தான் கட்சியினரும் மறைந்த மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவுக்கு அடுத்து கலைஞரை இதயத்தில் சுமந்திருந்தனர்.
கலைஞர் வாழ்ந்த காலம் இந்தியாவுக்கே ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், அவருடைய இலக்கியங்களும் பேச்சுகளும், எழுத்துகளும் இன்னும் எத்தனையோ இளைஞர்களுக்கு உந்து சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை. ‘முரசொலி’ அலுவலகத்துக்கு 60 வயது மதிக்கத்தக்க அடிமட்டத் தொண்டர் ஒருவர் வந்தார். அவர், கட்சிச் செய்தி ஒன்றைப் பிரசுரிப்பதற்காக ஆசிரியர் குழு அறைக்குள் நுழைகிறார். அதற்கு முன், தன் காலணிகளைக் கழற்றி வெளியே விட்டுவிட்டு உள்ளே நுழைகிறார். அவர். அதைப் பார்த்த ஆசிரியர் குழுவினர், “பரவாயில்லை. காலணிகளைப் போட்டுக்கோண்டே உள்ளே வாங்க” என்கின்றனர்.
அதற்கு அந்த நபர், “தலைவர் வந்து போகும் இடம் இது. இந்த இடத்துக்கு நான் மதிப்பு தரவேண்டும்” என்றார். அதைக் கேட்டு ஆசிரியர் குழுவினர் நெகிழ்ந்தனர். தலைவர்மீது எவ்வளவு பக்தி வைத்திருக்கிறார் என்பதைக் கண்டு வியந்துபோயினர். எதையும் எதிர்பார்க்காமல், எந்தப் பலனையும் அடையாமல் இப்படிப்பட்ட தொண்டர்கள் கட்சியில் இருந்ததால்தான், தொடர் தோல்விகளுக்குப் பிறகும் அரியணை ஏறியவர், கலைஞர். அன்று, அவர் போட்டுக்கொடுத்த அடித்தளமே, இன்று தி.மு.க வெற்றிவாகை சூடுவதற்கும் ஏதுவாக இருக்கிறது.
அதேநேரத்தில், தன்னை எதிர்க்கும் எதையும், எதிர்க்கும் வகையிலேயே கலைஞர் எதிர்கொள்வார். கருத்தைக் கருத்தாலும், எழுத்தை எழுத்தாலும், பேச்சைப் பேச்சாலும் சந்தித்து பதிலளிப்பார். ஒருமுறை, ‘இந்து என்றால் யார்’ என்பது பற்றி கலைஞர் சொன்ன கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அப்போது இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன், ‘கலைஞரைச் சந்தித்து பகவத் கீதை நூலைத் தரப்போகிறேன்’ என்று அறிவித்துவிட்டு கோபாலபுரத்துக்குச் சென்றார். இதை அறிந்த, செய்தியாளர்கள் கோபாலபுரத்தில் குவிந்தனர்.
அங்கு ஓர் அசாதாரணமான சூழல் நிலவியது. ராமகோபாலன் வந்தார். வந்தவர் கலைஞரைச் சந்தித்து பகவத் கீதை நூலைக் கொடுத்தார். அப்போது அங்கு ஒரு ட்விஸ்ட் நடந்தது. அது, பகவத் கீதையை வேறொரு கோணத்தில் பார்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ என்ற புத்தகத்தை ராமகோபலனுக்கு பதிலாகத் தந்தார் கலைஞர். இப்படி நயமாக, நாகரிகமாக எதிர்ப்புகளை எதிர்கொண்டவர் கலைஞர். எதிரிகளை வீழ்த்துவதில் மட்டுமல்ல… எந்தச் சமயத்திலும் உடனடியாக நகைச்சுவை உணர்வுடன் பேசுவதில் அவருக்கு ஈடு இணை கிடையாது.
ஒருமுறை, கவிக்கோ அப்துல் ரகுமான் மணிவிழா சென்னை ராஜாஜி ஹாலில் நடந்தது. அந்த விழாவில் பேசிய ஒருவர், “ஒரு பேச்சாளர் மேடைக்கு முன்னால் இருப்பவர்களை, தன்னைவிட அறிவு குறைந்தவர்களாகக் கருதிப் பேச வேண்டும். அப்போதுதான் நன்றாகப் பேச முடியும்” என்றார். இதைக் காதில் வாங்கிக்கொண்டு இறுதியாகப் பேசிய கலைஞர், “ ‘தனக்கு முன்னால் இருப்பவர்களை அறிவு குறைந்தவர்களாகக் கருத வேண்டும்’ என்று நண்பர் குறிப்பிட்டார். நல்லவேளை, நாங்கள் அவருக்குப் பின்னால் (விழா மேடையில்) உட்கார்ந்திருந்தோம்” என்றதும் அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.
அதேபோல் திருமண நிகழ்வு ஒன்றில் பேசிய கலைஞர், “திருமணம் ஆகாத ஆண்களை ‘பேச்லர்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆனால், சில ஆண்கள் திருமணம் ஆனாலும் ‘பேச்சிலர்’தான். அதாவது ‘சில ஆண்கள் திருமணத்துக்குப் பிறகு பேச்சு இலர்’, பேச்சு இல்லாமல் போய்விடுவார்கள்” என்று சொன்னதும் சிரிப்பொலிக்குக் கேட்கவா வேண்டும். இப்படி, அனைத்துத் துறை ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞரின் இழப்பு தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பே!
– ப.சுப்ரமணி, (விகடன்.காம் ஜூன் 3, 2019)
No comments:
Post a Comment