தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தமிழர் தலைவரை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளர் த. சந்திரசேகரன் தமிழர் தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து அன்போடு வரவேற்றார். விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்த கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளரும், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான த. சந்திரசேகரனுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தும், நிழற்படம் வழங்கியும் வரவேற்றார். நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரையாற்றினார்.
புதுக்கோட்டை, பிப். 10 புதுக்கோட்டை நகர் மன்றத்தில் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் 23ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு சுற்றுச் சூழல்துறை, காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை வகித்தார். திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா அனைவரையும் வரவேற்றார். கவிநாடு கண்ணன் கவிதை வாசித்தார். புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, நகர் மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, கீரை.தமிழ்ராசா, திராவிடர் கழகப் பேச்சாளர் காரைக்குடி என்.ஆர்.எஸ். புஜீராட்லா, மருத்துவர் இளையராசா, திமுக இளைஞரணி மாநிலப் பொறுப்பாளர் சு.சண்முகம், மேனாள் நகர் மன்றத் துணைத் தலைவர் நைனாமுகம்மது, நகர் மன்ற உறுப்பினர்கள் சுப.சரவணன், செந்தாமரை பாலு, சாத்தையா, பழனிவேல், கவிவேந்தன், சந்தோஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர் நந்தலாலா….
கவிஞர் நா.முத்துநிலவன், தமிழ்-தமிழர் திருநாள் என்ற தலைப்பிலும், கவிஞர் நந்தலாலா திருவள்ளுவர் திருநாள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை திமுக இலக்கிய அணிச் செயலாளர், மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் முன்மொழிந்து வரவேற்று பேச அழைத்தார். ஆசிரியர் அவர்கள் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் செயல்பாடுகளையும், செயல்பட வேண்டிய விதங்கள் குறித்தும், தொடர்ந்து நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கமாகப் பேசினார்.
வரவேற்பு….
திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் வழியில் திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் அருகில் கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் த.சந்திரசேகரன், திராவிடர் கழக பொறுப்பாளர்கள் புதுக்கோட்டை மு.அறிவொளி, அறந் தாங்கி க.மாரிமுத்து ஆகியோர் தலைமையில் தோழர்கள் வரவேற்று ஊர்வலமாக ரோசா இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரம்கூட ஓய்வெடுக்காமல் ஆசிரியர் அவர்கள் அங்கு தம்மைத் தேடி வந்த தோழர்கள், தொண் டர்கள், முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது ஆசிரியர் அவர்களுக்கு பயனாடையும், புத்தகங் களும் வழங்கியதோடு ‘விடுதலை’ சந்தாக்கள், பெரியார் பெருந்தகையாளர் நன்கொடைகள் வழங்கி சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பும் நடந்தது.
விழா மேடைக்கு வந்தபோது அமைச்சர; மெய்யநாதன் உள்ளிட்ட அனைவரும் அளித்த நினைவுப் பரிசுகளையும், பயனாடைகளையும் பெற்றுக் கொண்ட தமிழர் தலைவர் அனைவருக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது கையால் பயனாடைகள் அணிவித்துப் பெருமைப்படுத்தினார்.
ஆசிரியர் அவர்கள் தனது வயதையும் முதுமையையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களிடம் வாழ்த்துப் பெறும் போதும், மற்றவர்களை வாழ்த்தி பாராட்டிய போதும் நீண்ட நேரம் நின்று கொண்டே அனைத்தையும் செய்த செயல்கள் அனைவரையும் நெகிழச் செய்தது.
No comments:
Post a Comment