திருச்சி,பிப்.5- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.கலைவாணர் அரங்கில் 03-02-2024 (சனிக்கிழமை) காலை 10.00 மணி அளவில் மழலையர் பிரிவின் யூ.கே.ஜி. மாணவர்களுக்கான 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கலாச்சாரத் திருவிழா நிகழ்வும் நடைபெற்றது.
பள்ளியின் முதல்வர் டாக்டர்.க.வனிதா முன்னிலை வகிக்க, இலண்டன் ‘பாமுக’த் தொலைக்காட்சி மற்றும் நெதர்லாந்து சூரிய தமிழ் தொலைக்காட்சியின் மரபிலக்கணப் பேராசியரும், சிறந்த கவிஞருமான பாவலர் டாக்டர். சரஸ்வதி பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், பள்ளியின் மழலையர் பிரிவு ஆசிரியை கவுரி வரவேற்புரையாற்றி நிகழ்விற்கு வந்திருந்தோரை வரவேற்றார்.
தொடர்ந்து பள்ளியின் மாணவ, மாணவியரின் வரவேற்பு பரத நடனம், எல்.கே.ஜி மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவியர் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆடிய பாராம்பரிய கண்கவர் நடனங்கள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. தொடர்ந்து சிறப்பு விருந்தினருக்குப் பள்ளி முதல்வர் பயனாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்வில் பேசிய சிறப்பு விருந்தினர், மழலையர் பிரிவு மாணவர்களுக்கான இந்த பட்டமளிப்பு விழாவில் தான் கலந்து கொண்டது பெரும் மன நிறைவைத் தருவதாகக் கூறியதோடு, பெற்றோர் களுக்கு மன நெகிழ்வைத் தருகின்ற நிகழ்வாக இந்த விழா இருப்பதாகவும், அதற்காக, இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்த பள்ளியின் நிறுவனர், தாளாளர், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகப் பேசினார், மேலும், “இன்றைய சூழலில் இளைய தலைமுறையினரின் அலைபேசி பயன்பாடு மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்களின் பங்கேற்பு முதலியவற்றைப் பெற்றோர்கள் கண்காணித்து, அவர்களை நல்வழிப்படுத்துவதோடு, துரித உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தெரியப் படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிட்டாலே பிரச்சினைகள் பெருமளவில் குறையும் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாணவர் களுக்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர் உறுதிமொழி வாசிக்க, யூ.கே.ஜி மாணவர்கள் அதனை வழி மொழிந்தனர்.
பின்னர்,பள்ளியின் யூ.கே.ஜி மாணவர்கள் 64 பேருக்கு பட்டமளிப்புச் சான்றிதழ் களைச் சிறப்பு விருந்தினர் வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்வின் நிறைவாக பள்ளியின் மழலையர் பிரிவு ஆசிரியை, ஹெலன் மேரி நன்றியுரை நவில, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சியைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் செல்வி.பரிமளசிறீ மற்றும் செல்வி.தக்சயா ஆகியோர் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.
இவ் விழாவில், யூ.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளைப் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment