திருவள்ளுவர் சிலைக்கருகில் ராமன் கொடியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 9, 2024

திருவள்ளுவர் சிலைக்கருகில் ராமன் கொடியா?

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றும், ‘எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’ என்றும், ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்றும் உலக மானுடத்திற்கு ஒப்பற்ற உயர் சிந்தனையின் மணத்தைப் பரப்பிய திருவள்ளுவருக்கு ஒரு கூட்டம் காவி சாயம் பூசப் புறப்பட்டுள்ளது.
ஆளுநராக இருக்கக் கூடிய ஒருவரே காவி சாயம் பூசக் கிளம்பி விட்டார். அவர் காவி சாயம் பூசுகிறார் என்றால், அதற்கு முன் அவர் பிரச்சாரம் செய்த ஸனாதனத்தையும் தான் இணைத்துப் பார்க்க வேண்டும்.
இப்பொழுது வந்துள்ள ஒரு செய்தி – 133 அதிகாரங்களை உள்ளடக்கிய திருக்குறளைத் தந்த திருவள்ளுவருக்கு முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் குமரி முனைக் கடலில் 133 அடி உயர சிலையை எழுப்பினார். விவேகானந்தர் சிலைக்கு அருகே திருவள்ளுவர் சிலையா என்று ஆத்திரம் கொண்ட ஒரு கூட்டம் – இப்பொழுது ஒன்றியத்தில் ஒரு காவி ஆட்சி நடக்கிறது என்ற முட்டாள்தனமான தைரியத்தில் திருவள்ளுவர் சிலைக்கு அரகே ராமன் உருவம் பொறித்த கொடிக் கம்பத்தை- இரவோடு இரவாக நிறுத்தினர்.

திராவிடர் கழகத் தோழர்களும், பல்வேறு கட்சியினரும் கட்சிகளைக் கடந்த தமிழ் அன்பர்களும் போர்க் கொடி உயர்த்த, காவல்துறை தலையிட்டு அந்தக் கொடி அகற்றப்பட்டது. அத்தோடு வாலைச் சுருட்டிக் கொண்டு ஒழுங்காக இருக்க வேண்டுமல்லவா! ஆத்திரக்காரனுக்கு அதுவும் மதவெறி பிடித்த ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற வகையில், குமரி திருவள்ளுவர் சிலைக்கு அருகே காவிக் கொடியை ஏற்றியுள்ளனர்.
தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால், மானமுள்ள ஆயிரம் பேர்களுடன் போரிடலாம். ஆனால் மானமற்ற ஒரே ஒருவனுடன் போரிட முடியாது. அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள், காவல்துறை தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்த்த பிறகும், மறுநாள் அதே இடத்தில் காவிக் கொடியை ஏற்றுபவர்கள் காலிகள் அல்லாமல் வேறு என்னவாம்!

உலகில் அதிக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது (பைபிளுக்கு அடுத்து) திருக்குறள் என்பதால் அவ்வளவு ஆத்திரம்!
ஜெகத் குரு என்று பார்ப்பனர்கள் தலைமீது தூக்கி வைத்துக் கூத்தாடும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி – ஆண்டாளின் ‘திருப்பாவையில் குறிப்பிட்ட “தீக்குறளைச் சென் றோதோம்!” என்ற வரிக்குத் தீய திருக்குறளைச் சென்று ஓத மாட்டோம் என்று பொருள் கூறி, தன் இனப் பார்வையைக் காட்டவில்லையா?
குறளை என்றால் கோள் சொல்லுதல் என்ற ஒரு பொருள் உண்டு என்ற அடிப்படைத் தெரியாதவர்கள் எல்லாம் அவர்களுக்கு ஞானகுரு – ஜெகத்குரு.
அந்த சங்கராச்சாரியார்தான் அப்படி சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார் என்றால் – இரவோடு இரவாக மடத்தைவிட்டு ஓடிய அன்றைய ஜூனியர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?

“நல்ல குணம் வளர அறத்துப் பாலில் வள்ளுவர் என்ன சொல்லிக் கொடுத்தாரோ, அதைச் சொல்லிக் கொடுத்தால் போதும் – வேதத்தின் சாரம் அதிலுள்ளது. திருக்குறளில் பொருட்பால், காமத்துப்பால் முதலியவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காமத்துப் பாலை இந்தக் காலத்துச் சினிமாக்களே சொல்லிக் கொடுத்து விடுகின்றன” (தினமணி 6.3.1982) என்று சொன்னவர்தானே ஜெயேந்திர சரஸ்வதி.
திருக்குறளில் அறத்துப் பாலைச் சொல்லிக் கொடுத்தால் போதுமாம் – அவைகூட வேதத்தின் சாரம் தானாம்.
திருக்குறளுக்கு உரை எழுதினாரே பரிமேலழகர் – அந்தச் சிகாமணி என்ன எழுதினார்?
“திருக்குறளில் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்” என்கிறார்.
எப்படி இருக்கிறது. சந்தனமும், சாணியும் ஒன்று என்று கூடச் சொல்வார்கள். பஞ்ச கவ்யத்தில் மாட்டு மூத்திரத்தையும் சாணியையும் கலந்து குடிக்கச் சொல்லும் குரூர மதியாளர்கள் ஆயிற்றே!

பிறப்பினால் பேதம் பேசும் மனுதர்மம் எங்கே? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் எங்கே?
குறளின் மேன்மையை கருதித்தானே தந்தை பெரியார் முதன் முதலில் சென்னையில் 1949இல் மாநாடு நடத்தினார். திருக்குறளை அச்சில் போட்டு மலிவான விலைக்கு மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
“நீங்கள் என்ன சமயத்தவர் என்று கேட்டால் “வள்ளுவர் சமுதாயம்” என்று சொல்லுங்கள் – உங்கள் நெறி என்னவென்றால் ‘குறள் நெறி’ என்று கூறுங்கள்” (‘விடுதலை’ 18.4.1950) என்று சொன்னவர் தந்தை பெரியார்.

திருக்குறளை ஏற்றுக் கொண்ட மக்கள் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும், புராணங்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்ற ஆத்திரத்தில் பார்ப்பனர்கள் திருவள்ளுவரையும், அவர் யாத்த திருக்குறளையும் வாய்ப்புக்கிட்டும் போது எல்லாம் சிறுமைப் படுத்துகிறார்கள்.
குமரிமுனையில் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் ராமன் உருவம் உள்ள கொடியைப் பறக்க விடுவதன் பின்னணி இதுதான்.
“பார்ப்பான் பால் படியாதீர் – பார்ப்பான் சொல்லுக்குக் கீழ்ப் படியாதீர்!” என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகளை மீண்டும் ஒருமுறை அசை போட்டுப் பாருங்கள் – விவரம் புரியும்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தும் சம்பந்தப் பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்பதில் அய்யமில்லை.

No comments:

Post a Comment