தகுதி – திறமை என்று பேசப்பட்ட நீட் தேர்வில் நடைபெற்ற தில்லுமுல்லு – ஆள்மாறாட்டம்குறித்து வழக்குத் தொடரப்பட்டது
உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்விக் கணைகளால்- வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால்!
சமூகநீதி அல்ல; சாதாரண நீதியே நமக்குக் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது!
இதையெல்லாம் மாற்ற முடியுமா? என்று சொன்னால், முடியும், மாணவர்கள் நினைத்தால், இளைஞர்கள் நினைத்தால் நிச்சயமாக முடியும்!
சென்னை, பிப்.7 தகுதி – திறமை என்று பேசப்பட்ட நீட் தேர்வை எழுதியவர்கள் வட நாட்டில் முறையாகத் தேர்வாகவில்லை. ஆள்மாறாட்டம், தில்லுமுல்லுகள் நடைபெற்ற தையும் கண்டுபிடித்து விட்டார்கள். இதுபற்றியெல்லாம் கேள்வி கேட்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட வுடன், வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற நீதிபதி 14 விஷயங்களை எடுத்துக்காட்டி, இதற்கெல்லாம் என்ன பதில் என்று கேட்கிறார். உச்சநீதி மன்றத்திலிருந்து அடுத்த நாளே உத்தரவு வருகிறது; இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்று. சமூகநீதி அல்ல; சாதாரண நீதியே நமக்குக் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இதையெல்லாம் மாற்ற முடியுமா? என்று சொன்னால், முடியும், மாணவர்கள் நினைத்தால், இளைஞர்கள் நினைத்தால் நிச்சயமாக முடியும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் – கடமையும்!’’ -திராவிட மாணவர் கழகத்தின் சிறப்புக் கருத்தரங்கம்
கடந்த 1-2-2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிவேகள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும்- கடமையும்‘’ -திராவிட மாணவர் கழகத்தினர் நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப் புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:-
தந்தை பெரியாருக்குப் பிறகு 76 ஆவது,
90 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்!
அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம்; அதற்கடுத்து 69 சதவிகிதத்திற்காக 76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம். அதற்குப் பிறகு 90 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம். அதுவும் தந்தை பெரியாருக்குப் பிறகு 76 ஆவது, 90 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்.
பல்கலைக் கழகங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. வெறும் எஸ்.சி., எஸ்.டி., சமூகத் தினருக்கு மட்டுமே என்று சொன்னார்கள். ஆனால், அதையும் நிரப்புவதில்லை. ஓ.பி.சி. என்று சொல்லக்கூடிய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் கிடையாது என்றனர்.
அன்றைக்கு மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் என்று ஒரு தடையை உண்டாக்கி வைத்திருந்தார்கள். இன்றைக்கு நீட் தேர்வைக் கொண்டு வந்தார்கள்.
ஆனால், நீட் தேர்வைப்பற்றி சொல்ல முடியாத அசிங்கங்கள் நடைபெற்று வருகின்றன. எங்கே பார்த்தாலும் ஆள்மாறாட்டம் நடைபெற்று, வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன.
தகுதி, திறமை இல்லாதவர்கள் என்று முத்திரை பதித்து, அவர்களுடைய இடங்களை முன்னேறிய ஜாதிக்காரர்களுக்குக் கொடுத்துவிடலாமாம், அந்த ஆண்டே!
‘‘கேரி பார்வர்டு” என்று சொல்லி, எத்தனை இடங்கள் காலியாக இருக்கிறதோ, மூன்றாண்டு வரையில், காக்க வைத்து, இந்த ஆண்டு கிடைக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு கிடைக்கவேண்டும். கிடைப்பதற்குரிய அளவிற்கு வாய்ப்புகளை உண்டாக்கவேண்டும் அல்லவா!
போட்டி தேர்வு நடத்துகிறார்கள் – மாற்றுத் திறனாளி களுக்கு ஓட்டப் பந்தயம் வைக்கிறார்கள். செயற்கைக் கால்கள் பொருத்திக் கொண்டவர்களை பயிற்சி பெற்ற வர்களோடு போட்டி வைத்தால், அது சமப் போட்டியாக இருக்க முடியுமா? என்றால், முடியாது.
இட ஒதுக்கீடு என்றால் என்ன?
சோசியலி ஹான்டிகேப்டு!
அதற்காக என்ன செய்வார்கள் என்றால், ‘ஹான்டிகேப்டு’ என்று வாய்ப்பு கொடுப்பார்கள். போட்டி தொடங்கும் இடத்திலிருந்து நூறு அடி முன்னால் நிறுத்துவார்கள். இது பிசிகலி ஹான்டிகேப்டு (உடல் ரீதியாக இருக்கக் கூடிய குறைபாடு). இட ஒதுக்கீடு என்றால் என்ன? சோசியலி ஹான்டிகேப்டு.
அப்படி கொடுக்கக்கூடிய அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து, ஆத்திரத்தோடு, ‘‘உங்களுக்குத் தகுதி இல்லை, திறமை இல்லை” என்று சொல்கிறார்கள்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையில் எத்தனை தேர்வு வைத்திருக்கிறார்கள் தெரியுமா?
அய்ந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு
எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு
பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு
பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் பொதுத் தேர்வு.
வீட்டிற்கு வீடு பிரச்சாரம் – திண்ணைப் பிரச்சாரம்!
இதையெல்லாம் வீட்டிற்கு வீடு பிரச்சாரம் செய்ய வேண்டும்; உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மக்கள் எங்கே கூடுகிறார்களோ, அங்கே பிரச்சாரம் செய்யவேண்டும் நம் தோழர்கள்!
மேற்சொன்ன தேர்வுகளில் மதிப்பெண் பெற்று வந்தாலும், மேற்படிப்பிற்கு அந்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டர்களாம்!
பிறகு எதற்காக படிக்கவேண்டும்? நேரே கோச்சிங் சென்டருக்கே போய்விடலாமே!
எத்தனை முறை நாம் கேட்டிருக்கிறோம்?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒன்றியப் பட்டியல் (யூனியன் லிஸ்ட்), அதற்கடுத்தது மாநிலப் பட்டியல் (ஸ்டேட் லிஸ்ட்), இதற்கிடையில் இரண்டு அரசுகளுக்கும் உரிமையுள்ள ஒரு பட்டியல் – ஒத்திசைவுப் பட்டியல் (கன்கரண்ட் லிஸ்ட்) என்று இருக்கிறது.
அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
கல்வி நமக்குப் பொது என்று அழைக்கப்படக் கூடிய ஒத்திசைவுப் பட்டியலின்கீழ் இருக்கிறது. அதை முழுக்க முழுக்க ஒன்றிய அரசே எடுத்துக்கொண்டு, மாநிலங் களுக்கு உரிமை இல்லை என்று சொல்லி, ஒவ்வொரு நாளும் இட ஒதுக்கீடு உள்பட பலவற்றுக்குத் தடை சொல்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
ஒன்றிய அரசு நீட் தேர்வை கொண்டு வரும்பொழுது, தகுதி- திறமைக்காகத்தான் கொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது செய்துள்ள முரண்பாட் டைப் பாருங்கள். உங்களுக்கு எளிமையாகப் புரியவேண்டும் என்பதற்காக சொல்லுகிறேன்.
நீட் தேர்வில் ஜீரோ மார்க் வாங்கினாலும், மேற்படிப்பில் சேரலாமாம்!
நீட் தேர்வில் ஜீரோ மார்க் வாங்கினாலும், மேற்படிப்பில் சேரலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிறகு ஏன் பயிற்சி முகாமிற்குப் போகவேண்டும்? ஒன்றுக்கொன்று எவ்வளவு பெரிய முரண்பாடு?
இதில் ரகசியம் இருக்கிறது; சூட்சமம் இருக்கிறது. யாருக்கோ உதவி செய்யவேண்டும் என்று நினைக் கிறார்கள். வட நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்கள் முறையாகத் தேர்வாகவில்லை. ஆள்மாறாட்டம் நடைபெற்றதையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதியின்
கேள்விக் கணைகள்!
இதுபற்றியெல்லாம் கேள்வி கேட்டு, உயர்நீதிமன் றத்தில் வழக்குப் போட்டவுடன், வழக்கு விசாரணை யின்போது உயர்நீதிமன்ற நீதிபதி 14 விஷயங்களை எடுத்துக்காட்டி, இதற்கெல்லாம் என்ன பதில் என்று கேட்கிறார்.
உச்சநீதிமன்றத்திலிருந்து அடுத்த நாளே உத்தரவு வருகிறது; இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்று.
சமூகநீதி அல்ல; சாதாரண நீதியே நமக்குக் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
இளைஞர்கள் நினைத்தால்
நிச்சயமாக முடியும்!
இதையெல்லாம் மாற்ற முடியுமா? என்று சொன்னால், முடியும், மாணவர்கள் நினைத்தால், இளைஞர்கள் நினைத்தால் நிச்சயமாக முடியும்.
நாங்கள் எல்லாம் மாணவர்களாக இருக்கும் பொழுது, அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் வருவதற்கு முன், அய்யா சொன்னார், ‘‘மாணவர் களே, வெளியே வாருங்கள்” என்றார். போராடிய பிறகுதானே, அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் வந்தது.
இதனால் நான் ஓராண்டு படிப்பை இழந்தேன். மறு படியும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தேன். ஏனென்றால், இந்தப் பிரச்சாரத்தை நாடு முழுவதும் செய்தேன். என்னுடைய படிப்பு எனக்கு மட்டும் பயனில்லை. அது எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்கிற பெரியாரு டைய தத்துவத்தினால், மாணவனாக இருந்தபொழுது ஈர்த்த ஈர்ப்பு – கடமை. அந்த சமுதாயக் கடமைதான் இப்பொழுது உங்கள் முன் இருக்கிறது.
குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தது நம்முடைய இயக்கம். இப்பொழுது ‘நீட்’ தேர்வு, ‘நெக்ஸ்ட்’ தேர்வு, ‘க்யூட்’ தேர்வு என்று கொண்டு வருகிறார்கள். நீட் வேண்டாமென்றால், க்யூட் தேர்வாம் – பூட்டைப் போடவேண்டும்; க்யூட் வேண்டாம், பூட்டுப் போடுங்கள் என்று பூட்டைத் தூக்கிக் காட்டுங்கள். தெருப் பிரச்சாரம் செய்து மக்களுக்குச் சொல்லுங்கள்.
இங்கே பேசியவர்கள் அமெரிக்காவில் கேள்வி கேட்டார்கள் என்று சொன்னார்களே, அமெரிக்காவில் எவ்வளவு பெரிய மோசடி செய்தார்கள் என்று புத்தகமே வெளிவந்திருக்கிறது.
‘‘The Tyranny of Merit’’
அமெரிக்காவில், இந்த மோசடி உலகளாவிய அளவிற்கு நடத்தியிருக்கிறார்கள் Merit and Efficiency (தகுதி – திறமை) என்கிற மோசடி.
இதை நீண்ட நாள்களுக்கு முன்பு வெட்ட வெளிச்ச மாக்கியவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியாருடைய அந்தப் பாடத்தைக் கேட்டு, அப்படியே உள்வாங்கிக் கொண்டு, அதைத் தன்னுடைய ஆட்சியில் நடைமுறைப் படுத்தியவர் பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் அவர்கள்.
‘‘உன் தகுதியும் தெரியும்; உனக்கு சொல்லிக் கொடுத் தவன் தகுதியும் தெரியும் போ!” என்று சொன்னவர் காமராஜர் அவர்கள்.
‘‘The Tyranny of Merit” சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த புத்தகம் இது. இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஹார்வர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர். தத்துவப் பேராசிரியரான அவருடைய பெயர் மைக்கேல் சாண்டேல்.
அவர்களுடைய சூழ்ச்சியைப் புரிந்து கொள்வதற்கே பெரியார் கண்ணாடி வேண்டும்!
நம்முடைய பிள்ளைகள் அதையும் தாண்டி படிக்கிறார்கள் என்றவுடன், நாங்கள் வைத்திருக்கின்ற அளவிற்கு நீங்கள் வரவில்லை என்றால், அந்த இடம் உங்களுக்குக் கிடையாது என்கிறார்கள். அதில்கூட ஒரு சூழ்ச்சி வலை; எல்லாமே சூழ்ச்சி வலைதான். இவர்களு டைய சூழ்ச்சியைப் புரிந்துகொள்வதற்கே பெரியார் கண்ணாடி வேண்டும். அதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று நாம் பிரச்சாரம் உள்பட செய்கிறோம்.
பக்தி என்பதைப் பயன்படுத்தி, பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள்.
புத்திக்கும் – பக்திக்கும் உள்ள வேறுபாடு!
பெரியார் மிக எளிமையாகச் சொன்னார்,
‘‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்;
புத்தி வந்தால், பக்தி போய்விடும்” என்று.
அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘‘கேள்வி கேட்காதே, நம்பு! நம்பு!! நம்பு!!!” என்று சொல் வதுதானே பக்தி!
‘‘கேள்வி கேள், கேள்வி கேள்” என்று சொல்வதுதானே புத்தி!
புத்திக்கும் – பக்திக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால், கருப்புக்கும் – வெள்ளைக்கும் இருக்கின்ற வித்தியாசம்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நம்மாட்கள் எல்லாம் படித்தால், தகுதி போயிற்று, திறமை போயிற்று என்று சொல்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டை நாம் அரும்பாடுபட்டு வாங்கிய பிறகு, இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில், ‘‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்” என்பதுதான் வரையறை.
ஆனால், இதற்கு நேர் விரோதமாக EWS என்று சொல்லி, பொருளாதார ரீதியாக என்று சூழ்ச்சி செய்து – ஒவ்வொரு இடத்திலும், உயர்ஜாதி நீதிமன்ற நீதிபதி களை நியமித்து, அவர்களும் அதற்கு வியாக்கியானம் சொல்லி, பல கோளாறுகளை செய்தார்கள்.
‘விடுதலை’, படிக்கின்ற தோழர்களுக்கு
இட ஒதுக்கீடுபற்றி இருக்கின்ற தெளிவு!
திராவிடர் கழகத் தோழர்களுக்கும், ‘விடுதலை’, படிக்கின்ற தோழர்களுக்கும் இட ஒதுக்கீடுபற்றி இருக்கின்ற தெளிவு – பேராசிரியராக இருக்கின்ற வர்களுக்குக் கூட இருக்காது.
எஸ்சி., எஸ்டி., ஓபிசி என்று தமிழ்நாட்டில். கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், ஓபிசி என்பதை இரண்டாகப் பிரித்து எம்பிசி, பிசி என்றாக்கினார்.
இதைத் தாண்டி O.C (ஓ.சி.,) என்று சொல்கிறார்கள். அதனுடைய விரிவாக்கம் Open Competition – திறந்த போட்டி. ஒன்றிய அரசாங்கத்தின் கணக்குப்படி 50 சதவிகிதம் என்றால், மீதம் உள்ள 50 சதவிகிதத்தை எல்லா ஜாதிக்காரர்களும் போட்டியிடக் கூடிய – திறமையின் அடிப்படையில். வெளிப்படையாக நாங்கள் விட்டுவிடுகிறோம். இதில் இட ஒதுக்கீடு கிடையாது – யார் முன்னால் வருகிறார்களோ, அவர்கள் பரிசு வாங் கட்டும் என்று Common for All – Open to All என்றார்கள்.
OC-Open Competition என்பதை Other Community என்று மாற்றினார்கள்!
கொஞ்சம் நாம் அசந்தவுடன் O.C. என்றால் Other Community என்று சொன்னார்கள். அந்த ஆபத்து நம்மாட்களுக்குப் புரியவில்லை. Other Community என்றால் என்ன அர்த்தம்?
(தொடரும்)
No comments:
Post a Comment