நிகரில்லா நிதி நிலை அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 21, 2024

நிகரில்லா நிதி நிலை அறிக்கை

தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த 19ஆம் தேதி நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் விசனமான விமர்சனத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்துத் தரப்பினராலும் நிகரற்ற நிதி நிலை அறிக்கை என்று கண்ணில் ஒத்திக் கொள்ளும் அறிக்கையாக மணக்கிறது.
ஓர வஞ்சனையோடு ஒன்றிய அரசின் வரி பகிர்மானம் ஒரு பக்கம் இடி – இயற்கைப் பேரிடரின் தாக்குதல் என்பது மற்றொரு பக்கம் இடி! கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் வைத்து விட்டுப் போன கடன் ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாய் என்பது நினைவிருக்கட்டும். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால்தான் “திராவிட மாடல்” அரசின் நிதி நிலை அறிக்கையின் நிகரற்ற தன்மை பளிச்சிடும்.
எடுத்த எடுப்பிலேயே இந்த நிதி நிலை அறிக்கையின் இலக்கு எத்தகையது என்பது பொன்னிழைகளால் சட்டம் போட்டு மாட்டப்பட்ட ஓவியமாக குளிர்ச்சியாக இருக்கிறது.

1. சமூகநீதி, 2. கடைக்கோடி தமிழர் நலன், 3. உலகை வெல்லும் இளைய தமிழகம், 4. அறிவு சார் பொருளாதாரம், 5. மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, 6. பசுமை வழிப் பயணம், 7. தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற ஏழிசையே ‘திராவிட மாடல்’ அரசின் இலக்கு என்று அறிவித்திருப்பது அருமை! அருமை!! இதையும் தாண்டி – தோண்டி எடுத்துச் சொல்வதற்கு ஏதும் இருக்க முடியாது.
மாநிலங்களுக்குத் தான் மக்கள் இருக்கிறார்கள். ஒன்றிய அரசுக்கென்று மக்கள் கிடையாது. இந்த நிலையில் மக்களின் அன்றாட வாழ்வின் பிரச்சினைகளை நேர் கொண்டு கவனிப்பது, சந்திப்பது என்பது பெரும்பாலும் மாநில அரசுகளைச் சார்ந்ததே!
மக்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களும், வளர்ச்சிப் போக்கும் பெருகும் நிலையில் மாநில அரசின் செலவினம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதனை அப்பட்டமான அரசியல் கண் கொண்டு பார்த்து விபரீதமான செயல்பாட்டில் மூழ்கும் மூர்க்கத்தனமான மதவெறி ஒன்றிய அரசின்கீழ் மாநிலங்கள் செயல்படுவது என்பது பனிமலையில் தலைகீழாக ஏறுவது போன்றதாகும்.

ஒன்றிய அரசின் நிதிப் பகர்வு மேலும் மேலும் அதிகரிப்பதற்கு பதில், குறைந்து கொண்டு போவது எந்த வகையில் நியாயமானது?
6.6 விழுக்காடாக இருந்த நிதிப் பகிர்வு 4.08 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மானியங்களிலும் வெட்டு விழுகிறது.
பேரிடர் காலங்களில் மாநில அரசுக்கு நிதி கொடுப்பதில்கூட ஈவு இரக்கமற்ற மனப்பான்மையை ஒன்றிய பிஜேபி அரசிடம் பச்சையாகவே பார்க்க முடிகிறது.
ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடுகிறார் – ஒன்றிய நிதி அமைச்சரும் பார்வையிடுகிறார் – ஒன்றிய அரசு அனுப்பி வைக்கும் அதிகாரிகளின் குழுவும் பார்வையிடுகிறது. உரிய நிதி அளிக்கப்படும் என்று உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது. ஆனால் பைசா காசுகூட இதுவரை அளிக்கப்படவில்லை என்பது சகிக்கவே முடியாத ஹிட்லரிசமாகும் – நாஜிசமும் ஆகும்.
இவ்வளவு இடர்ப்பாடுகளையும் தாண்டி சுமைகளையும் தூக்கி சுமந்து, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் நிதி நிலை அறிக்கை நேர்த்தியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது அசாதாரணம்!
எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனீயத்தின் கோரப்பிடியிலிருந்து மக்களை மீட்டு, கல்வி வளர்ச்சியில் மேலே மேலே பறந்து செல்வதற்கு ‘திராவிட மாடல்’ அரசு எல்லா வகையிலும் பெருங்கையை நீட்டுகிறது. புதுமைப் பெண் திட்டமாக இருந்தாலும் சரி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கும்கூட மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது எண்ணி எண்ணி கை தட்டி, வரவேற்றுப் பாராட்டத்தக்கதாகும். இந்தத் திட்டத்தின்கீழ் மூன்று இலட்சம் கல்லூரி மாணவர்கள் பயன் அடைவர்.

அய்.டி. என்றால் தமிழ்நாட்டில் சென்னைக்குத் தானே படை எடுக்க வேண்டும். இதில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது இவ்வாண்டு நிதி நிலை அறிக்கை!
சமீபத்தில் விழுப்புரத்தில் நியோ டைடல் பார்க்கை – நமது முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் தூத்துக்குடி, வேலூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர்ஆகிய இடங்களிலும் நியோ டைடல் பார்க் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு காலம் காலமாகக் கல்விக் கண் குத்தப்பட்டுக் கிடந்த மக்களின் வயிற்றில் பால்வார்த்த – தாய் உள்ளத்தை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு என்பது – கல்வி வளர்ச்சியில் மாபெரும் குதிரைப் பாய்ச்சலாகும். நீதிக் கட்சிப் பெருமான் வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்து மதிய உணவு திட்டத்திற்குக் கால்கோள் விழா நடத்தினார்.
தொடர்ந்து பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சியில் அது மேலும் வளர்ந்து தொடர்ந்த திராவிட இயக்க ஆட்சிகளில் சத்துணவுத் திட்டமாக மாறி, இன்றோ காலை சிற்றுண்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் என்பதன் அருமை – இப்பொழுது தெரியாது – பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் மறுமலர்ச்சியின் போதுதான் புரியும் – தெரியும்.

திராவிட இயக்கம் என்ன சாதித்தது என்று அற்பத்தனமாகக் கேள்வி எழுப்பும் பன்னாடைகள் இதற்குப் பிறகாவது புத்தி தெளிவது நல்லது.
தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, நகர்ப்புற வளர்ச்சிக்கு நிகராக ஊரக வளர்ச்சி என்று வளர்ச்சி நாயகமாக தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை விண்ணைத் தொடுகிறது.
ஒன்றிய அரசு அறிவு நாணயத்தோடு நிதிப் பகிர்வில் நடந்து கொண்டால், இன்னும் பல மடங்கு தமிழ்நாடு உச்சத்தின் முடியை எட்டியிருக்கும். என்றாலும் தடைகளைத் தாங்கும் தோள்கள் உண்டு என்ற முறையில் உன்னதமான நிதி நிலை அறிக்கை என்னும் அரும் விருந்தைப் படைத்த ‘திராவிட மாடல்’ அரசுக்கு – அதன் உன்னத முதலமைச்சருக்கு, நிதி அமைச்சருக்கு, அதிகாரிகளுக்கு நமது பாராட்டுகள் – வாழ்த்துகள்!
வெல்க ‘திராவிட மாடல்’ அரசு!

No comments:

Post a Comment