நாடாளுமன்றத்தில் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஜான்பிரிட்டோ “எங்கள் ராமன் காந்தி ராம்! உங்கள் ராமன் நாது ராம்!” என்று மிக அழகாக நேர்த்தியாகச் சொன்னார்; இந்தச் செய்தி வெளிவந்த அதே நாளில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தூத்துக்குடியில் பேசும்போது தமிழ் மண்ணுக்கே உரித்தான கருத்தைப் பளிச்சென்று சொன்னார்.
“இங்கே அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, ராமராஜ்ஜியம் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அவர்கள் உருவாக்கும் ராம ராஜ்ஜியம் என்பது யாருக்கும் எந்த உரிமையும் அற்ற மோடி ராஜ்யமாக, ஆர்.எஸ்.எஸ். ராஜ்யமாக இருக்கும். பஜ்ரங்தள் ராஜ்யமாகவே இருக்கும். தமிழ்நாடு நமது கனவு என்பது பெரியார் ராமசாமி ராஜ்யம், அதை இந்தியா முழுவதும் உருவாக்கிக் காட்டுவோம்” என்று உறுதிபடக் கூறினார்.
இது ஏதோ, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர், அதுவும் கனிமொழி அவர்கள் தந்தை பெரியார் கொள்கையால் மிகவும் ஈர்க்கப்பட்டவர் அந்த உணர்வில் அப்படிப் பேசி இருக்கலாம் என்று யாரும் கருதக் கூடாது.
அந்தக் கூற்றில் ஒரு சித்தாந்தக் கரு இழையோடுகிறது. ராம ராஜ்ஜியம் என்றால் அது வருணாசிரம ராஜ்ஜியம் – வருண தர்மத்திற்கு எதிராக சூத்திரன் சம்புகன் தவம் செய்தான் என்பதற்காக சூத்திரன் சம்புகன் சத்திரியன் சக்ரவர்த்தி ராமனால் வெட்டிக் கொல்லப்பட்டான்.
சூத்திரன் நேராகக் கடவுளை அடைய தவம் செய்யக் கூடாது. பிராமணனே அவர்களுக்குக் கடவுள் என்றுதான் அவர்களின் வேதமும் – சாத்திரமும் சொல்லுகின்றன.
இன்றைக்கு ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடிய நரேந்திரமோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி என்ன சொல்லுகிறது? ராமராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று வெளிப்படையாகக் கூறுகிறார்கள். 450 ஆண்டு கால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலத்தை இடித்து ராமன் கோயில் கட்டுகிறார்கள். 1800 கோடி ரூபாய் இதற்காகச் செலவழிக்கப்படுகிறது.
ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில் வருண தர்மம் – ஜாதி தர்மம் இருக்க முடியுமா? அந்தத் தர்மமே தங்கள் நோக்கம் என்று ஆட்சி நடத்த முடியுமா? – அதை அனுமதிக்கத்தான் முடியுமா?
இந்த நிலையில் இதனை முறியடிக்க ஒரு தத்துவம் தேவைப்படுகிறது. அதுதான் பெரியார் ராமசாமி ததத்துவம் சித்தாந்தம்! ஏதோ மேம்போக்கில் கனிமொழி எம்.பி. கூறினார் என்று யாரும் கருதக் கூடாது – அது ஆழமான கருத்தாக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்தாகும். ஸனாதனத்தை ஒழிப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னதும் இந்த அடிப்படையில்தான்.
இராமன் பிறப்பே வருணாசிரமத்தைக் காப்பதற்கே – பூதேவர்களை எதிர்க்கும் அசுரர்களை ஒழிப்பதற்கே விஷ்ணு அவதாரம் எடுத்தான் என்பதிலிருந்தே இராம அவதாரத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். மகன் இறந்தான் – பார்ப்பனர் ஒருவர் சக்ரவர்த்தி ராமனிடம் புகார் கூறுகிறான். தன் மகனின் அகால மரணத்திற்குக் காரணம் உன் ஆட்சியில் வருண தருமம் கெட்டு விட்டது – சம்புகன் என்ற சூத்திரன் வருண தருமத்திற்கு எதிராகத் தவம் இருப்பதால்தான் என் மகன் அகால மரணம் அடைந்தான் – இது அநியாயமல்லவா என்று அலறுகிறான். இராமன் தவமிருந்த சூத்திர சம்புகனின் தலையை வாளால் வெட்டிக் கொலை செய்கிறான்! என்ன ஆச்சரியம் செத்துப் போன பார்ப்பனன் வீட்டுக் குழந்தை உயிர் பிழைத்துவிட்டது.
இப்பொழுது விவரம் புரிகிறதா? சூத்திரன் தவம் என்பது ஒரு வகையான கல்வியே- சூத்திரனுக்கு கல்வியில் அருகதை கிடையாது – தண்டனைக்குரியது – என்ற ராமராஜ்ஜியத்தை வீழ்த்தும் எதிர் கொள்கைதான் பெரியார் ராமசாமியின் கொள்கை! அந்த ஆழமான கண்ணோட்டத்துடன் கனிமொழி எம்.பி. பேசி இருக்கிறார்.
இன்றைக்கும் படிக்கக் கூடாது என்ற சட்டம் இல்லாவிடினும், சூத்திரன் கல்வி வளர்ச்சிக்கு அவ்வப்போது முட்டுக்கட்டைப் போடுவது ராமராஜ்ஜியத்தை அமைக்கப் போவதாக கூறும் பிஜேபி ஆட்சிதானே!
நீட்டும் – EWSம், தேசிய கல்விக் கொள்கையும் எதைக் காட்டுகிறது? அன்று ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த கல்வித் திட்டத்தை தந்தை பெரியார் தலைமை தாங்கி ஒழித்துக் காட்டினார். அன்று ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வி திட்டமே தேசிய கல்வித் திட்டமாகவும், விஸ்வகர்மா யோஜனாவாகவும் இப்போது மீண்டும் வருகிறது என்றால் – இதனை வீழ்த்த பெரியார் ராமசாமி ராஜ்ஜியம் தானே மலர வேண்டும். அதைத் தான் கனிமொழி கூறியிருக்கிறார்.
அப்படியொன்றும் ராமன் உதாரண புருஷனும் அல்ல. “சக்ரவர்த்தி திருமகன்” நூலை எழுதிய ராஜாஜியாலேயே ராமனைக் காப்பாற்ற முடியவில்லையே?
திரு.க. சந்தானம் அய்யங்கார் “உத்தரராம சரித்திரம்” என்ற பெயரில் வடமொழி நாடகம் ஒன்றை எழுதினார். அந்நூலுக்கு ராஜாஜி வழங்கிய முன்னுரையில்:
“நானும் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்த்தேன். ஸ்ரீராமன் உலகத்திற்கே வழி காட்ட அவதரித்த கடவுள் – சீதையை அரும்பாடுபட்டு இலங்கையிலிருந்து கொண்டு வந்தான். ஊராரின் வம்புப் பேச்சைக் கேட்டு, சீதையைக் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்ற கொடுஞ் செயலை என் மனதிற்குள் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை” என்று எழுதி இருக்கிறார் ராஜாஜி.
(ஆதாரம்: திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு தீட்டிய “இதழ்கள்” – பக்கம் 60)
இராமபக்தர் ராஜாஜியாலேயே இராமனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நிகரற்ற பகுத்தறிவாளரான தந்தை பெரியார் கருத்தைக் கேட்கவும் வேண்டுமா!
அன்றைக்குப் பூதேவர்களைக் காப்பாற்ற ராமன் அவதரித்தான் என்றால் ‘பிராமணர்களாகிய பூதேவர்களின் ஆதிக்க மூலத்தை நிர் மூலம் செய்ய தந்தை பெரியார் அரும்பாடுபட்டு உழைத்து – தமிழ் மண் திராவிட மண் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார். இதுதமிழ்நாட்டோடு நில்லாமல் மற்ற மாநிலங்களிலும் பரவ வேண்டும் என்பதுதான் கனிமொழி எம்.பி.யின் கருத்து – எல்லா மாநிலங்களிலும் ஜாதி – தீண்டாமை – பார்ப்பன உயர் ஆதிக்கம் இருக்கத்தானே செய்கிறது.
“இன்றைய அரசியல் போராட்டம் என்பதே கம்யூனிஸ்டுகள் முதல் எல்லாக் கட்சிகளுக்கும் சமுதாயத் துறைத் தத்துவங்கள் தான் அடிப்படை லட்சியமே தவிர, மற்றபடி வாயால் சொல்வ தற்குக் கூட கொள்கைகள் கிடையாதே! அதாவது எதுவும் பார்ப் பனர் பார்ப்பனரல்லாதார் என்ற அடிப்படை கொண்டதுதான்!” என்றார் தந்தை பெரியார் (விடுதலை 22.5.1967).
இந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தில் சிபிஎம் உறுப்பினர் ஜான்பிரிட்டோ கூறிய கருத்தையும், கனிமொழி எம்.பி. கூறிய கருத்தையும் உள் வாங்கிப் பாருங்கள் – விவரம் விளக்கமாகவே புரியும்!
No comments:
Post a Comment