மாநகராட்சி வரலாற்றில்: முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, 10 மேம்பாலங்களைக் கட்டினார். சென்னை மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த மாநகரமாக இருந்தாலும், மேம்பாலங்களைக் கட்டுவது என்பது மாநகராட்சியின் வேலையல்ல. அது பொதுப்பணித் துறைதான் கட்டவேண்டும். ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் தான் கட்டவேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டுவார்கள். மாநகராட்சி கட்டிய வரலாறே கிடையாது.
ஆனால் 1996-லிருந்து 2001 வரைக்கும், அதற்குப் பிறகு 2006-இல் இருந்து தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மாநகரத்தின் மேயராக இருந்தபோது 10 மேம்பாலங்களைப் போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் கட்டவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளில் முனைப்புடன் இறங்கினார்.
ஆனால் 10 பாலங்களில் ஒரு பாலம் பெரம்பூரில் இருக்கக்கூடிய மேம்பாலம். அதில் சிறிது தொழில் நுட்பப் பிரச்சினை இருந்தது. அதனால், விரைவாக குறித்த நேரத்தில் கட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் சிறிது தடைபட்டது. ஆனால் மீதம் இருக்கக்கூடிய 9 மேம்பாலங்களையும் குறித்த காலத்தில் மட்டுமல்ல, குறித்த காலத்திற்கு முன்பே கட்டிமுடித்த பெருமை அன்று மாநகர மேயராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு உண்டு.
கடைசிப் பாலமான பெரம்பூர் பாலம் ஆட்சி மாற்றம் வந்த காரணத்தினால், அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எந்தத் தலைவர் அடிக்கல் நாட்டினாரோ அதே தலைவர் கலைஞர் அவர்கள் அந்தப் பாலத்தைத் திறந்து வைத்தார். சென்னை மாநகரத்தில் பாலங்கள் கட்டியபோது எவ்வளவு காலத்திற்குள் கட்டிவிடுவோம் என்று அந்தக் காலத்திற்குள் கட்டிமுடித்தார் – எந்த மதிப்பீட்டில் கட்டி முடிக்க வேண்டும் என்று கூறினார்களோ அதைவிடக் குறைவாக அந்தப் பாலத்தைக் கட்டிமுடித்தார்.
No comments:
Post a Comment