இந்தியாவில் வெறுப்பு அரசியல் 75% அதிகரிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

இந்தியாவில் வெறுப்பு அரசியல் 75% அதிகரிப்பு!

featured image

அமெரிக்காவிலிருந்து ‘‘இந்தியா ஹேட் லேப்” வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவல்!

வாசிங்டன், பிப்.28 2014இல் மோடி தலைமையி லான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல், வெறுப்புப் பேச்சுமூலம் வன் முறையைத் தூண்டும் நிகழ்வுகள், மசூதிகளில் இந்து மத பொருட்களைத் தேடுவதாகக் கூறி வன்முறையை கிளப்பும் நிகழ்வுகள் மிக மோச மான அளவில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், கடந்த 2023 இல் இந்தியாவில் முஸ்லிம்களை குறி வைத்து 668 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் பதிவாகியுள்ளதாக அமெரிக் காவின் வாசிங்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் “இந்தியா ஹேட் லேப்” எனும் நிறுவனம் தனது ஆய்வில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. “இந்தியாவில் வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘‘கடந்த 2023இல் இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து 668 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் பதிவாகி யுள்ளன.

இதில் 498 நிகழ்வுகள் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைச் சார்ந்து நேரடியாக 36 சதவீதமும் (329 நிகழ்வுகள்), லவ் ஜிஹாத், நிலம், ஹலால் உள்ளிட்டவை குறிப்பிட்டு நேரடி வன்முறை தூண்டும் பேச்சு 63 சதவீதமும் (420 நிகழ்வுகள்) அதிக ரித்துள்ளன. முஸ்லிம் வழிபாட்டுத் தலங் களை குறிவைக்கும் வகையிலான வெறுப்புப் பேச்சு 25 சதவீதமாக (169 நிகழ்வுகள்) உள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல்கள் நடை பெறவிருந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் உச்சத்தை எட்டி யது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்,”பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களே வெறுப்புப்பேச்சு நிகழ்வு களில் முதல் 10 இடங்களில் உள்ளன. மாநில வாரியாக மகாராட்டிரா (118), உத்தரப்பிரதேசம் (104), மத்தியப்பிரதேசம் (65), ராஜஸ்தான் (64), அரியானா (48), உத்தராகண்ட் (41), கருநாடகா (40), குஜராத் (31), சத்தீஸ்கர் (21) மற்றும் பீகார் (18) மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் அரங்கேறும் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளன. பாஜக ஆளும் மற்றும் ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஒப்பீட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடி யாக மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறி வைத் தும் வெறுப்பை பரப்பும் பேச்சுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் 78 சதவீதம் அரங்கேறி உள்ளன.

இதில் பாஜக பிரமுகர்கள்/பிரதிநிதிகளின் பங்கு 10.6 சதவீதம். அதுவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அக்கட்சியின் பிரமுகர் கள்/பிரதிநிதிகள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 27.6 சதவீதம் பேசியுள்ளனர். அமைப்பு ரீதியாக வெறுப்புப் பேச்சை பரப்புவதில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், சங் பரிவார், கோ ரக்‌ஷா தளம் உள்ளிட்ட அமைப்புகள் முன்னி லையில் உள்ளன.
மேலும், தெலங்கானா மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங், மகாராட்டிரா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிதிஷ் ராணா, விஎச்பி தலைவர் பிரவீன் தொகாடியா, தீவிர வலதுசாரி ஆதரவாளர் கஜல் சிங்காலா, சுதர்சன் நியூஸ் உரிமையாளர் சுரேஷ் சாவான்கே, சாமியார்களான யதி நரசிங்கானந்த், காளிசரண் மகாராஜ், சாத்வி சரஸ்வதி மிஸ்ரா ஆகிய 8 பேர் வெறுப்பைப் பரப்பும் வகையில் பேசுவதில் முதல் 8 இடத்தில் உள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை முஸ்லிம் விரோத வெறுப்பைத் தூண்டும் பொரு ளாக பாஜகவினர் பயன்படுத்தியுள்ளனர். போர் நடைபெற்ற காலகட்டமான அக்டோபர் 7 மற்றும் டிசம்பர் 31-க்கு இடையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக 193 வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் அரங் கேறியுள்ளது. மேலும் நூஹ் (அரியானா) வன் முறை நிகழ்வு போன்றவற்றை முன்வைத்தும் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment