பாவாணர் பிறந்த நாள் சிந்தனை (7.2.1902) ஆரியர் வருகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

பாவாணர் பிறந்த நாள் சிந்தனை (7.2.1902) ஆரியர் வருகை

featured image

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே, ஆரியர், இந்தியாவிற் குள் புகுந்துவிட்டனர். அவர் மொழி தமிழில் கலக்கத் தொடங் கிற்று. அதனாலேயே தொல்காப்பியர்,
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”
– தொல். சொல். 401
எனத் தம் நூலுள் வழிவகுத்தார். ஆடுமாடு மேய்க்க வந்த ஆரியர் ஆட்டக் கலையிலும் வல்லவராயினர். அவர்கள் கழைக் கூத்தாடியதைச் சங்கப்பாடலும் குறிப்பிடும். “ஆரியக்கூத் தாடினாலும் காரியத்திலே கண்” என்னும் பழமொழியும் அவர்கள் கூத்தைத் தெரிவிக்கும்.
தமிழரொடு கலந்த ஆரியர் தமிழ்மொழியைக் கற்றனர்; தமிழர் பண்பாட்டையும் தமிழ்மொழியையும் கெடுக்கச் சூழ்ந்தனர்; எதிர்த்து நில்லாது அடுத்துக் கெடுக்கத் துணிவு கொண்டனர்; அரசர்களையும் செல்வர்களையும் அண்டித் தம் செயலைச் செவ்வனே செயற்படுத்தினர்.
ஆரியர்தம் வெண்ணிறத்தாலும், வெடிப்பொலிப் பேச்சுத் திறத்தாலும், கூத்தாலும் தமிழ் மன்னர்கள் அவர்களுக்கு அடிமையாயினர்; அவர் ஆட்டி வைத்தபடியெல்லாம் ஆடினர்.

முதுகுடுமிப் பெருவழுதி யென்னும் ஒரு பாண்டிய மன்னன் பல வேள்விகளைச் செய்தான்; மக்கள் வரிப்பணத்தை வேள்வி செய்யவும், ஆரியர்க்கு விருந்து வைக்கவும், பரிசில் வழங்கவும் பயன்படுத் தினான்; அதனால் ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்னும் பேரும் பெற்றான்.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்னும் சேரவேந்தன் தன்னைப் பாடிய பாலைக் கௌதமனார் விருப்பப்படி பத்துப் பெருவேள்வி செய்து புலவரை யும், அவர் மனைவியையும் துறக்கம் பெறச் செய்தான்.
சிலப்பதிகாரக் காலத் தமிழகம் பார்ப்பனச் செல் வாக்கு ஓங்கியிருந்த காலமாகும். பார்ப்பனியத்தைப் பரப்புதற்கென்றே சிலப்பதிகாரம் படைக்கப் பட்டதோ என்று எண்ண வேண்டியுள்ளது.

– திராவிட மொழிநூல் ஞாயிறு
தேவநாயப் பாவாணர்

No comments:

Post a Comment