சென்னை,பிப்.28– தென்காசி மாவட்டம் செங் கோட்டை வட்டம், புளியரை கிராமப் பகுதியில் (25-2-2024) அன்று நள்ளிரவு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு செங்கோட்டை – கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்தது.
அப்போது செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலை அப்பகுதியில் வசித்து வந்த இணையர் சண்முகையா-வடக்குத்தியாள் ஆகியோர் தண்ட வாளத்தில் ஓடிச்சென்று டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநருக்கு சைகை காண்பித்து, ரயிலை தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அவ் இணையரின் வீரதீர செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த இணையருக்குப் பாராட்டு தெரிவித்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, புளியரை இணையர் சண்முகையா-வடக்குத்தியாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (27.2.2024) சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வெகுமதியாக வழங்கினார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சென்னை,பிப்.28- அரசுடன் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு ஒரு சதவீத உள் ஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பார்வையற்ற மாற்றத் திறனாளிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இவர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் அரசு நேற்று (27.2.2024) நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப் பட்ட போராட்டம் கைவிடப் பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் லட்சுமி ஆகியோர் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தனர்.
சென்னையிலிருந்து மொரிஷியஸுக்கு விமான சேவை
சென்னை, பிப்.28 மொரீஷியஸின் தேசிய விமான நிறுவனமான ஏர் மொரிஷியஸ், 2024 ஏப்ரல் 13 முதல் சென்னையிலிருந்து மொரிஷியஸுக்கு வாரத்திற்கு ஒரு விமானத்தை இயக்கவுள்ளது.
மொரிஷியஸின் முதன்மையான விமான நிறு வனமான ஏர் மொரிஷியஸ், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் வாராந்திர விமானத்தை இயக்க உள்ளது, இந்த ஏர்பஸ் ஏ330 விமானத்தில் 254 இருக்கைகள் பொருத்தப் பட்டுள்ளது. இந்த விமானம் இந்தியாவின் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மொரிஷியஸின் எஸ்எஸ்ஆர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 5 மணிநேரம் 45 நிமிடங்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும் என மொரீஷியஸ் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் அரவிந்த் பந்துன் மற்றும் இந்நிறுவன பொறுப்பதிகாரி லாரன்ட் ரெகோரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கல்வி ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை, பிப்.28 – கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் பரிமாற்றம் ஆகியவற்றுக்காக சிமாட்ஸ் பொறியியல் கல்லூரி ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூ கேஸ்டல் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சவீதா பல்கலை கழகத் தின் வேந்தர் முனைவர் என் எம் வீரையன் அவர்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ கேஸ்டல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், தலைவருமான பேராசிரியர் அலெக்ஸ் ஜெலின்ஸ்கி மற்றும் சிமாட்ஸ் கல்வி பல் கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர் எஸ். சுரேஷ் குமார் அவர்கள் கையெழுத்திட்டனர்.
No comments:
Post a Comment