தந்தை பெரியாரின் காலந் தவறாமை, காலந் தாழ்த்தாமைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டான நிகழ்வுகள் உண்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் ‘மாலை மலர்’ நாளேடு அவரது 74ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி ஒரு வரி பதில் கேட்டு பேட்டி எடுத்து வெளியிட்டது.
அதில் ஒரு கேள்வி: “பெரியாரிடம் பிடித்தது?
கலைஞர் பதில்: குறித்த நேரம் தவறாமை. அவர் நன்கு அறிந்து அனுபவப்பட்டவர் – காரணம் ஈரோட்டில் குருகுலவாசம் செய்து அவரிடம் பலவற்றை கற்ற உற்ற மாணவர்.
அதனால்தான் மற்றொரு கேள்வி – பதிலும் இப்படி அமைந்துள்ளது போலும்!
“பிடித்த விருது?”
“பகுத்தறிவாளன்” என்ற விருது!
இதுபோலவே மற்றொரு சந்தர்ப்பத்தில் செய்தியாளர் கேட்ட கேள்வி.
“உங்களைப் பற்றி ஒரு வரியில் ஒரு விமர்சனம்”
‘சட்’டென்று பதில்: “மானமிகு சுயமரியாதைக் காரன்”
கலைஞர் உழைப்பு கடுமையானது என்பதுபோலவே காலந்தவறாமையும் – காலத்தின் அருமையை அறிந்தவராகி, அந்தந்தப் பணிக்கு அந்தந்த அளவு என்று காலப் பகிர்வுடன் தனது – தேனீயை மிஞ்சும் கடமையாற்றிடும் முறை – குறித்த காலத்தை குறிப்பிட்ட பணிக்கு என ஒதுக்கீடு செய்வார். அவரது அந்த ‘காற்று வேகத்திற்கு’ ஈடு கொடுத்துப் பணி செய்தவர் அவரது போற்றுதலுக்குரிய உதவியாளர் – என்றும் நம்மால் மறக்க முடியாத தோழர் – சண்முகநாதன் என்ற மற்றொரு ‘எவரையும் கொட்டத் தெரியாத’ சுறுசுறுப்புத் தேனீ!
கலைஞருடனான சந்திப்புக்கு நாம் வர வேண்டிய நேரத்தை நண்பர் சண்முகநாதன் தான் தெரிவிப்பார். அன்று யார் – யார் சந்திப்புக்கு அழைக்கப்பட்டவர்கள் என்ற பட்டியலை – நினைவு வைத்துக் கொண்டு கலைஞர் சந்திக்க ஆயத்தமாகி விடுவார்!
போக்குவரத்து நெரிசல் காரணமாகவோ வேறு எதனாலோ ஒரு சில மணித்துளிகள் தாமதமானா லும்கூட – “என்ன சண்முகநாதன் ஆசிரியர் (அது போன்று சந்திக்கவுள்ள எவராயினும்) வரவில் லையா, போனில் கேளுங்கள்” என்று மாடி அறையி லிருந்து கீழே உள்ளவருக்குத் தொலைபேசி பொத்தானை அழுத்திக் கேட்பார்!
அதனாலேயே சில மணித்துளிகள் முன்பே நான் சென்று மற்ற பார்வையாளர்களோடு அமர்ந்திருக்கும் நிலை உண்டு.
முக்கியமான செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் – நீண்ட நேரம் அதற்கு ஆகலாம் என்று அவர் நினைத்தால் – மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களுடன் பேசி அனுப்பி விட்டு நம்மைக் கூப்பிட்டு சற்று நிதானமாகப் பேசி கலந்துரையாடுவார்!
காலத்தை அவர் மதித்ததால்தான் இன்றும் ஞாலம் அவரை மறக்காது மதித்து மகிழ்ந்து போற்றிப் பின்பற்ற தவறுவதில்லை. காலத்தை வென்ற தலைவராக உயர்ந்துள்ளார்.
எனக்குள் பல நாள் ஒரு கேள்வி. ஒருவரது மரணத்தை நாம் செய்தியாக்கிக் கூறும்போது ‘அவர் காலமாகி விட்டார்’ என்ற சொற்றொடர் மூலம் குறிக்கிறோமே ஏன்?’ என்ற கேள்விதான் அது!
தந்தை பெரியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களது இரங்கற் செய்தி எழுதும் போது “காலஞ் சென்ற பன்னீர்செல்வம் என்று எழுதவே என் கை நடுங்குகிறது ” என்ற வரிகளை எழுதுவார்.
ஏன் மரணம் அடைந்தவர்களை ‘காலமாகி விட்டார்கள்’ என்று பகுத்தறிவுவாதிகள் குறிப்பிடு கிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல பதிலும் சிந்தித்ததில் கிடைத்தது!
காலத்தைப் போல – இழந்ததை மீண்டும் பெறவே முடியாத ஒன்று உண்டு என்றால் அது காலம் (Time) தான்! என்ன செய்தாலும் திரும்ப அது நமக்குக் கிடைக்காது! அதுபோல மரணமடைந்தவர்கள் என்ன செய்தாலும் மீண்டும் நமக்கு இனி கிடைக்கவே மாட்டார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடவே பகுத்தறிவு வாதிகள் கண்டுபிடித்த ஒரு ஈடு இணையற்ற சொல் ‘காலம் ஆனார்’ – காலம் எப்படி நமக்கு மீண்டும் திரும்பக் கிடைக்காதோ அதுபோல இந்த இறந்த வரும் திரும்ப நமக்குக் கிடைக்க மாட்டார் என்று கூறி காலத்தின் அருமை பெருமையை அற்புதமாக முக்கியப்படுத்தி மிக சிறப்பான சொல்லில் வடித்து வழங்குகிறார்கள் போலும்!
எம்மொழி செம்மொழியின் வளமும், பகுத் தறிவின் விளைச்சலும் எப்படிப்பட்ட செழுமை யுடையது பார்த்தீர்களா?
எளிய சொல்லில்கூட அரிய ‘பொருள்’ ஆழ்ந்து புதையுண்டுள்ளது பார்த்தீர்களா?
‘இயற்கை எய்தினார்’ என்பதைவிட இது மேலும் சிறப்புடன் உள்ளதாகவே இந்தப் புரிதலுக்குப்பின் நமக்குத் தோன்றுகிறது!
எனவே திரும்பக் கிடைக்க முடியாத அந்தக் காலப் பெட்டகத்தை சிறப்பாகப் பாதுகாத்து வாழ்தல் முக்கியம்.
இதை 2055 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து முழுதாய்ந்த பாவலர் குறளாசானின் பேரறிவுதான் என்னே மாட்சியுடையது! நம்மை வியக்க வைக்கிறது!
Tuesday, February 20, 2024
"கடிகாரம் ஓடுமுன் ஓடு!" (3) - வாழ்வியல் சிந்தனைகள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment