சென்னை,பிப்.22- நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ் (திமுக) பேசியதாவது: தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளுக்குள் 60,567 பேருக்கு அரசு வேலை. மீதமுள்ள 2.5 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி தரப்படும் என்ற நம்பிக்கை. இது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் 2021-_2022இல் தனியார் நிறுவனங்களில், அதாவது அமைப்பு சார்ந்த துறைகளிலே 12,84,981 பேர் வேலை பெற்றுள்ளதாகவும், அதுவே 9.4% அதிகரித்து 2022_-2023இல் 14,05,171 பேர் வேலை பெற்றிருப்பதாகவும் ஒன்றிய அரசினுடைய இபிஎப்ஓ பதிவுகளில் டேட்டா காண்பிக்கின்றது.
எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்: திமுக தேர்தல் அறிக்கையில் 3 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு தருவதாக, ஆண்டுக்கு 10 லட்சம் பேர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு 50 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்திருப்பது 28,000 பேர் தான். மற்றது எல்லாம் கருணை அடிப் படையில், டிஎன்பிஎஸ்சி, சீருடைப் பணியாளர்கள் எல்லாம் சேர்த்து. ஆகவே, அந்தத் தகவல் என்பது சரியான தகவலாக இல்லை.
அமைச்சர் சி.வி. கணேசன்: தனியார் தொழில் நிறுவனங்களில் வரும் 24ஆம் தேதி 2 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க உள்ளோம். ஒன்றிய அரசு ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தியாவில், 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்த மாநிலம் தமிழ்நாடு என்று தகவல் வெளியிட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை
ரூ.300 ஆக உயர்த்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காஞ்சிபுரம் எழிலரசன்(திமுக) பேசியதாவது: 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.294 வரை ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லியிருக்கிறார். இன்னும் 6 ரூபாய் சேர்த்து ரூ.300 வழங்கிவிட்டால், 300 ரூபாய் வழங்கி விட்டோம் என்று அந்த இலக்கை அடைந்த மாநிலமாய் தமிழ்நாடு அமைந்து விடும் என்பதற்காகவே நான் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
குடிமராமத்து தொடர்பாக முதலமைச்சர் 5 ஆயிரம் நீர்நிலைகள் கிராமப்புறங்களில் இருக்கக்கூடியதை கிராமப்புற மக்களைக் கொண்டே அங்கேயே நாங்கள் நிர்வகிப்போம், செய்து காட்டுவோம் என்று சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment