வரும் 24ஆம் தேதி சந்திப்போம் வாருங்கள் இளைஞரணித் தோழர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 22, 2024

வரும் 24ஆம் தேதி சந்திப்போம் வாருங்கள் இளைஞரணித் தோழர்களே!

featured image

*மின்சாரம்

சமுதாயப் புரட்சிக்கான – அரசியல் கலப் பில்லாத ஒரே இயக்கம் திராவிடர் கழகம்.
அரசியல் கலப்பில்லை என்றால் – அதன் பொருள் “இராமன் ஆண்டால் என்ன, இராவ ணன் ஆண்டால் என்ன?” என்ற அலட்சியத்தை இலட்சியமாக கொண்டதாகக் கருத வேண்டாம்.
இராமன் ஆண்டால் என்னாகும் என்பதை இன்று கண் முன் காட்சியளிப்பதைக் கண்டு கொண்டுதானே இருக்கிறோம்.
அன்றைக்கு அயோத்தி இராமன் தவம் செய்த சம்புகன் என்ற சூத்திரனை வாளால் வெட்டிப் படுகொலை செய்தான். காரணம் – இராம அவதாரம் வருண தர்மத்தைக் காக்கவே!
இன்று இராமனுக்குக் கோயில் கட்டும் ஆட் சியைப் பார்க்கிறோம். அன்று ‘சூத்திரன்’ சம்பு கனைப் படுகொலை செய்ததுபோல், பா.ஜ.க. ஆட்சியில் சமூகநீதி படுகொலை செய்யப்பட்டு வருவதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

‘நீட்’ என்றாலும் சரி, ”EWS” என்றாலும் சரி சம்புக வதைத் தத்துவத்தின் மறுவடிவம் தானே!
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு சகோ தரியை குடியரசுத் தலைவராக்கி – எப்படி எல்லாம் அவமதிக்கப்படுகிறார் என்பதைக் கண்டு இரத்தம் கொதிக்கிறது!
இதற்கு முன் ராம்நாத் கோவிந்த் என்ற தாழ்த்தப்பட்ட சமூகப் பெருமகனை மாண்பமைக் குடியரசுத் தலைவராக்கி, பூரி ஜெகந்நாத் கோயி லுக்குள்ளும், அஜ்மீர் பிர்ம்மா கோயிலுக்குள்ளும் நுழைய விடாமல் தடுக்கப் படவில்லையா?
பிரதமர் மோடி கண்டு கொண்டாரா? பா.ஜ.க. வில் உள்ள பஞ்சமர்களில் ஒருவராவது ஓங்கிக் குரல் கொடுத்தது உண்டா?
இதைப்பற்றி எல்லாம் அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்தும் இயக்கம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகம்தானே!
இயக்கத்தை வழி நடத்தும் தகைசால் தமிழர் தலைவர் ஆசிரியர் தானே இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்யும் பெருங் குரலை எழுப்பி வருகிறார்.
ஒரு செய்தி தெரியுமா? வங்காள மொழியில், தந்தை பெரியாரின் “இராமாயணப் பாத்திரங்கள்” எனும் நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. “The Collected Works of Thanthai Periyar” என்று நாம் வெளியிட்ட ஆங்கில நூல் பஞ்சாபி மொழியில் வெளிவந்துள்ளது.

தந்தை பெரியார் தத்துவத்தின் மீதான தாகம் வட இந்தியாவிலும் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருக்கிறது.
93 ஒன்றிய அரசு செயலாளர்களுள் வெறும் மூன்றே மூன்றுபேர் மட்டும்தானே ஓ.பி.சி. என்று காங்கிரஸ் இளந்தலைவர் இராகுல்காந்தி கர்ச்சிக் கிறார்.
உங்களில் எத்தனைப் பேர் ஓ.பி.சி. என்று செய்தியாளர்கள் சந்திப்பில் வினா தொடுக்கிறார் – அதே இராகுல்காந்தி.
நடக்க இருப்பது எத்தனை எம்.பி.க்கள் என்று தலையை எண்ணும் வெறும் தேர்தல் அல்ல!
வெல்லப் போவது சமூகநீதியா? சமூக அநீதியா? என்ற கேள்விக்கு விடையைச் சொல் லும் தேர்தல்.
மற்றவர்கள் எப்படியோ இருக்கட்டும்! திராவிடர் பூமியாகிய, ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்துகின்ற மண்ணாகிய தமிழ்நாடு கொடுக்கும் சமூகநீதி கர்ச்சனையை காஷ்மீர் வரை எதிரொலிக்கச் செய்ய வேண்டும்.
பிற்போக்குப் பெரு நோய்க்குக் கண்கண்ட ஒரே மருந்து தந்தை பெரியாரின் சித்தாந்த மூலிகைதான்.
தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் கடமை – பொறுப்பைவிட, சமுதாய மாற்றத்திற்காகவே உயிரையும், உடலையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் நமது இயக்கத்திற்கு மிக அதிகமானது.

மக்கள் கருத்தை உருவாக்கும் மகத்தான ஆற்றல் நம்மிடம் உண்டு என்பதைக் கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி நிரூபித்துக் கொண்டு தானே இருக்கிறோம். மக்கள் மனமாற் றம்தானே வெற்றியைக் கொய்து கொடுக்கும் சக்தி!
பிரச்சாரம் – போராட்டம். இவ்விரண்டும் தானே யாராலும் வெல்லப்படவே முடியாத நமது அறிவாயுதம்!
“கரணம் தப்பினால் மரணம்” என்ற நிலை தான் இவ்வாண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல்.
“மண்டலுக்கும் – கமண்டலத்திற்குமான போராட்டம்” என்று கவிஞரும் – சமூகநீதிக் காவலருமான மாண்புமிகு வி.பி. சிங் அன்று சொன்னார்.
அதை எல்லாம் கவனத்தில் கொள்வோம்!

நமது தலைவர் அழைக்கிறார் – வாருங்கள் கழக இளைஞரணிக் கருஞ்சிறுத்தைகளே!
ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, பெண்ணடிமை ஒழிப்பு, சரிநிகர் சமத்துவம், சமதர்மம், வர்ணம் வர்க்கப் பேதமற்ற ஒப்புரவு நிலை – இந்தக் கோட்பாடுகளை நிலை நிறுத்த நிமிடம் தோறும் – வியர்வை சிந்தும் – இவற்றை வலியுறுத்த எந்த ஈகத்திற்கும் தயாராக இருக்கும் ஒப்பற்ற சமுதாய புரட்சி இயக்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற இறுமாப்போடு வாருங்கள் தோழர்களே! வழிகாட்ட நமது தலைவர் காத்திருக்கிறார். சந்திப்போம் பெரியார் திடலில்… செயல்படுவோம் வாரீர்! வாரீர்!!
கருத்துகள் உண்டு – திட்டங்கள் உண்டு. காற்று இல்லை என்றால் உயிர்கள் இல்லை. கருஞ்சட்டை இல்லை என்றால் சமூகநீதியில்லை, இல்லவே இல்லை.
வாருங்கள் வரும் 24ஆம் தேதி சனியன்று காலை சென்னைப் பெரியார் திடலில் சந்திப் போம்!

No comments:

Post a Comment