2024 ஆம் ஆண்டு அரசியலில் மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கும் ஆண்டாக இருக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 4, 2024

2024 ஆம் ஆண்டு அரசியலில் மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கும் ஆண்டாக இருக்கும்!

featured image

2024 ஆம் ஆண்டு அரசியலில் மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கும் ஆண்டாக இருக்கும்!
தமிழ்நாட்டின் உணர்வு அகில இந்தியாவிலும்
வேகமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது!
கடலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

கடலூர்,பிப்.4 ‘‘தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள திராவிடர் இயக்கம் ஊட்டிய உணர்வு, இப்பொழுது வட மாநிலங் களிலும் வேகமாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இந்திய அளவில் அரசியலில் புது மாற்றத்தை உருவாக்கும் ஆண்டாக இருக்கும்” என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (3-2-2024) காலை கடலூருக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத் திற்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:

ஓராண்டு காலத்தில் ஒப்பற்ற சாதனைகள்!

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய 55 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3-2-2024) அவருடைய நினைவைப் போற்றுகின்ற வகையில், அண்ணா அவர்கள் திராவிடர் ஆட்சி, நீதிக்கட்சி ஆட்சி ஏதோ மறைந்துவிட்டது என்று சொன்னதை மாற்றி, தம்முடைய ஆட்சிதான் நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சி என்று சொல்லி, தமிழ்நாடு பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுதல், ஹிந்திக்கு இடமில்லை; தமிழும், ஆங்கிலமும்தான் இருமொழிக் கொள்கைகள் என்பதை நிலைநாட்டி, ஓராண்டு காலத்தில் அவர் செய்த ஒப்பற்ற சாதனைகள், பின்னாளில் வரக்கூடிய ஆட்சிகளுக்கெல்லாம் அஸ்தி வாரமாக, அடிக்கட்டுமானமாக அமைந்தன.

அதனைத் தொடர்ந்து நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியில், ஜாதி, தீண்டாமை ஒழிப்பு உள்பட, அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதற்கான சட்டங்களை நிறைவேற்றிய நிலையில், பல்வகையில், நவீன தமிழ்நாட்டை தொழில்துறையிலும், பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறையிலும் வளர்த்த பிறகு, அந்த ஆட்சியில் நிலைத்து இருக்கக்கூடிய வெற்றிகளை தகவமைத்து, நடைமுறைப்படுத்தக்கூடிய நல்லாட்சி யாக, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள் தலைமையில், ‘திராவிட மாடல்’ ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அண்ணா அவர்களுடைய ஆட்சி என்பது தொடர் கிறது. எவ்வளவுதான் கொள்கை எதிரிகள், பல்வகை யான பிரச்சாரங்களை செய்தாலும்கூட, வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியினர் பெற்ற பழைய வெற்றியைவிட, கூடுதலான வெற்றியைப் பெறுவார்களே தவிர, குறைவாகப் பெற மாட்டார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்!

அதுபோலவே, ஒன்றிய அரசினால், மக்கள் பல வகையிலும் பாதிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான, மோடி தலைமையில் நடை பெறக்கூடிய பா.ஜ.க. ஆட்சியினால், அடைந்துள்ள கொடுமைகளை, துன்பங்களை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.
வட மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவிற்கு ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிர்ப்பு இருக்கிறது.

ஆகவேதான், இந்த ஆண்டு மிகப்பெரிய மாறுதல் தரக்கூடிய ஆண்டாக, ஒரு புதிய ஆட்சியை – மக்கள் சந்திக்கக் கூடிய ஆட்சியாக, ஒன்றிய அளவிலே இருக்கக்கூடியனவற்றில் திருப்பங்கள் ஏற்படும்.
ஆனால், இந்தியா முழுவதும் ஊடகங்கள்மூலமாக ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை செய்கிறார்கள். மீண்டும் ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி ஏற்படும் என்று.
அது ஒரு போலித்தனமான பிரச்சாரம் என்பதை, நடைபெறப் போகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவு நாட்டிற்கு உணர்த்தும்.

அனைத்திந்திய அளவிலும் உருவாக்க
ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன

அந்த வகையில்தான், அண்ணா அவர்களுடைய நினைவு நாளான இன்றைக்கு எப்படி அண்ணா அவர்கள் ஆட்சியைக் கட்டிக் காத்து, மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்கினார்களோ, அதே திருப்பத்தை, அனைத்திந்திய அளவிலும் உருவாக்குவோம். அதற் காக ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எங்களுடைய கழக செயலவைத் தலைவராக இருந்த இந்த ஊரைச் சார்ந்த அருமைத் தோழர் சு.அறிவுக்கரசு அவர்கள் மறைந்தார்கள். அவரு டைய படத்திறப்பு- நினைவேந்தல் நிகழ்வு நடைபெற விருக்கிறது.

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவராக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவராக சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞரும், இயக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றக் கூடியவருமான வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார் என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த நான்கு தீர்மான நகல்களும் செய்தியாளர்களாகிய உங் களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் பொய்ப் பிரச்சாரத்தைத் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள்!

செய்தியாளர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓரிருவரை வைத்துக்கொண்டு ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு அதைச் செய்திருக்கிறது, இதைச் செய்திருக்கிறது என்று இங்கே இருப்பவர்கள் ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: நீங்களே சொன்னீங்க; ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஏற்கெனவே பீகார்காரர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று ஹிந்தி சமூக வலைதளத்தில் திட்டமிட்டு பரப்பப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் உச்சநீதிமன்றத்திலேயே மன்னிப்புக் கேட்கக்கூடிய அளவிற்கு நடந்த நிகழ்ச்சி இருக்கிறது.
ஆகவே, திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் செய்கிறார்கள்.
அப்படியானால், இவ்வளவு பேர் தொழிற்சாலைகள் அமைக்க வெளிநாட்டிலிருந்து வரமாட்டார்கள்.
”அனைவருக்கும் அனைத்தும்” என்று சொல்லக்கூடிய ஓர் ஆட்சி!
இந்தியாவிலேயே, இன்றைக்குத் தொழில் துறையில் தமிழ்நாட்டில் மட்டும் மிகப்பெரிய அளவிற்கு முதலீடு செய்வதற்குக் காரணமே, தமிழ்நாட்டில்தான், இந்தியா விலேயே நிலையான ஆட்சி நடைபெறுகிறது. நிலையான ஆட்சி மட்டுமல்ல, நீதியான ஆட்சி! நீதியான ஆட்சி மட்டுமல்ல, ”அனைவருக்கும் அனைத் தும்” என்று சொல்லக்கூடிய ஓர் ஆட்சி என்பதால்தான், ஏராளமாக தொழிற்சாலைகளும், மற்றவைகளும் வந்திருக்கின்றன. புதிய புதிய தொழில்வாய்ப்புகள் அத்துணையும் வந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள எந்தத் தொழிற்சாலைகளின் முன்பும் சிவப்புக் கொடி போராட்டம் என்பது இல்லை. ஏதாவது பிரச்சினை என்றால், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்; உடனே, முதலமைச் சரை சந்தித்து, அதற்கொரு தீர்வு காணுகிறார்கள்.
இவ்வளவு விரைந்து செயல்படக்கூடிய ஆட்சி போன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. நெம்பர் ஒன் ஆட்சியாக ‘திராவிட மாடல்’ ஆட்சி இருக்கிறது என்கிற பெருமை இருக்கிறது.
அதைக் குலைப்பதற்காக, திட்டமிட்டு சமூக வலை தளத்தில் இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்தப் பிம்பம் உடைக்கப்படும். அது உண்மையல்ல என்பதை மற்றவர்கள் தெரிந்துகொண்டார்கள்.
பி.ஜே.பி.க்காரர்கள், அரைவேக்காட்டுக்காரர்களாக இருக்கக்கூடியவர்கள் பல நேரங்களில் எதையாவது பேசிவிட்டு, அதுகுறித்து வழக்குப் போட்டதும், மன்னிப்புக் கேட்கிறார்கள்.
ஆகவேதான், அவர்கள் எதையாவது பேசிவிடு கிறார்கள், – வழக்கு போட்டதும், மன்னிப்பு கேட்பது என்பது வாடிக்கையாக ஒன்றாக இருக்கிறது.
இந்த வித்தைகளை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டார்கள்; இப்பொழுது வடபுலத்தில் உள்ள மக்களும் உணர்ந்து கொண்டார்கள்.
ஆகவேதான், அவர்களுடைய வித்தை என்பது எடுபடாது.

நோய்க்கிருமிகள் வேகமாகப் பரவும் –
சிகிச்சைகள் குறைவாகத்தான் இருக்கும்!

செய்தியாளர்: கடந்த காலத்தைவிட, கோவில் களுக்கு அதிகமான மக்கள் வரலாறு காணாத அள விற்குச் செல்கிறார்களே, இதை நீங்கள் எப்படி பார்க் கிறீர்கள்?
தமிழர் தலைவர்: கடந்த காலத்தைவிட கோவிட் தொற்று எவ்வளவு வேகமாக, அதிகமாகப் பரவியது. அப்படியென்றால், மருத்துவக் கல்லூரிகளை, மருத்துவ மனைகளை மூடிவிடலாமா? மருத்துவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்களா?
எப்பொழுதுமே நோய்க் கிருமிகள் வேகமாகப் பரவும், சிகிச்சைகள் குறைவாகத்தான் இருக்கும்.

தேர்தலில் நிற்காதவர்கள் நாங்கள் –
எதையும் பளிச்சென்று சொல்வோம்!

செய்தியாளர்: அமைச்சர்கள், மேனாள் முதலமைச் சர்கள் அதிகமாகக் கோவில்களுக்குப் போகிறார்களே?
தமிழர் தலைவர்: அமைச்சர்கள் கோவிலுக்குப் போகிறார்கள் என்றால், அதைக் காட்டினால், ஓட்டு வாங்க முடியுமா? என்கிற நப்பாசையில்தான்.
அதற்காக மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்; அவர் களுடைய நாணயத்திற்காகவும், அவர்களுடைய சாதனைகளுக்காகவும்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை பலர் புரிந்துகொண்டுள்ளனர். இன்னும் புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்வார்கள்.
மக்களுடைய, பாமரத்தனத்தை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைப்பது அரசியல்வாதிகளுக்கு இயல்பு!
ஏனென்றால், நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள். அதனால், எதையும் பளிச்சென்று சொல்வோம்.
தேர்தலில் நிற்பவர்கள் அதுபோன்ற வித்தைகளில் ஈடுபடுவார்கள்.
முதலில் கொள்கைகளைச் சொல்லட்டும்!

செய்தியாளர்:கடந்தகாலங்களில் நடிகர்கள்அரசி யல் கட்சிகளைத் தொடங்கினார்கள். அந்த வரிசையில், நேற்று நடிகர் விஜய் புதிய கட்சியைத் தொடங்கியி ருக்கிறாரே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: அவருடைய கொள்கைகள் என்னவென்று சொல்லட்டும், பிறகு பார்க்கலாம்!!
நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment