இந்நாள் - செங்கற்பட்டு சுயமரியாதை முதல் மாநாடு நடைபெற்ற பொன்னாள் [17.2.1929] - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

இந்நாள் - செங்கற்பட்டு சுயமரியாதை முதல் மாநாடு நடைபெற்ற பொன்னாள் [17.2.1929]

featured image

2024- ஆம் ஆண்டிலும் உயிர்ப்போடு இருக் கின்றன சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள்.
சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய குறிக் கோள் :
மூடப்பழக்க வழக்கத்தை ஒழித்தல்
பெண்களை தாழ்வாக நடத்துதலை தடுத்தல்
விதவை மறுமணம்
தேவதாசி முறை ஒழிப்பு
குழந்தை திருமணம் ஒழிப்பு
வர்ணாசிரம முறை ஒழிப்பு
சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் 1929 பிப்ரவரி 17, 18ஆம் தேதிகளில் நடைபெற்ற மாநாடு ஆகும். இதுவே முதலாவது சுயமரியாதை மாநாடு. ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக, சமயம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, சுயமரி யாதை திருமணத்துக்கு சார்பாக, விதவை மறுமணத்துக்கு ஆதரவாக இங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சுயமரியாதை இயக்கத்தின், திராவிட இயக் கத்தின் வளர்ச்சியிலும், தமிழ்நாட்டின் வரலாற் றிலும் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ப. சுப்பராயன் மாநாட்டைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இம்மாநாட்டில் தலைவர்கள் பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதி ஒட்டை நீக்கி அறிவித்தனர்.

சுயமரியாதை இயக்கம் (self-respect movement) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக் காகவும் அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களால் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் (அப்போதைய சென்னை இராஜதானி) தொடங்கப்பட்ட செங்கல்பட்டு சுய மரியாதை மாநாட்டு தீர்மானங்கள் (சுருக்கமாக)

25.9.1929 – குடிஅரசிலிருந்து…
1. செங்கற்பட்டு தீர்மானங்கள் என்னவென்று பார்ப் போமானால் அவைகளில் மக்களுக்குப் பிறவியில் ஜாதிபேதம் கிடையாது என்பது.
2. ஜாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாஸ்திரம் புராணம் முதலியவைகளை பின்பற்றக் கூடாது என்பது.
3. வர்ணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், சத்திரியர் வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது.
4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொது குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொது ஜனங்களுக்குச் சமஉரிமை இருக்க வேண்டுமென்பது.
5. இவை பிரச்சாரத்தால் நிறைவேற்றி வைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
6. ஜாதி, மத வித்தியாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலி யவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களை கேட்டுக் கொள்கிறது என்பது.
7. பெண்கள் விடயத்தில் பெண்களின் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும். மனை விக்கும் புருஷனுக்கும் ஒற்றுமையின்றேல் பிரிந்துகொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்துகொள்ளலாம். ஆண், பெண் தாங்களே ஒருவரைஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது.
8. சடங்குகள் விடயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும் அதிக செலவில் லாமலும் ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற் படாமலும் ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.
9. கோயில் பூஜை விடயத்தில் சாமிக்கென்றும் பூஜைக்கென்றும் வீணாக காசை செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப் பாளனாவது கூடாது.
புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத் திற்கும் வேதம் படிப்பதற்கென்றும் விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களைக் கல்வி, ஆராய்ச்சி, கைத்தொழில் கற்றுக் கொடுத் தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்ளுவது.
உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத் தையும் நேரத்தையும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளாதார உணர்ச்சி ஆகியவை களுக்கு உபயோகமாகும்படியான கட்சி, பொருட் காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.
10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோதமான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களைப் பகிஷ்கரிப்பது என்பது.
11. பெண் உரிமை விடயத்தில்; பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுவதும் அவர்களுக்கே கிடைக்கும் படி பார்ப்பது என்பது.
12. தீண்டப்படாதார் விடயத்தில், தீண்டப் படாதார்களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகிய வைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது தர்க் காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப்பது என்பது.
13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்குக் கல்வி விடயத்தில் இருக்கும் கஷ்டங்களையும் தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.
14. கல்வி விடயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தைச் செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியைச் செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்குப் பொதுநிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்குத் தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந்தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.
15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய பொது இடங் களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.
நாம் உண்மையிலேயே ஒரு நாட்டவர்; ஓர் இனத்தவர்; ஒரு குறிப்பிட்ட எல்லையில் ஒரே பழக்க வழக்கங்களோடு இருக்கிறவர்கள்; ஒரு காலத்தில் இந்நாட்டை ஆண்டவர்கள்; வெகு நாளாக இருந்து வருபவர்கள்; இன்னும் வெகு நாளைக்கு எப்போதும் இங்கேயே இருக்க வேண்டியவர்கள். நாம் யாவரும் ஒன்று. நாம் யாவரும் சரிநிகர் சமானமானவர்கள் என்று சொல்லுவதற்குத் தகுதியில்லாத நிலைமையில் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறோம்..

No comments:

Post a Comment