நூறு நாள் வேலை திட்டத்தில் விவசாயக் கூலிகளுக்கு பணமில்லை என சொல்லும் பாஜக அரசு, வங்கியில் உள்ள மக்களின் சேமிப்புக் களையும், மக்களை வாட்டி வதைத்து வாங் கும் வரிப் பணத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடனாகக் கொடுத்து அதை வராக் கடனாக தள்ளுபடி செய்து வருகிறது.
இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கு பணம் இல்லை. நூறு நாள் வேலை செய்தவர்களுக்கு ஊதியம் கொடுக்காததால் பல மாதங்களாக அவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
மாநில அரசுகளுக்கு கொடுக்கவேண்டிய பங்கீட்டுத் தொகை உரிய காலங்களில் வழங்கப்படாமல் இருக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 1,500 கோடி கூட கொடுக்க இயலாமல், ஜப்பான் நாட்டில் கடன் வாங்கி கட்ட சொல்கிறது.
மாணவர்களின் கல்விக்கடன் விவசாயிகளின் கடன்களி லும் குறைந்த பட்சம் அந்த வட்டிகளையாவது தள்ளுபடி செய்யக் கோரிக்கை வைத்தால் நிராகரிக்கிறது ஒன்றிய அரசு..!
சி.ஏ.ஜி. அறிக்கையில் 7.5 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று கூறியபின்னர், அந்த முறைகேட்டை பற்றி எதுவும் பேசாமல் அந்த அறிக்கையை சமர்ப்பித்த அதிகாரிகளை பந்தாடி வருகிறது.
பல இடங்களில் இந்த சி.ஏ.ஜி. தணிக்கை துறை அதிகாரிகளை ஆய்வு செய்யும் இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று வாய்வழியாக உத்தரவு பிறப்பித்து முறைகேடுகளை வெளிக் கொணராமல் முடக்கப் பார்க்கிறது.
ஒரு பக்கம் கடுமையான வரி, இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தின் காரணமாக விலைவாசி ஏறி நிற்கிறது. மறுபக்கம் மோடியின் செல்லப்பிள்ளை அதானியின் நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மூலம் கொள்ளை லாபம் வைத்து அரசுக்கு விற்பனை செய்கிறது. இப்படி விலை அதிகமான நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை ஏறி, பல்வேறு தொழில்களும் நசுங்கும் நிலையில் இருக்கின்றன.
இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதால் ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 07-08-2023 அன்று நாட்டில் நிலவும் வராக்கடன் பற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் கேள்வி எண் 2983 க்கு பதிலளித்துப் பேசிய ஒன்றிய துணை நிதி அமைச்சர் டாக்டர் பகவத் கராத் அளித்த பதிலுக்கும் இப்போது தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட பதிலுக்குமே வித்தியாசம் இருக்கிறது.
இதில் அவலமான ஒன்று என்னவென்றால், எவ்வளவு தொகை பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரத்தை மத்திய ரிசர்வ் வங்கி தனியாக பராமரிக்கவில்லை என்று பதில் அளித்து இருக்கிறார்கள்.
இப்படியான ஓர் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சகம் வைத்தது. இப்போது கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்த சஞ்சய் ஈழவா, தற்போது குஜராத் மாநிலத்தில் சமூகப் போராளியாக இருப்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் எவ்வளவு வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது என்ற கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி பதில் கொடுத்து இருக்கிறது.
இந்த கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதில், நம் நாடு எவ்வளவு வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தள்ளாடும் நிலைமையில் இருக்கிறது. தெளிவாக கேள்விகளை வைத்த பின்னரும் அதற்கு பதிலாக உங்கள் கேள்வி புரியவில்லை என்ற அடிப்படையில் சில கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்கள். இப்படி தகுதியற்றவர்களை வைத்து தான் நம் மத்திய ரிசர்வ் வங்கி இயங்குகிறது என்பதை பதில் எண் 7 மற்றும்
8இல் புரிந்து கொள்ளலாம்.
இந்த பதில்களை விட இன்னும் வியப்பூட்டும் விதத்தில் இதற்கு முன்னர் அரசாங்கம் எவ்வளவு தள்ளுபடி செய்திருக் கிறது என்ற கேள்விக்கு தரவுகளே இல்லை என்று பதிலளித்து இருக்கிறார்கள். இப்படியான நிலையில் வெளிப்படைத் தன்மையற்ற அரசாங்கத்தில் நாம் இருக்கிறோம்.
இப்படியாக இதுவரையில் எந்த ஒரு கேள்விக்கும் முறையான விளக்கமோ பதிலோ இல்லாத இந்த அரசாங்கம்.
# PMCARES பற்றி கேட்டால் அதற்கு பதில் இல்லை.
# ELECTORAL BOND பற்றி கேட்டால் அதற்கு பதில் இல்லை.
இப்போது மொத்தமாக சில கேள்விகளை நாடாளுமன்றத் திலும் தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாகக் கேட்டால் மழுப்பல்தான் – காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் அற்புதமானது – அதைப் பலகீனப்படுத்தி வருகிறது. பிஜேபி ஆட்சி என்பது கண்கூடாக தெரிகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் தனியார் முதலாளிகளுக்கு மோடி அரசு கடன் கொடுத்து, வராக்கடன் எனும் கணக்கில் தள்ளுபடி செய்த தொகை மட்டுமே ரூ. 25 லட்சம் கோடிகள். (இந்திய ரிசர்வ் வங்கி ஆர்.டி.அய்.மூலம் S-5475/01.12.001/2022-23 Vol11 – 11-10-2023 தேதியிட்ட பதிலில் குறிப்பிடப்பட்ட விவரங்கள்)
இப்படி சராசரியாக ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடிகள் வராக் கடனாக மட்டும் தள்ளுபடி செய்து கொண்டு இருக்கிறது. மேலே இருக்கும் விவரம் சென்ற நிதியாண்டு வரைக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை. இந்த நிதியாண்டில் என்ன எல்லாம் செய்ய இருக்கிறார்களோ தெரியாது.
பொதுவாக வங்கிகள் தொழில் செய்வதற்கு கடன் கொடுக்கிறது. இப்படி வழங்கப்படும் கடன்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று பிணையுடன் கூடிய கடன் இன்னொன்று பிணையில்லா கடன்.
சாதாரணமாக சிறு, குறு நிறுவனங்கள் கடன் கேட்டால் அதற்கு எந்த சொத்தை ஈடுகடனாக எழுதி வைப்பீர்கள் என்று கேட்டு அந்த சொத்தின் மதிப்பை மதிப்பீடு செய்து தான் தருவார்கள். நாளை ஏதேனும் காரணங்களால் அந்தக் கடனை கட்ட முடியாவிட்டால் அந்த சொத்தினை ஜப்தி செய்து ஏலம் விட்டு அதில் வரும் பணத்தின் மூலம் அந்த கடன் தொகையில் வரவு வைப்பார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் பிணை இன்றி வழங்கப்பட்ட கடனை வசூலிக்க இயலாமல் அது தள்ளுபடி வரை சென்று இருக்கிறது.
இப்படி பிணை இல்லா கடன் வாங்கியவர்களின் பட்டியலை கேட்டால், அது இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்திற்கு எதிரானது என்றும், அதை தரவேண்டியதில்லை என்றும், நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் தருகிறார். இதுதான் வெளிப்படைத் தன்மையா? நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் நிதிநிலை பற்றி அறிய உரிமை இருக்கிறது.
மாநில அரசாங்கத்தின் கடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3.5 லட்சம் இருப்பதாக அண்ணாமலை வருத்தம் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் கடன் குறிப்பாக மோடி ஆட் சிக்கு வந்த பின்னர் வாங்கிய கடன் என்பது ஒவ்வொரு குடும்பத்தின்மீதும் ரூ.4 லட்சம் இருக்கிறதே. அதைப் பற்றி பேசலாமா?
இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் பெற்ற கடன் தொகை மொத்தமே 65 லட்சம் கோடி தான். 25 லட்சம் கோடி பெரு முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த மோடி அரசாங்கம் மாநிலங்களின் கடன்களை தள்ளுபடி செய்து இருக்கலாமே. இந்த மாநிலங்களின் கடன் களில் பெரும்பான்மை நலத்திட்ட உதவிக்காக செய்தவை தானே?
No comments:
Post a Comment