ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. மற்றும் காவிகளின் குத்தகை ஏடான ‘தினமலரில்’ இன்று (25-1.2024 இல்) சென்னைப் பதிப்பு பக்கம் 4 இல் வெளிவந்துள்ள ஒரு செய்தியை அப்படியே தருகிறோம் படியுங்கள்:
பா.ஜ. நிர்வாகிக்கு அடி, உதை
கோட்டூர்புரம், ஜன.25 கோட்டூர்புரம், பாரதி அவென்யூவைச் சேர்ந்தவர் தேவி. இவருடன் அவரது தங்கையும், பா.ஜ., மாவட்டத் துணைத் தலைவருமான ஆண்டாள் (வயது 42) என்பவர் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை தேவி வீட்டிற்கு, பா.ஜ.க.வினர் சிலர் வந்தனர். அப்போது, ‘சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க, ஆட்களை அழைத்து வருவதாகக் கூறி 50,000 ரூபாய் வாங்கினாய். ஆட்களை அழைத்து வராததால், பணத்தைத் திருப்பிக் கொடு’ எனக் கூறி, ஆண்டாளை தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஆண்டாள், சிகிச்சை பெற்று, கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக பா.ஜ. நிர்வாகி ஸ்ரீதர் (வயது 42) என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், பா.ஜ., மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிசாத் ரெட்டி, பெண் நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டோர்மீது, போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
– இவ்வாறு உள்ளது அந்தச் செய்தி!
பிரதமர் மோடி வந்தபோது, கொடி பிடித்து வரவேற்க வந்திருந்தவர்கள் – மகளிரும், மற்றவர்களும் பா.ஜ.க.வின் கொள்கையாளர்களோ, தொண்டர்களோ, கட்சி ஊழியர்களோ அல்ல!
எல்லாம் கூலிப் பட்டாளங்கள்!
பணம் பட்டுவாடாவில்கூட முன்பு பல நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் செய்திகளாக வந்ததுண்டு. இது முதல் தடவையல்ல என்றாலும், ‘‘தாமரை தமிழ்நாட்டில் அப்படி மலருகிறது; வளருகிறது” என்பதற்கு ‘புண்-நாக்கு, அரைவேக்காடு அண்ணாமலைகள்’ என்ன பதில் கூறப் போகிறார்கள்?
பிரதமர் மோடியை வரவேற்க ஒரு சிறு பகுதியிலிருந்து ஆள்களைக் கூட்டி வந்து ‘ஜே’ போட, கொடியாட்ட வைத்ததற்கே அக்கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஆண்டாள் அம்மையார் – ஆட்களை அழைத்து வர வாங்கிய தொகை ரூ.50 ஆயிரம்!
ஒப்பந்தபடி ஆட்கள் வராததால், பணத்தைத் திருப்பிக் கேட்டு, அடி உதை, வசைப்பாடு!
அடிபட்டு காயமான டெம்பரவரி காவிக்கு கங்காணிகளைப் பிடிக்க, ஆள் பிடிக்க இங்கே 50 ஆயிரம் ரூபாய் என்றால், பல பகுதிகளிலும் முன்பு திருச்சிக்கு மோடி வந்தது உள்பட எவ்வளவு பணம் தண்ணீராய் ஓடியிருக்கும்?
பண பல, புஜ பல பராக்கிரமத்தினை பா.ஜ.க. காட்டுவதாலேயே அவர்மீது பூ மாரி பொழிகின்றனர்!
கருநாடகத் தேர்தலுக்குப் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்குச் சென்றபோது, பூக்களைக் கொட்டியது ‘எவ்வளவு ரம்மியமான’ காட்சி!
ஆனால், வாக்குப் பெட்டியில் அவை கொட்டவில்லையே! பூக்களை விலைக்கு வாங்க முடிந்த காவிகளால், ஓட்டுகளை எவ்வளவுப் பணம் செலவழித்தாலும் வாங்க முடியவில்லையே!!
தமிழ்நாட்டிலோ, திருச்சியில் திட்டமிட்டு ‘பாரத் மாதாக்கீ ஜே’ போட்டு, சத்தம் போட, ‘மோடி, மோடி’ என்று முதலமைச்சர்முன் கூச்சலிட, எவ்வளவு தொகையோ என்றுதான் மேலே உள்ள செய்தியைப் படிக்கும் எவருக்கும் கேட்கத் தோன்றும்.
அது சரி, மோடி வரவேற்பே இப்படி என்றால், ‘இன்ஸ்டால்மெண்ட்’ யாத்திரை தமிழ்நாட்டில் நடத்தும் அரைவேக்காடு அண்ணாமலைக்குக் கூட்டம் சேர்க்க எவ்வளவு செலவோ, யாரறிவர் – தாமரைச் செல்வர்களைத் தவிர?
தமிழ்நாட்டில் ரொம்ப காலமாக ஒரு பழமொழி புழக்கத்தில் உள்ளதே, ‘‘பணம் பத்தும் செய்யும்” என்று!
கூடும் கூட்டமோ, கூட்டிவரும் கூலிப்பட்டாளமோ ஒருபோதும் காவியை நட்டு, வெற்றியைப் பெற முடியாது; அது வெறும் கானல் நீர் வேட்டை!
போலீஸ் ஸ்டேனுக்குப் போகும் வழக்குதான் மிச்சம்!
அட, 24 கேரட் தேசபக்தர்களே, உங்கள் சாயம் இப்படியா வெளுப்பது!
வெட்கமாக இல்லையா?
No comments:
Post a Comment