‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

featured image

‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்-
மக்கள் தயாராகிவிட்டார்கள்; நீங்கள் தயாராகவேண்டும்
யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை முன்னிலைப்படுத்துங்கள்!


சென்னை, ஜன.26 ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்- மக்கள் தயாராகிவிட்டார்கள்; நீங்கள் தயாராகவேண்டும், அதுதான் மிக முக்கியமான வேண்டுகோள். யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை முன்னிலைப்படுத்துங்கள். இந்தியா நமதே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி
காலத்தின் கட்டாயம்’’ சிறப்புக் கூட்டம்!

கடந்த 22.1.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் ‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியில் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வந்து பொத்தென்று விழும் என்று சொன்னார்கள்.
இதை நாங்கள் மட்டும் எடுத்துச் சொல்லவில்லை; அந்தத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உலகத்திற்கே நாம்தானே எடுத்துக்காட்டாக
விளங்கியிருக்க முடியும்!

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னார்களே, அப்படி அவர்கள் 2 கோடி பேருக்கு வேலை கொடுத்திருந்தால், இந்த 10 ஆண்டு களில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும் அல்லவா!

அப்படி 20 கோடி பேருக்கு வேலை கொடுத்திருந்தால், உலகத்திற்கே நாம்தானே எடுத்துக்காட்டாக விளங்கியிருக்க முடியும்!
அது என்ன ‘‘ஜீ பூம்பாவா”, டப்பென்று மந்திரக் கோலை எடுத்துக்காட்டுவது போன்றதா?
அத்தனைப் பேருக்கும் வேலை கொடுக்க தொழிற்சாலைகளுக்கு நாட்டில் வாய்ப்பு உண்டா?

அரைவேக்காடு அனுமார்
பட்டாளங்கள்போல…

தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருகிறார்; அப்படி எத்தனை முறை வந்தாலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகளைப் பார்த்து ஆறுதல் சொல்ல முன்வரவில்லை. இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் ஒன்றிய அரசு கொடுத்திருக்கிறது என்று இங்கே இருக்கக்கூடிய கூலிகள் – அரைவேக்காடு அனுமார் பட்டாளங்கள்போலப் பேசுகின்றன.
ஒன்றிய அரசு ஒரு பெரிய திட்டத்தை இதுவரை தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறதா?
நீண்ட காலத்திற்கு முன்பு, செங்கல்பட்டில் ஒரு தொழிற்சாலை ஒன்றிய அரசு சார்பில் தொடங்கப்பட்டது. அது மூடப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிவிட்டன.
கரோனா தொற்று காலகட்டத்தில், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல மாநிலங்களில் கரோனா தொற்று பாதித்தவர்கள் இதனால் அவதியுற்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய முதலமைச்சர்தான் – இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சரும் செய்யாததை – ‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் செய்தார்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கே சென்று பார்த்த ஒரே முதலமைச்சர்!

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று அவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்த ஒரே முதலமைச்சர் நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் அவர்கள், கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தீவிரமாக அங்கேயும், இங்கேயும் அலைந்துகொண்டிருந்தார்கள்.

மூடி வைத்திருக்கும் ஆக்சிஜன் உற்பத்தித் தொழிற்சாலையை திறப்பதற்கான அனுமதியை கேட்டது தமிழ்நாடு அரசு!
பல பகுதிகளிலிருந்து சிலிண்டர்கள் வரவழைக்கப் பட்டன. இன்றைய நிதியமைச்சராக இருக்கக்கூடிய தங்கம் தென்னரசு அவர்கள், டில்லிக்குச் சென்று, ‘‘தமிழ் நாட்டில் மூடி வைத்திருக்கும் ஆக்சிஜன் உற்பத்தித் தொழிற்சாலையை திறப்பதற்கான அனுமதியை கொடுங்கள்; நாங்கள் அந்தத் தொழிற்சாலையை பயன்பாட்டிற்குக் கொண்டுவருகிறோம்” என்று சொன்னார்.

ஒன்றிய அரசினால் மூடப்பட்ட தொழிற்சாலையை மீண்டும் திறந்து, மக்களுக்குப் பயன்படவேண்டும் என்பதற்காக.
ஒன்றிய பா.ஜ.க. அரசு ‘‘மக்கள் விரோத அரசு’’ என்று ஏன் சொல்கிறோம்?

ஒன்றிய பா.ஜ.க. அரசு ‘‘மக்கள் விரோத அரசு” என்று ஏன் சொல்கிறோம் – அது ஒன்றும் அலங்காரத்திற்காக அல்ல; எதிர்ப்புக்கல்ல; வெறுப்புக்கு அல்ல. நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை; எல்லோரையும் அணைக்கக் கூடியவர்கள். எல்லோரையும் விரும்பக் கூடியவர்கள்.

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்கிற திராவிடத் தத்துவத்தின்கீழ் இருக்கக் கூடியவர்கள். அதனால், எங்களுக்கு யார் மீதும் வெறுப்பு வரவேண்டிய அவசியமில்லை.

அந்த சூழ்நிலையில், மனிதர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக ஆக்சிஜன் தொழிற்சாலையைத் திறக்கவேண்டும் என்று கேட்டார்கள்; அன்றைக்குக் கேட்டது, இன்றுவரையில் அனுமதி கொடுத்தார்களா?

இதைவிட மக்கள் விரோதம் வேறு என்ன?
நோயாளிகளுக்குப் பயன்பட வேண்டிய தொழிற்சாலையைக் கூடத் திறக்க ஒன்றிய அரசு அனுமதி தரவில்லையே!

எங்களுக்கு உரிமை இல்லையா?

ஏற்கெனவே மூடப்பட்ட தொழிற்சாலையை, நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்று ஒரு மாநில அரசு கேட்கிறது; கொடுக்கவேண்டியது அனுமதியை மட்டும் தான்; அதற்கான அனுமதியைக்கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறதே! அப்படி என்றால், தமிழ்நாட்டு மக்கள்மீது அவர்கள் எவ்வளவு வன்மத்தோடு இருக்கிறார்கள்; ‘‘அந்த வன்மைத்தைக் காட்டும் உங்களுக்கு, மக்களுடைய வாக்குகள் மட்டும் வேண்டுமா?” என்று கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா?
புண்பட்ட நெஞ்சத்துக்காரர்கள் நாங்கள் கேட்கி றோம். எங்களுடைய சகோதரருடைய பேரன், உங்களுக்குச் சாதாரணமாகத் தெரிகிறார் என்பதுதானே உண்மை!
ஆகவேதான், இந்த அடிப்படையை வைத்துக் கொண்டு உங்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறோம்.

நாட்டில் வேலை வாய்ப்பின்மை!

கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு!
எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கப்பட்டு இருக்கும் – சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால்….
கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு அவர்கள், நாடாளுமன்றத்தில் சொன்னாரே, இன்னும் 23 கிலோ மீட்டர் தூரம்தான் பணிகள் மீதம் உள்ளன என்றாரே!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர்!

1,800 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை – மூன்று, நான்கு பார்ப்பனர்கள் சேர்ந்து, இராமர் பாலம் என்று சொல்லி, அந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர்.
இராமர் பாலம், இராமர் பாலம் என்று சொன்னார்களே, தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, மற்ற தீர்த்தத் தலங்களுக்கெல்லாம் போய் கும்பிடு போட்டாரே, இராமர் பாலம் இருக்கிறது என்று சொல்லப்பட்ட இடத்திற்குப் போய், அங்கே ஒரு கும்பிடு போட்டிருக்க வேண்டாமா?
இராமர் பாலம் என்ற ஒன்று இல்லை என்று சொன்னார்கள்; எங்கே சொன்னார்கள்?
நாடாளுமன்றத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் சொன்னாரே!
‘‘இராமர் பாலம் என்ற ஒன்று இல்லை; அது வெறும் ஆதாம் பாலம்” என்று சொன்னார்கள்.

தென்கிழக்கு ஆசியாவிற்கே மூலபலம்!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; தென்கிழக்கு ஆசியாவிற்கே மூலபலமாகும். வெளிநாட்டுக் கப்பல்கள் வருவதற்குப் பாதுகாப்பான இடமாகும்.
இன்னொரு பக்கம் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கும் திட்டம்.
அந்தத் திட்டத்தை மீண்டும் தொடருவோம் என்று ஒன்றிய அமைச்சரான நிதின்கட்காரி சொன்னார்.
அப்பொழுதுகூட கலைஞர் சொன்னார், ‘‘நாங்கள் சொல்கின்ற இடத்தில் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம்; அதற்கு மாற்றுப் பாதை அமைத்தாவது அந்தத் திட்டத்தை நிறைவேற்றுங்கள். எங்களுக்கு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற வேண்டும்” என்றார்.
பல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று சொன்ன திட்டத்தை உங்களால் நிறைவேற்ற முடிந்ததா?

ஆளுநரின் கேள்வியும் – அர்ச்சகரின் நினைப்பும்!

திடீரென்று இப்பொழுது இராமர், இராமர் என்று சொல்லிக்கொண்டு, தமிழ்நாடு ஆளுநர், கோதண்டராமர் கோவிலுக்குப்போகிறார்; அங்கே இருக்கக்கூடிய அர்ச்சகரிடம், ‘‘நீங்கள் ஏன் மிகவும் பயந்ததுபோல் காணப்படுகிறீர்கள்” என்று கேட்கிறார்.
‘‘ஆமாம், நீங்கள் எல்லாம் வருவதை நினைத்தால், எங்களுக்குப் பயம் தானாக வரும். ஏனென்றால், உங்களுடைய வேலையை விட்டுவிட்டு, மற்ற வேலைகளை செய்வதுதானே உங்களுடைய வழக்கம்” என்று மனதில் நினைத்துக் கொண்டு பயந்திருப்பார்கள்.

‘தீக்கதிர்’ நாளிதழில் வெளிவந்த கட்டுரை!

‘தீக்கதிர்’ நாளிதழில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது; அதே ‘விடுதலை’ நாளிதழிலும் எடுத்து வெளியிட்டு இருக்கிறோம்.
பிவிஆர் தியேட்டர்களில், இலவச டிக்கெட் கொடுத்து, பாப்கார்ன் கொடுத்து இராமனைப் பற்றிய கதையைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
இதுபோன்ற வித்தையைக் காட்டுவதற்கு என்ன காரணம்? சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், விலைவாசி உயர்வைப்பற்றி பேசக்கூடாது; அதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் அதற்குக் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஒன்றிய அரசை ஆளுவோரால், அவர்களுக்குத் தெளிவான பதிலை சொல்ல முடியவில்லை.
‘‘உலகத்திற்கே பெரிய அளவிற்கு வழிகாட்டுவோம்” என்று வாய்ப்பந்தல் போடுவதைத் தவிர, வேறு கிடையாது.
வேலை வாய்ப்பின்மையால் வாடிவரும் இளை ஞர்கள்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் இவ்வளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கிவிட்டோம் என்று அவர்களால் சொல்ல முடியுமா?

பெண்களுக்கு எதிராக நடக்கக் கூடிய பாலியல் கொடுமைகள்!

‘குஜராத் மாடல், குஜராத் மாடல்’ என்று மார்தட்டி சொன்னார்களே, பில்கிஸ் பானு வழக்கில் அது அப்பட்டமாக தெளிவாகத் தெரிந்ததே அந்த மாடல் என்னவென்று!

ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் நீதி படும் பாடு!

கருவுற்ற பெண்ணைத் தாக்கி, கருவில் இருக்கும் குழந்தையைக் கொன்ற குற்றவாளிகளை வெளியில் விடுவித்ததைக் கண்டித்து உச்சநீதிமன்றம் அவர்களை மீண்டும் கைது செய்யவேண்டும் என்று சொல்லியும், குஜராத் அரசு, உச்சநீதிமன்றத்தை எந்த அளவிற்கு மதிக்கின்றார்கள் என்பதற்கு அடையாளம், அந்த உத்தரவைக் கடைப்பிடிக்கவில்லை. அதுகுறித்து உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டித்து, உடனே அவர் களைக் கைது செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட பிறகுதான், அந்தக் குற்றவாளிகள் சரணடைந்தார்கள். இவர்களுடைய ஆட்சியில் நீதி படும் பாட்டைப் பாருங்கள்.
காஷ்மீரில் தேர்தல் எப்பொழுது நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் கேட்கிறது. ஒன்றிய அரசின் பதில் நடத்தப்படும் என்பதுதான்.
எனவே, ஜனநாயகம் எந்த அளவிற்கு மிதிக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள்.

‘இந்தியா’ கூட்டணிக்கு செல்வாக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்!

அதேபோன்று, மணிப்பூரில் மீண்டும் மீண்டும் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. துணிந்து அங்கே ராகுல் காந்தி மக்களைச் சந்திக்கச் செல்கிறார். அவரிடம் மக்கள் தங்களது குமுறல்களைச் சொல்கின்றனர். மக்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு செல்வாக்கு ஏற்படுகிறதே, ‘இந்தியா’ கூட்டணிக்கு செல்வாக்கு வந்துவிடுமோ என்று கருதி, காங்கிரஸ் கட்சியினரின் வாகனங்களைத் தாக்குகிறார்கள்; சற்று நேரத்திற்கு முன்பு நம்முடைய பேராசிரியர் சுப.வீ. அவர்கள் சொன்னதைப்போன்று, கோவிலுக்குள் ராகுல் காந்தி போகக்கூடாது என்று சொல்கிறார்கள்.

‘‘அயோத்திக்கு எல்லோரும் வாருங்கள்” என்று ஒரு பக்கம் அழைப்பு; இன்னொரு பக்கம் கோவிலுக்குள் போகக்கூடாது என்று மறுப்பு. என்ன வேடிக்கை இது?
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா?

அதுபோலவே, அண்டை நாடுகளுடன் பிரச்சினை; ஜாதி வன்முறைகள், பெருமுதலாளிகளுடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள்; ஒன்றிய அரசை எதிர்த்து கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, பனி இவற்றிற்கிடையே விவசாயிகள் நீண்ட நாள்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தை விலக்கிக்கொள்ளச் சொல்லி, என்ன வாக்குறுதி கொடுத்தார் பிரதமர் மோடி அவர்கள் – விவசாயிகளின் வாழ்க்கை இரட்டிப்பு மடங்கு உயரும் என்று.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? மக்கள் விரோத அரசு என்பதற்கு என்ன அர்த்தம்? என்பதை இப்பொழுது புரிந்துகொள்ளுங்கள்.

மாணவர்கள், இளைஞர்கள் படித்து வேலையில்லாமல் இருக்கிறார்களே, அவர்கள் மக்கள் அல்லவா!

குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வோம் என்று சொன்னார்களே, அதனைச் செய்தார்களா?

இதுபோன்ற கேள்விகளையெல்லாம் மக்கள் கேட்கக் கூடாது; எதிர்க்கட்சியினர் கேட்கக்கூடாது என்பதற் காகத்தான், இராமர் கோவில் என்று ஆரம்பித்துவிட்டால், மக்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்; மக்கள் ஒரு பக்கம் பக்தியில் இருப்பார்கள். இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் எல்லாம் இதற்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்.
எனவே, கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற வில்லை என்று மக்கள் கேட்பதை, திசை திருப்பிவிடலாம்; தேர்தல் வரையில் மக்கள் அதை மறக்கவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டா.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள்கூட நேற்று அழகாக பதில் சொல்லியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டா!

அயோத்தி ராமன் கோவில் திறப்பையொட்டி, தமிழ்நாட்டுக் கோவில்களில் பூஜைக்கு அனுமதியில்லை என்று வதந்திகளைப் பரப்புவதில், ஒன்றிய நிதிய மைச்சரே முன்னால் நிற்கிறார், திசை திருப்புவதற்காக அதனைச் செய்கிறார் என்று கூறியுள்ளாரே!
‘‘தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் பூஜைக்குத் தடை’’ என்று
திசை திருப்புகிறார்கள்

சேலத்தில், பல லட்சக்கணக்கான இளைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி, ஒன்றிய அரசுக்கு எதிராக, மாநில உரிமைக்காக நாங்கள் போராடுவோம் என மிகத் தெளிவாக ஒன்றிய அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடிய உணர்வு வந்துவிட்டதே! அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு பெருகிவிட்டதே என்று, அதை மறைப்பதற்காகத்தான் – ‘‘தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் பூஜைக்குத் தடை” என்று திசை திருப்புகிறார்கள்.
திசை திருப்புகிற வேலையில், ஆர்.எஸ்.எஸ்.க்கு கைவந்த கலையாகும். அதற்கு ஒரு பழைய உதாரணம் சொல்லுகிறேன்.

உத்தரப்பிரதேசம் லக்னோவில் பெரியார் மேளா!

உத்தரப்பிரதேசத்தில் நம்முடைய கன்ஷிராம் இருந்தபொழுது, மாயாவதி ஆகியோர் இணைந்து ‘‘பெரியார் மேளா” கொண்டாடினார்கள். மிக முக்கிய விருந்தினர்களாக நாங்கள் அழைக்கப்பட்டு, தமிழ் நாட்டிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டு நாங்கள் எல்லாம் சென்றோம். உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற அவ்விழாவிற்கு, எட்டு திசைகளிலிருந்தும் மக்கள் வந்தார்கள்.

‘பிள்ளையார் பால் குடிக்கிறார்’’ என்று திசை திருப்பினார்கள்!

அந்தச் செய்தி வெளியில் வருகிறது என்று சொன்னவுடன், தமிழ்நாட்டிலிருக்கும் பெரியார் உத்தரப்பிரதேசம் வரை வந்துவிட்டாரே என்று இன எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியாமல், ‘‘பிள்ளையார் பால் குடிக்கிறார்” என்ற செய்தியை நாடு முழுவதும் பரப்பினார்கள்.
உத்தரப்பிரதேசத்திற்குச் சென்று நாங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்குள் மேற்கண்ட செய்தியைப் பரப்பினார்கள்.
தமிழ்நாட்டிற்கு வந்ததும் நாங்கள், சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.அய்.சி. கட்டடம் அருகே டமுக்கடித்து, பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால், அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம்” என்று சொன்னோம்.
‘‘உங்களுக்கு அறிவு நாணயம் இருந்தால், ஒரு லிட்டர் பாலை பிள்ளையார் முன் வைக்கிறோம், அவரைக் குடிக்கச் சொல்லுங்கள்; அப்படி குடித்துவிட்டால், ஒரு லட்சம் ரூபாய் நாங்கள் கொடுக்கிறோம்” என்றோம்.

பிள்ளையார் பால் குடிப்பது எப்படி? விஞ்ஞானிகளின் விளக்கம்!

அப்பொழுது விஞ்ஞானிகள் பிள்ளையார் பால் குடிப்பதற்கான விளக்கத்தைச் சொன்னார்கள். ஈரத்தை ஈர்க்கக் கூடிய உலோகத்தின் முன் பாலை வைத்தால், அது கொஞ்சம் ஈர்க்கும் என்று.

உத்தரப்பிரதேசத்தில் பெரியார் விழா நடை பெறுவதை மறைக்கவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிள்ளையார் பால் குடித்தார் என்கிற டெக்னிக்.
அதுபோன்று சேலத்தில் தி.மு.க. இளைஞரணியினர் நடத்திய மாநாடு மிகப் பிரமாண்டமான அளவிற்கு வெற்றி பெற்றதை மறைக்கவேதான் இப்பொழுது பா.ஜ.க.வின் இப்படிப்பட்ட செயல் முறைகள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமா ணம் எடுத்துக்கொண்டீர்களே, அதன்படி நடக்கிறீர்களா?
அரசமைப்புச் சட்ட விதிகள் வகுக்கப்படும்போது ஒவ்வொரு வார்த்தைகளைப் போடுவது முதற்கொண்டு விவாதம் செய்யப்பட்டுத்தான் வகுக்கப்பட்டு இருக்கிறது.
அப்படி உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில்,

The debate on the preamble unfolded very interesting aspect. Shri.H.V.Kamath a renowned socialist, and leading member of the Constituent Assembly moved an amendment to the preamble to the effect to the first sentence of the Preamble should read:
“In the name of God, We the People of India having solemnly resolved to constitute India into a sovereign democratic republic and to secure all her citizens…” Shri Kamath wanted that –

இதன் தமிழாக்கம் வருமாறு:

அரசியல் நிர்ணய சபையின் முன்னணி உறுப் பினரான திரு.எச்.வி.காமத்தின் அரசமைப்புச்சட்ட முன்னுரை மீதான விவாதம் மிகவும் கவனிக்கவேண்டிய ஒன்றாகும். பொதுவுடைமைக் கொள்கைவாதியான அவர் அரசமைப்புச்சட்ட முன்னுரையின் (Preamble) முதல் வாக்கியத்திற்கு ஏற்றவாறு ஒரு திருத்தத்தை முன்வைத்தார்:

“கடவுளின் பெயரால், இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கும், அதன் குடிமக்கள் அனைவரையும் பாதுகாப்பதற்கும் உறுதியுடன் தீர்மானித்துள்ளோம்…” என்றார்
”பகவத் கீதையின் சாரத்தில் கடவுளுக்கு அர்ப் பணிப்புடன் அரசமைப்புச்சட்டம் அர்ப்பணிக்கப்பட வேண்டும்” போன்றவற்றையும் சேர்க்கவும் விரும்பினர்.
இத்திருத்தத்தை ஒரு சிலர் ஆதரித்தும், பலர் எதிர்த்தும் பேசினர்.

திரு.எம்.திருமல ராவ் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து மனுதாக்கல் செய்தார்.

“கடவுள் என்ற ஒரு விடயத்தை நாடாளுமன்றத்தினுள் வாக்களிக்கும் போது எடுத்து வரக்கூடாது” என்று திரு.எம்.திருமல ராவ் கூறினார்.
ஹெச்.என்.குன்ஸ்ரு இந்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் போது கூறியதாவது –
“அரசமைப்புச்சட்டத்தில் மதம் தொடர்பான உணர்வுகளை விவாதத்திற்கு கொண்டு வந்திருக்கக் கூடாது என்றார் . முன்மொழியப்பட்ட திருத்தம் அனைவருக்கும் கருத்துச்சுதந்திரம், நம்பிக்கை மற்றும் வழிபாட்டுச்சுதந்திரத்தை உறுதியளிக்கும் அரசமைப்புச் சட்ட முன்னுரைக்கு முரணாக இருக்கக்கூடாது”.
அதன்பிறகு, காமத் வாக்கெடுப்புக்காக அழுத்தம் கொடுத்தார், ஆனால் அவரின் இந்த திருத்தச்சட்டம் 41/68 என்ற வாக்கு விகிதத்தில் அவருக்கு எதிர்மறையாக தோல்வியில் முடிந்தது.

இப்பொழுது கடவுளைக் காட்டித்தான் ஓட்டு கேட்கிறார்கள்.
இன்றைக்கு அதே அரசமைப்புச் சட்டத்தில் உள்ள செக்குலர் என்ற வார்த்தையைத் தூக்கி எறிய முயற்சிக்கிறார்கள்.

மனுதர்மம் அரசமைப்புச் சட்டமாக வந்துவிட்டால், சமூகநீதி அறவே ஒழிந்துவிடும்!

ஆகவே, பதவிப் பிரமாணம் எடுத்த அரசமைப்புச் சட்டத்தை அவர்கள் காப்பாற்றவில்லை; தூக்கி எறிந்து விட்டார்கள். அடுத்தபடியாக மீண்டும் ஒன்றியத்தில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், மனுதர்மத்தைத்தான் இந்திய அரசமைப்புச் சட்டமாகக் கொண்டுவருவார்கள். சமூகநீதிக்கு இடமே கொடுக்கக்கூடாது என்பதே அவர்கள் திட்டம். ஏனென்றால், மனுதர்மம் அரசமைப் புச் சட்டமாக வந்துவிட்டால், சமூகநீதி அறவே ஒழிந்துவிடும்.
ஜனநாயகத்திற்கு இடமில்லை; அதற்குப் பதிலாகத் தான் Saffron Republic என்று சொல்லிவிட்டார்கள். அதாவது பெயரில் குடியரசு இருக்கும்; ஆனால், ஹிந்துராஷ்டிரம்தான் இருக்கும்.

A Government for the Hindus, by the Hindus, of the Hindus என்று சொல்லி, ஹிந்துராஷ்டிரா என்று சொல்லி, மெஜாரிட்டி – மைனாரிட்டி என்று பிரித்து, மக்களைப் பங்கு போட்டுக்கொண்டு, ஒருவருக்கொருவர் வெறுப்பு அரசியலை உண்டாக்குகிறார்கள் என்றால், இதற்கு ஒரே பதில், ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறுவது என்பதைத் தவிர வேறு கிடையாது.

‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

எனவேதான், இதில் தெளிவாக இருக்கவேண்டும். ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வேண்டு கோள்- மக்கள் தயாராகிவிட்டார்கள்; நீங்கள் தயாராக வேண்டும், அதுதான் மிக முக்கியமான வேண்டுகோள்.
யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை முன்னிலைப்படுத்துங்கள்.

இந்தியா நமதே! இந்தியா என்றாலே, அவர்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது!

இப்பொழுது இந்தியா என்கிற வார்த்தையை மோடி உள்பட யாரும் பயன்படுத்தப் பயப்படுகிறார்கள். இந்தியா என்றாலே, அவர்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
இதற்கு முன்பு எத்தனை இந்தியாவை பிரதமர் மோடி சொன்னார் தெரியுமா – ‘டிஜிட்டல் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ என்று வரிசையாக ‘‘இந்தியா, இந்தியா” என்று ஒரு பட்டியலையே கொடுத்திருக்கிறார்.

அனைவருக்கும் அனைத்துமான இந்தியாவைக் காப்பாற்ற ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறவேண்டும்!

செல்கின்ற இடமெல்லாம் மோடி சொல்வார் – ஆனால், அத்தனை இந்தியாவையும் மாற்றி, ஹிந்துத் துவா இந்தியா என்று சொல்லக்கூடிய பெரும்பான்மை யான – சமதர்மத்திற்கு விரோதமான, குலதர்ம இந்தி யாவை அமைக்காமல், சமதர்ம இந்தியாவை, அனை வருக்கும் அனைத்தும் தரக்கூடிய சமூகநீதி நீதி – திராவிட இந்தியாவை – அனைவருக்கும் அனைத்துமான இந்தியாவைக் காப்பாற்ற ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறவேண்டும்.
அதைத் திண்ணைப் பிரச்சாரமாக, தெருப் பிரச்சாரமாக செய்யுங்கள்; அதற்குத்தான் இந்த சிறப்புக் கூட்டம் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொருவரும் 10 பேருக்குச் சொல்லுங்கள்; 10 பேரும் நூறு பேருக்குச் சொல்லுங்கள்.

மனிதத்தைக் காப்பாற்றுவதற்காக என்பதை மறந்துவிடாதீர்கள்!

இது கூட்டணிக்காக அல்ல – உங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்காக, உங்கள் பேரப் பிள்ளைகளின் கல்விக்காக, வேலை வாய்ப்பிற்காக – எல்லாவற்றையும்விட, மனிதத்தைக் காப்பாற்றுவதற்காக என்பதை மறந்துவிடாதீர்கள்.
திராவிடம் வெல்லும் – நாளைய வரலாறு அதை சொல்லும்! நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

 

No comments:

Post a Comment