ஒன்றிய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு முன்வந்து செயல்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்பட்டிருந்தால் எத்தகைய புதிய வேலை வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்!
மதவெறி இந்தியாவுக்கு இங்கு இடமில்லாமல், திராவிட இந்தியாவை உருவாக்குவோம்!
நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்களின் புத்தக வெளியிட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, ஜன.24 இராமனைக் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது; ஒன்றிய அமைச்சராக இருந்த
டி.ஆர்.பாலு மேற்கொண்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்பட்டு இருந்தால், எத்தகைய வாய்ப்புகள், நலன்கள் ஏற்பட்டு இருக்கும்! ஹிந்துத்துவ இராமனைக் காட்டி நலத்திட்டங்களை முடக்கும் மதவாத பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்தி, திராவிட இந்தியாவை, மதச்சார்பற்ற இந்தியாவை, சமூகநீதி இந்தியாவை உருவாக்குவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
புத்தக வெளியீட்டு விழா!
நேற்று (23.1.2024) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியிட்டு விழா வில், ‘‘உரிமைக்குரல்’’ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வள்ளுவர் கோட்டம் நினைவுப் பரிசினை டி.ஆர். பாலு வழங்கி சிறப்பு செய்தார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் டி.ஆர். பாலுவுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
வருகின்ற தேர்தலில் இந்தியாவைக் காப்பாற்றவேண்டும் என்றால்…
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடை பெறக் கூடிய வரலாற்றுப் பெருமைமிக்க திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நம்முடைய ஆற்றல்மிகு பொருளாளர் அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களுடைய நான்கு புத்தகங்கள் – ஆவணங்கள் – திராவிட இயக்கத்தினுடைய ஆவணங்கள் என்று குறிப்பிடவேண்டிய அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நான்கு புத்தகங்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, மிக அற்புதமாக இங்கு உரையாற்றி, வருகின்ற தேர்தலில் இந்தியாவைக் காப்பாற்றவேண்டும் என்றால், அது ஒரு ‘புதிய இந்தியா’ மூலம்தான் அதனைக் காப்பாற்ற முடியும் என்பதற்கு அச்சாரமாக இங்கே அருமையான ஓர் உரையை நிகழ்த்திவிட்டு, அவசர மாகச் சென்றிருக்கின்ற நம்முடைய மாண்புமிகு திராவிட நாயகர் முதலமைச்சர் அவர்களே,
மாநில உரிமைக்காகப் போராட்டக் குரலைக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய அமைச்சர் உதயநிதி
அவரைத் தொடர்ந்து, மிகச் சிறப்பாக உரிமைக் குரலை எழுப்பிக் கொண்டிருக்கக் கூடிய மாண்புமிகு அமைச்சர் இளைஞர்களுடைய நலனைக் காப்பது மட்டுமல்லாமல், இந்த நாட்டின் உரிமைக்காகவும், போராட்டக் குரலைக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய அமைச்சர் உதயநிதி அவர்களே,
அவர்கள் விடைபெற்றுச் சென்ற நிலையிலே, அவர்கள் அமைத்த மாநாட்டுக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தது மட்டுமல்ல, அதற்குப் பிறகு இந்த நிகழ்ச்சிக்கும் பொறுப்பாளராக இருக்கக் கூடிய அன்பிற்கும், பண்பிற்கும் உரிய அருமை மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களே,
இந்நிகழ்வில் சிறப்பாக நம் அனைவரையும் வர வேற்று உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் அன்பிற்குரிய அருமைத் தோழர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே,
ஒருங்கிணைப்பாளரும், தி.மு.க. செய்தித் தொடர் பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
இங்கே சிறப்பான வகையில் உரையாற்றி அமர்ந் திருக்கக் கூடிய மேனாள் ஒன்றிய நிதியமைச்சரும், சிறந்த சிந்தனையாளருமான அருமை நண்பர் திரு.சிதம்பரம் அவர்களே,
இங்கே அருமையான உரையை, விளக்க உரையை ஆற்றிய பெருமிகு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே,
வெளியிடப்பட்ட நான்கு புத்தகங்களும் திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றுப் பெட்டகங்கள்!
‘‘எஸ் ஸ்டான்ஸ் செக்குலர்ஸ்’’
அருமை நண்பர், சீரிய பகுத்தறிவாளர் ‘‘எஸ் ஸ்டான்ஸ் செக்குலர்ஸ்” என்று எங்களால் மதிக்கப்படக் கூடிய அருமை நண்பர் திரு.இந்து ராம் அவர்களே,
எதிரில் அமர்ந்திருக்கக் கூடிய மாண்புமிகு அமைச் சர் பெருமக்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே மற்றும் பல துறைகளில் இருக்கக் கூடிய திராவிட இயக்க உணர்வாளர்களே,
கலிக்கோட்டை மண்ணின் மைந்தர்களே!
மற்றும் கலிக்கோட்டையிலிருந்து செங்கோட்டைக் கும், சென்னைக் கோட்டைக்கும் அனுப்பக்கூடிய பல ஆற்றலுடையோர் எங்கள் மண்ணிலிருந்துதான் வந் தார்கள் என்று சொல்வதற்காக, அந்த மண்ணின் மைந்தர்களாக இங்கே வந்து உற்சாகப்படுத்தக் கூடிய அருமைச் சகோதரர்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியிடப்பட்ட நான்கு புத்தகங்களும் திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றுப் பெட்டகங்கள்!
இங்கே வெளியிடப்பட்ட நான்கு புத்தகங்களும் திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றுப் பெட்ட கங்கள் என்ற பெருமையைப் பெறக்கூடியவை.
இது யாரோ ஒரு தனி நபருடைய, டி.ஆர்.பாலு என்ற தனி நபருடைய எழுத்துகள், நினைவுகள், உரைகள் என்று அதைச் சுருக்கிவிட முடியாது. மாறாக, திராவிட இயக்கம் சந்தித்திருக்கின்ற சவால்கள் எல்லாம் எப்படிப்பட்டவை? அதை நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியேயும் மிகப்பெரிய அளவிற்கு, ஒவ்வொரு காலகட்டத்தில் எப்படியெல்லாம் அதைச் சிறப்பாகச் சந்தித்திருக் கின்றோம் என்று, இனி வரக்கூடிய தலைமுறை – எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், தெரிந்து கொள்ளக்கூடிய ஓர் ஆற்றல் வந்திருக்கின்ற என்று சொன்னால், அவசியம் வருகிறது என்று சொன்னால், அதற்கு ஓர் அகராதியைப் புரட்டு வதைப்போல, எதிர்காலத்திலே பயன்படவேண் டிய நூலாக இந்த நான்கு புத்தகங்களும் இருக்கின்றன.
அது வெறும் அவருடைய வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல – இங்கே ‘‘பாதை மாறாத பயணம்” – அதனுடைய தொடர்ச்சிகள் பற்றியெல்லாம் நண்பர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
இந்தியாவிற்கே பாதை போட்டவர்!
இந்தியாவிற்கே பாதை போட்டவர் அவர். அவரு டைய பாதையில்தான் இன்றும் பலர் ஓடிக் கொண் டிருக்கின்றார்கள். அதேநேரத்தில், அந்தப் பாதையைப் போட்டவர்கள் – பாதை மாறா பயணத்திற்குரியவர் என்பது இருக்கிறதே, அதுதான் மிகச் சிறப்பு.
அதுவும் அரசியலில் பாதை மாறா பயணத்தில் இருக்கின்றவர்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய காலம் இந்தக் காலம். ஆனால், திராவிட இயக்கம் அப்படிப்பட்டதல்ல.
அண்ணா அவர்கள் குறிப்பிட்ட
‘‘அந்த வசந்தம்!”
எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும், அந்த சோதனைகளைச் சந்திக்கக் கூடிய ஆற்றல்தான், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்டது. அதைத்தான் அண்ணா அவர்கள் ‘‘அந்த வசந்தம்” என்று குறிப்பிட்டார்கள்.
பதவியில் இருந்த காலம் என்னுடைய வசந்த காலம் அல்ல; தந்தை பெரியாரிடம் இருந்தேனே, அதுதான் என்னுடைய வசந்த காலம் என்று சொன்னார்கள்.
பதவியில் இல்லாத காலத்தில்தான் அந்த வசந்தம் இருந்தது என்று சொல்லி, அந்த வசந்தத்தை வாழ்க்கை முறையாக, வாய்பில்லாதவர்களாக, பேச உரிமையற்ற வர்களாக, பேசாதவர்களாக இருக்கின்றவர்களை அவர் களுடைய குரலைப் பிரதிபலிப்பது எப்படி?
அகிலத்திற்கே அதனை விளக்கிக் கொண்டிருக்கின்றார் நம்முடைய முதலமைச்சர்!
அதைத்தான் அரசியலில் கலைஞர் அவர்கள் கற்றார்.
கலைஞர் அவர்களிடமிருந்து டி.ஆர்.பாலு அவர்கள் தயாரித்தார்கள்.
இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அகிலத்திற்கே அதனை விளக்கிக் கொண்டிருக்கின்றார். இப்படி தலைமுறைகள் கடந்து இந்தப் பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அதைத்தான் அவர்கள் ஒவ்வொரு முறையும் எடுத்துச் சொல்லி, அதனைப் பதிவு செய்திருக்கின்றார்கள்.
ஓர் அரசு, மிக முக்கியமாக இன்றைக்கு எப்படி இருக்கின்றது என்பதற்கு அடையாளமாக, ஒவ்வொரு செய்தியையும் அந்நூலில் தொகுத்திருக்கின்றார்.
அவர் பேசியது, அவர் எழுதியது, அவர் நாடாளு மன்றத்தில் பேசியது, வெளியிடங்களில் பேசியது எல்லாம் தொகுப்பாக இருக்கின்றன.
ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட புத்தகத்தைப்பற்றி யும் அருமை நண்பர் ‘இந்து’ ராம் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்.
முதன்முதலாக பாபா சாகேப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், இளைஞராக வந்து இந்த நாட்டிலே ஒரு சமூகத்தைப் பார்க்கவேண்டும் என்று சொல்லுகின்ற நேரத்தில், மராட்டியத்தில் ஒரு பத்திரிகை வெளிவந்தது – அந்தப் பத்திரிகையினுடைய தலைப்பு ‘‘மூக்நாயக்” – மராத்திய மொழியில் மூக்நாயக் என்று சொன்னால், ‘‘பேசாதவர்களுடைய, பேச முடியாதவர் களுடைய குரலற்றவர்களுடைய குரல்” என்பதுதான்.
திராவிட இயக்கத்தினுடைய மிக முக்கியமான பணி!
எனவே, பேசாதவர்களுக்காகப் பேசுவதுதான் இந்த நாட்டிலே பெரிய புரட்சி. பேசக்கூடாதவர்களாகவும், பேச முடியாதவர்களாகவும் காலங்காலமாக ஆக்கிய ஒப்பற்ற ஒரு சமுதாயத்தைப் பேச வைக்கக் கூடிய சமுதாயமாக மாற்றுவதுதான் திராவிட இயக்கத்தினுடைய மிக முக்கியமான பணி. அதுதான் தந்தை பெரியார் வழியில் இருந்து, அண்ணாவாக இருந்தாலும், கலைஞராக இருந்தாலும், இன்றைய முதலமைச்சராக இருந்தாலும் வழிவழியாக வருகின்றபொழுது, அதை எப்படி என்பதை – அதனையே தலைப்பாக அவர் கொண்டிருக்கின்றார்.
அந்த உரிமைக் குரல் என்பது எப்படிப்பட்டது?
அதேபோல, பாதை மாறா பயணத்திலிருந்துதான் அந்த உரிமைக் குரலை கொண்டு வர முடியும் என்ப தற்கு, வரிசையாக ஒவ்வொரு முறையும் அவர் பேசி யிருக்கிறார்.
எனவே, நூலாய்வு என்று எடுத்துக்கொண்டு, நிறைவு செய்யவேண்டிய அவசியமில்லை, அருமையாக எடுத்து ஒவ்வொருவரும் தெளிவாகச் சொல்லிவிட்ட காரணத்தினால், ஒன்றை மட்டும் நான் சொல்கிறேன்.
‘‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்!’’
மிக முக்கியமான ஒரு பகுதி – அவருடைய வாழ்நாளில் என்றைக்கும் அதை மறுக்க முடியாது – மறக்க முடியாத அவர் செய்த பணி என்று சொன்னால், ‘‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்!”
அந்தத் திட்டம் இன்னும் வெறும் 23 கிலோ மீட்டர்தான் மீதமிருக்கின்றது என்று சொன்னால், இந்த நாட்டினுடைய வளம், இன்றைக்குத் தங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று இளைஞர்கள் எல்லாம் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்களே, வேலை வாய்ப்பு – அதேபோல, பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வரவேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் விரும்புகிறார்களே – அவையெல்லாம் – அந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை – அன் றைக்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தொடங்கிய நிலையில், அவர் கப்பல் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், தலைவர்கள் எல்லாம் மதுரையில் கூடித்தான் அந்தத் திட்டத்தைத் தொடங்கினார்கள்.
அதைப்பற்றி பேசுகின்ற நேரத்தில், திராவிடர் கழகம் ஏற்பாடு செய்தது – 27-1-2023 – இந்தப் புத்தகத்தில் இருக்கின்ற ஒரு பகுதி அது.
ஒரு பெரிய வரலாற்றையே சொன்னார்கள். அவை அத்தனையும் பதிவு செய்திருக்கின்றார்.
23 கிலோ மீட்டர் தூரப் பணிகள் முடிந்திருந்தால், நிச்சயமாக இன்றைக்குக் கோடிக்கணக்கான இளைஞர் கள் வேலை வாய்ப்பைப் பெற்றிருப்பார்கள்.
ஆனால், பா.ஜ.க.வினுடைய தேர்தல் வாக்குறுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னவர்கள் இப்பொழுது ‘‘ஜூம்லா” என்று சொல்கிறார்கள்.
ஆனால், அதேநேரத்தில், அது உண்மையாக நடந் திருக்கவேண்டியது என்பதற்கு அடையாளமாகத்தான், அவர்கள் சொன்னால், எது குறுக்கிட்டது? அதுதான் இப்பொழுது ஓட்டு வாங்குவதற்குப் பயன்படலாம் என்று நினைக்கக் கூடிய இந்த வாய்ப்பாகவும் அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இராமன் கோவிலைத் திறந்து, இராமனைக் காட்டினால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள்!
மற்றவற்றையெல்லாம் மறைத்து, விலைவாசி ஏற்றத்தைப்பற்றி கவலைப்படாமல், வேலை வாய்ப்புத் திட்டத்தைப்பற்றிக் கவலைப்படாமல், இளைஞர்களுக்குச் சொன்ன உறுதிமொழிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம்; இராமன் கோவிலைத் திறந்து, இராமனைக் காட்டினால், வதந்திகளைப் பரப்பினால் மட்டும் போதும் என்று நினைக் கிறார்களே, அவர்களைப் பார்த்துக் கேட்கிறோம், புயல், மழை, வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக கோடிக்கணக்கில் பணம் வரவேண்டும் என்று கேட்கின்ற நேரத்தில், கோடியல்ல, நான் தனுஷ் கோடிக்குப் போயிருக்கிறேன் என்று இன்றைக்குப் போகிறார்களே, அவர்களைப் பார்த்து நான் தெளிவாகக் கேட்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல – தென்கிழக்கு ஆசியாவிற்கே பயன்படக்கூடிய திட்டமாகும்!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ஏன் நிறுத்தப் பட்டது? அந்தத் திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டுமா? இந்தியா முழுவதும் பயன்படுகின்ற திட்டம் – தென் கிழக்கு ஆசியாவிற்கே பயன்படக்கூடிய திட்டமாகும்.
தலைமுறை தலைமுறையாக செழிக்கவேண்டிய ஒரு திட்டத்தை
நிறுத்தி வைத்தார்கள்!
இங்கே வெளியிடப்பட்ட ‘‘உரிமைக்குரல்” புத்தகத் தில் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறிவிட்டால், தி.மு.க.விற்கு நல்ல பெயர் ஏற்பட்டுவிடுமே? அதற்காக தேர்தலுக்கு முன்பாக அந்தத் திட்டத்தைத் தடுக்கவேண்டும் என்று நினைத்தார்கள். அதற்காகத்தான், ‘இராமர் பாலம், இராமர் பாலம்” என்று சொல்லி, இராமனின் பெயரை அப்பொழுது பயன்படுத்தி, அந்த மிகப்பெரிய திட் டத்தை, வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் திட்டத்தை, தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை மட்டுமல்ல; தென்கிழக்கு ஆசியாவினுடைய பொருளா தாரத்தையே மாற்றக்கூடிய மிகப்பெரிய, காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக செழிக்கவேண்டிய ஒரு திட்டத்தை நிறுத்தி வைத்தார்கள்.
அந்தத் திட்டத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டன; இவருடைய உழைப்பு எத் தகையது என்பதையும் பதிவு செய்து வைத்திருக்கிறார். நாளைக்கும் அதுதான் பயன்படப் போகிறது – நிச்சயமாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறும்; அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக, இராமர் சேது பாலம் என்று சொன்னார்கள். அதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். அதற்குண்டான ஆதாரத்தைக் கொடுங் கள் என்று உச்சநீதிமன்றம் கேட்டது. கடைசி வரையில், அவர்களால் கொடுக்க முடியவில்லை.
‘‘இராமர் பாலம் இருந்ததற்கான
எந்தவிதமான ஆதாரமும் இல்லை’’ என்று
பா.ஜ.க. அரசே ஒப்புக்கொண்டது!
கடைசியில், மோடி அரசாங்கம், பா.ஜ.க. அரசாங்கத்தில், நாடாளுமன்றத்தில், அவருடைய கட்சிக்காரரிடம் கேள்வி கேட்டபொழுது, அவரே சொன்னார், ‘‘இராமர் பாலம் இருந்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை” என்று.
மறுபடியும் ஒரு மாநாட்டைக் கூட்டி, இப்பொழுதாவது அந்தத் திட்டத்தைத் தொடரலாம்; எங்களுக்கு அந்தப் பெருமை வேண்டாம்; உங்களுக்கே அந்தப் பெருமை வரட்டும்; ஏன், உங்கள் இராமனுக்கே அந்தப் பெருமை வரட்டும் என்று அப்பொழுது சொன்னார்.
இன்னுங்கேட்டால், கலைஞர் அவர்கள், அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் மிகப்பெரிய ஆர்வம் காட்டிய காரணத்தால், அந்தக் காலகட்டத்தில் நம் முடைய பாலு அவர்கள் கப்பல் துறை அமைச்சராக இருந்தார், அந்தத் திட்டத்திற்கான பணிகள் தொடங் கப்பட்டன.
இராமர் பாலம் என்று சொல்கிறீர்களே, அந்த இடத்தை விட்டுவிட்டு, நீங்கள் மாற்றுப் பாதையிலாவது அந்தத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்; எங்களுக்கொன் றும் அதில் பிடிவாதம் இல்லை. மக்களுக்கு அந்தத் திட்டம் பயன்படவேண்டும் என்று சொன்னார்.
இரண்டு ஆண்டுகளாகியும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைத் தொடரவில்லை!
ஆனால், மீண்டும் மீண்டும் அந்தத் திட்டத்தைத் தள்ளிப் போவதற்காக, நீதிமன்றத்தையும், வழக்கையும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள்; பிறகு நாடாளு மன்றத்தில் நீங்களே ஒப்புக்கொண்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மீண்டும் தொடரவேண்டும் என்பதற்காக மதுரையில் மாநாடு கூட்டிய நேரத்தில், அத்தனை செய்திகளையும் நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் எடுத்துச் சொன்னார்.
இராமனை தேர்தல் இராமனாக, தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தப் போகிறீர்கள்!சுருக்கமாக ஒரே ஒரு கேள்வியை நான் கேட்கிறேன், இராமன் கோவிலைத் திறப்பதற்கு முன், மோடி அவர்கள், எல்லா தீர்த்தங்களுக்கும் சென்ற பிறகு, அயோத்திக்குச் சென்று இராமன் கோவிலைத் திறந்து வைத்து, அதனை தேர்தலுக் காக, தேர்தல் இராமனாக, தேர்தல் ஆயுதமாக அதனைப் பயன்படுத்தப் போகிறீர்கள்.
22 ஆம் தேதி அயோத்தியில் இராமன் கோவி லைத் திறந்தீர்கள்; 25 ஆம் தேதியிலிருந்து உத் தரப்பிரதேசத்திலிருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கப் போகிறேன் என்று சொல்கிறீர்களே, உங்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி.
‘‘இராமன் பாலம்‘’ என்ற ஒன்றிருந்தால், அதனையும் ‘சேவித்து’ இருக்கலாமே? பிரதமர் மோடி!
இராமன் பாலம் இருந்திருந்தால், இராமன் பெயரில் எந்தெந்த தீர்த்தங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் போய், தனுஷ்கோடி கடல் வரைக்கும் சென்று, அங்கே உற்றுப் பார்த்த நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், ‘‘இராமன் பாலம்” என்ற ஒன்றிருந்தால், அதனையும் ‘சேவித்து’ இருக்கலாமே? அவர் சென்றாரா? அதனைக் கும்பிட்டாரா? இல்லையே!
காரணம், அப்படி ஒரு பாலம் இல்லையே என்று முன்பே சொல்லிவிட்டார்கள்.
ஆகவேதான், அவர்களுடைய நோக்கம் என்ன வென்றால், திராவிட இயக்கத்திற்கோ, அய்க்கிய முற் போக்குக் கூட்டணிக்கோ சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தால் பெருமை வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.
நாட்டின் வளர்ச்சிக்கு மூடநம்பிக்கை தடையாக இருக்கிறது!
பிரச்சினை பக்தி அல்ல நண்பர்களே, நாட்டின் வளர்ச்சிக்கு, அவர்களுடைய மூடநம்பிக்கை எவ்வளவுத் தடையாக இருக்கிறது என்பதுதான் மிக முக்கியம். அதைத்தான் திராவிட இயக்கம் சொல்கிறது.
பெரியார் சொன்னார், ‘‘பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து” என்று.
ஒரு மனிதனுக்கு பக்தி இருக்கிறதா, இல்லையா? என்பதைப்பற்றிக் கவலையில்லை.
பக்தி இருந்தால் என்ன சொல்வார்கள், மோட்சத்தில் முன் சீட்டில் அமருவார்கள் என்று சொல்வார்கள்.
எங்களைப் போன்ற பக்தி இல்லாதவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்று சொல்வார்கள். அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை.
சமூகத்தைப் பாதிக்கும்; சமூக வளர்ச்சியைப் பாதிக்கும்!
மோட்சம் – நரகம் என்பது இருக்கிறதா, இல் லையா? என்பது வேறு பிரச்சினை. இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், அது தனிப்பட்ட ஒரு நபரின் பிரச்சினையே தவிர, பொதுமக்கள் பிரச்சினை கிடையாது.
ஆனால், பொது ஒழுக்கம் இல்லையென்றால், பொதுச் சொத்தாகக் கருதவில்லையானால், அது எல்லோரையும் பாதிக்கும்; சமூகத்தைப் பாதிக்கும்; சமூக வளர்ச்சியைப் பாதிக்கும் என்று சொன் னார்கள்.
அந்த சமூக வளர்ச்சியைப்பற்றி சிந்திப்பதுதான் திராவிடர் இயக்கம். அதற்காக உழைத்து, உழைத்துத்தான் இதுபோன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார். இது போன்று எத்தனையோ புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
ஆகவே நண்பர்களே, இந்தக் கருத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக மக்கள் வரிப் பணம் ரூ.1,800 கோடிக்கு மேலே செலவாகியுள்ளது. அந்தப் பணி முடிவடைய வெறும் 23 கிலோ மீட்டர்தான் மீதமுள்ளது.
அந்தத் திட்டத்தை நிறுத்துவதற்காக ஒரு பொய்யைச் சொன்னார்கள்; அதே பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட நேரத்தில், இன் றைய ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடிய நிதின் கட்காரி என்ன சொன்னார் என்றால், ‘‘மீண்டும் அந்தத் திட்டத்தைத் தொடருவோம்” என்று.
உத்தரவாதக் குழு இருக்கிறது; நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கே இருக்கிறீர்கள்; உறுதிக் கொடுத்தார்களே, அதன்படி நடந்தார்களா?
இதையெல்லாம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்பதற்கு ஜனநாயகம் இருக்கிறதா? என்றால், கிடையாது. எதிர்க்கட்சிகளே இல்லாமல், நாடாளுமன்றத்தில் அவர்களுக்குத் தேவையான மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
உரிமைக்குரல் என்பதுதான் இன்றைய தேவை! அந்த உரிமைக் குரல் எல்லா இடங்களிலும் ஒலித்தாகவேண்டும்!
எனவேதான், இங்கே உரிமைக் குரலை எழுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த உரிமைக் குரல் என்பது வெறும் புத்தகத்தினுடைய தலைப்பு அல்ல நண்பர்களே, உரிமைக்குரல் என்பதுதான் இன்றைய தேவை! அந்த உரிமைக் குரல் எல்லா இடங்களிலும் ஒலித்தாகவேண்டும் என்பதுதான் இப்பொழுது மிகவும் முக்கியம்.
ஆகவே, ‘‘உரிமைக்குரல் என்பது வெறும் தலைப்பு அல்ல! இந்தப் புத்தகத்தினுடைய ‘‘பாதை மாறாத பயணம்” என்பது வெறும் தலைப்பு என்று நினைக்காதீர்கள். அதுதான் நம்முடைய லட்சியப் பயணத்தினுடைய இலக்கு. அந்த இலக்கை நாம் அடைய நினைத்தால்தான், நாம் வெற்றி பெற முடியும்! அதைத்தான் வருகின்ற தேர்தலில் நாம் செய்யவேண்டும்.
திராவிட இந்தியாவை,
மதச்சார்பற்ற இந்தியாவை,
சமூகநீதி இந்தியாவை படைப்போம்!
அந்த வகையிலேதான், மதவெறி இந்தியாவிற்கு இடமில்லாமல், திராவிட இந்தியாவை, மதச்சார்பற்ற இந்தியாவை, சமூகநீதி இந்தியாவை படைப்போம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமையட்டும்!
வாழ்த்துகள்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.
No comments:
Post a Comment