கழகத்தின் களப் பணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 3, 2024

கழகத்தின் களப் பணிகள்

featured image

வடசென்னையில் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியார்
50ஆம் ஆண்டு நினைவு நாள் – உறுதியேற்பு பொதுக்கூட்டம்

சென்னை, ஜன. 3- தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் – 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்புப் பொதுக்கூட்டம் தமிழ்நாடெங்கும் நடத்தப்பட வேண்டுமென தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வேண்டு கோள் விடுத்திருந்தார்.
அதன்படி, 27.12.2023 அன்று சூளை மார்க்கட் – சுப்பா (நாயுடு) தெருவில் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாட்டில் “தந்தை பெரியார் 50 ஆண்டு நினைவு நாள் – உறுதியேற்பு பொதுக்கூட்டம்” எழுச்சியோடு நடைபெற்றது.

இசை நிகழ்ச்சி
தொடக்க நிகழ்ச்சியாக, மாலை 6 மணிக்கு ந.கோபி – கோ.அன்புமணி இணையர் இணைந்து வழங்கிய கோபி-இன் “இளைய ராகம்” இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் குறித்த பாடல்களையும், கொள்கை விளக்கப் பாடல்களையும் உரிய இசை, நயமுடன் ஒலிக்க சிறப்பாகப் பாடி கூட்டத்தினரது பாராட்டைப் பெற்றனர்.
வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் கூட்டத்திற் குத் தலைமை வகித்து, பேச்சாளர்களை அறிமுகம் செய்து இணைப்புரை வழங்கினார்.
கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், அமைப் பாளர் சி.பாசுகர், இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன், செயலாளர் சு.அரவிந்த குமார், மகளிரணி செயலாளர் த.மரக தமணி, க.கலைமணி, தங்க.தனலட்சுமி, தென்சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் துரைஅருண், மகளிர் பாசறை தலைவர் மு.பவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உரையாற்றியோர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடசென்னை மாவட்ட மேலிடப் பொறுப்பாளர் இரா.செல்வம், தென் சென்னை மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் துரை.அருண், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் அமைப்பின் மாநில செயலாளர் குமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் மாநில ஒருங்கிணைப் பாளர் வழக்குரைஞர் புத்தநேசன் ஆகியோர் உரையாற்றினர்.

சிறப்புரை
அடுத்து ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் சிறப்புரையாற்றினார்.
தந்தை பெரியார் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைவர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் சிறப்பாக உதவி செய்தனர். திராவிடர் கழகம், ம.தி.மு.க. சார்பிலும் நிவாரண உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு – இசுலாமியத் தோழர்கள் தங்குவதற்கு மசூதிகளை ஒதுக்கித் தந்து சிறப்பாக சேவை செய்தனர். மாநில அரசு கேட்டும் நிதியை ஒன்றிய அரசு தருவதற்கு அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் போன்ற வர்கள் துணை நிற்க வேண்டும்.
ஆனால், நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்று பேசுகின்ற ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உணர்வுகள் தமிழர், தமிழ்நாடு நலனைச் சார்ந்ததாக உள்ளதா?
கரண்டியைத் தூக்கித் திரிந்த பெண்களின் கரங்களில் புத்தகத்தைக் கொடுத்தவர் தந்தை பெரியார். வடநாட்டு இளைஞர்கள் பான்பராக் போதையில் மூழ்கி இருப்பது போன்று தமிழ்நாட்டு இளைஞர்கள் இல்லை. அவர்கள் படித்து முன்னேறியதற்குக் காரணம் தந்தை பெரியார்.
பார்ப்பான் என்று யாருக்குப் பிச்சை போட்டான்? வரலாறு உண்டா? பிச்சை வாங்குவான். “நீரில்லா நெற்றி பாழ், நெய் இல்லா உண்டி பாழ்” என்பவன் பார்ப்பான்.
“கடவுளை, கோவிலை, மதத்தை வைத்துப் பிழைக் கின்றவன் பார்ப்பான். அத்தகைய பார்ப்பான் உள்ள கோவி லுக்கு நீ போகலாமா? உண்டியலில் காசு போடலாமா? தீர்த்தம் வாங்கிக் குடிக்கலாமா?” என்று கேட்டவர் பெரியார் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜாதி ஒழிப்புதான் அடிப்படை
அடுத்து திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி பேசுகையில், டிசம்பர் 8, 9 1973ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய “இன இழிவு ஒழிப்பு” மாநாட்டின் நோக்கமே – அடிப்படையே ஜாதி ஒழிப்பு என்பதுதான். அதன்படி நமக்குக் கிடைத்ததுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற சட்டமாகும். பெரியார் வென்று காட்டினார்.
தந்தை பெரியார், “தகைசால் தமிழர்” தமிழர் தலைவர் அயராத உழைப்பால் இந்தியாவையும் தாண்டி – உலகப் பெரியாராக இன்றைக்கு ஆகியுள்ளார். உலகநாடுகளில் இனவெறி, வர்க்கப் போராட்டம், ஏழை – பணக்காரன் உள்ள நிலையில் இந்தியாவில்தான் – இங்குதான் வருணாசிரமக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஜாதிப் பாம்பு அச்சுறுத்துகின்றது.
வைக்கம் போராட்டம் – மனித உரிமை மீறலை எதிர்த்து நடைபெற்ற போராட்டம். போராட்டத்தை நடத்திய தந்தை பெரியார் இதற்கென இரண்டு முறை சிறையில் அடைக்கப் பட்டார். கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இடஒதுக்கீட்டை எதிர்த்து பார்ப்பனர்கள் தங்களுக்கு என்று வரும் பொழுது ணிகீஷி என்ற உயர்ஜாதி ஏழைப் பிரிவை உருவாக்கிக் கொண்டு விட்டார்கள்.
அவசர அவசரமாக நான்கைந்து நாளில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.
ரூபாய் நோட்டு செல்லாது என்றார்கள், ரூபாய் நோட்டு களில் மாற்றம் என கொண்டு வந்தார்கள். ஹிந்தி மொழியைத் திணிக்கும் விதமாக, குற்றவியல் சட்டங்களின் பெயர்களை எல்லாம் மாற்றுகிறார்கள். தமிழர் தலைவரின் வழிகாட்டுதல்படி வருகின்ற தேர்தலின்போது பி.ஜே.பி. கூட்டம் தோற்கடிக்கப் படும் என்றார்.
நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பேசும்போது, இந்தியாவிலேயே முதன்முறையாக ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக வருவதற்கு வழிவகுத்துத் தந்தவர் தந்தை பெரியார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்த ஆர்.எஸ்.மலையப்பன் வழக்கில் – நீதிமன்றத்தில், நீதிபதி முன்பாகவே “பார்ப்பான் நீதிபதியாக இருக்கும் நாடு – கடும் புலி வாழும் காடு” என்றவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் துணிச்சல்
பா.ஜ.க.வின் ஒன்றிய ஆட்சியை இன்றைக்கு தமிழ் நாட்டில் உள்ள மக்கள் துணிச்சலாக எதிர்ப்பதற்கு தமிழ் நாட்டில் தந்தை பெரியார் தந்த துணிச்சலே காரணம்.
அமலாக்கத் துறையை வைத்து – இந்திய அளவில் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தோரை அச்சுறுத்தி ஒடுக்குகின்ற வகையில் ஒன்றிய அரசு செயல்படுகின்றது. ஆனால், தமிழ்நாட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரி இன்றைக்கு கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் தந்தை பெரியார் வழியில் இந்த ‘திராவிட மாடல்’ அரசு செயல் படுவதால்தான் அத்தகைய துணிச்சலைப் பெற்றுள்ளது.
என்னதான் ஆனாலும் பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் திருந்தவே மாட்டார்கள். இந்தியாவின் குடியரசுத் தலைவரிடம் வெள்ளைப் புடவையைக் சங்கராச்சாரியார் கொடுப்பதற்கு என்ன அர்த்தம்?
அதுவும் அந்த அம்மையாரைத் தொட்டுவிட்டால் தீட்டு ஏற்பட்டு விடும் என்று இன்னொருவரைக் கொண்டு அதைக் கொடுக்கின்ற பார்ப்பனப் புத்தி சற்றும் குறையாமல அவர்களிடம் இன்றைக்கும் இருக்கின்றது. நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு இல்லையே – ஏன்? இந்து மத வர்ணாசிரம அடிப்படைதானே இவைகட்குக் காரணம் என விளக்கமாகப் பேசினார்.

பயனாடை அணிவித்து
சிறப்பு செய்யப்பட்டது
இப்பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாளர்களுக்கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் வடசென்னை மாவட்ட கழக சார்பாக பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
இசைக் குழுவினர் பாராட்டப் பட்டனர்
கோபி-இன் “இளையராகம்” – இன்னிசை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ந.கோபி – கோ.அன்புமணி இணையருக்கு கழகத் துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பயனாடை அணிவித்துப் பாராட்டினார். பொது மக்களும், கழகப் பொறுப்பாளர்களும் இசைக் குழுவினரை அன்பளிப்பு வழங்கிப் பாராட்டினர்.
பொதுக்கூட்டத்தை முன்னிட்டு சுப்பா (நாயுடு) தெரு – அங்காளம்மன் கோவில் தெருப் பகுதிகளில் கழகக் கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன.

கலந்துகொண்டனர்
78 (அ) வட்ட தி.மு.க. செயலாளர் ந.பாலு, ம.தி.மு.க. எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார், எழும்பூர் தொகுதி வி.சி.க. துணை அமைப்பாளர் டி.விக்னேஷ், மத்திய சென்னை மாவட்ட வி.சி.க. துணை செயலாளர் பூங்கா வீ.அருள், வி.சி.க. வட்ட செயலாளர் விஜயகுமார், 78ஆவது வட்ட ம.தி.மு.க. தோழர்கள் ஆர்.தினேஷ் குமார், ம.தி.மு.க. பகுதி பிரதிநிதி பி.பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கீ.சு.குமார், கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, மங்களபுரம் கழக அமைப்பாளர் மு.டில்லிபாபு, கே.என்.மகேசு வரன், சி.தனுஷ்குமார், ச.வெங்கடேஷ் மற்றும் கழகத் தோழர் கள், ஏராளமான பொது மக்களும் இப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நிறைவாக செம்பியம் கி.இராமலிங்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment