மோடி கொடுத்த வாக்குறுதி எதையாவது காப்பாற்றியுள்ளாரா?
இராமர் என்கிற மயக்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து
மக்களின் வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடுகிறது பா.ஜ.க.!
மக்கள் விழிப்பாக இருந்து ஒன்றிய பா.ஜ.க. அரசை வீழ்த்தவேண்டும்!!
கோவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
கோவை, ஜன.11 2014 ஆம் ஆண்டுமுதல் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதியில் எதையாவது காப்பாற்றி இருக்கிறாரா? இராமர் என்ற மயக்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து, மக் களின் வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடு கிறது பா.ஜ.க. வெகுமக்கள் விழிப்புடன் இருந்து ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று (11.1.2024) காலை கோயம் புத்தூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
தேர்தலுக்கு ராமர் கோவிலையே நம்பிக் கொண்டிருக்கின்றார்
பிரதமர் மோடி!
செய்தியாளர்: ஒன்றிய அரசின் செயல் பாடுகள் எப்படி இருக்கின்றன?
தமிழர் தலைவர்: ராமர் கோவிலைக் கட்டிக் கொண்டு, அந்தக் கோவிலை வைத்தே பொதுத் தேர் தலைச் சந்திக்கலாம் என்று பிரதமர் மோடி நம்பிக் கொண்டிருக்கின்றார். அந்த நம்பிக்கையை மய்யமாக வைத்தே ஒன்றிய அரசின் செயல்பாடுகள் உள்ளன.
அதனை மக்கள் மத்தியில் தெளிவாக விளக்கு வதற்கு ‘இந்தியா’ கூட்டணி தயாராகிக் கொண்டிருக் கின்றது.
ஏனென்றால், எதை எதையெல்லாம் பிரதமர் மோடி வாக்குறுதியாகச் சொன்னாரோ, அந்த வாக்குறுதிகளை அவர் காப்பாற்றவில்லை என்பது இப்பொழுது மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றும், ஒவ்வொரு குடி மகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம் செலுத்துவோம் என்றும், விலைவாசியைக் குறைப் போம் என்றும் சொன்னார்.
குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும் என்று விவசாயிகளிடம் கூறினார். விவசாயிகளின் வாழ்க்கையை இரட்டிப்பு மடங்காக உயர்த்துவோம் என்றும் சொன்னார்.
மிகப்பெரிய அளவிற்கு, இந்தியாவில் யாரும் செய்யாத அளவிற்கு, மிக எளிமையாக, வெளிப்படைத் தன்மையாக என்னுடைய அரசு இருக்கும் என்றெல் லாம் சொன்னார்.
காங்கிரஸ் ஆண்ட காலத்தில், எந்தவிதமான ஜனநாயகப் போக்கும் இல்லை என்று சொன்னார்.
அன்றைய குஜராத் முதலமைச்சர் மோடி – இன்றைய பிரதமர் மோடி!
குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில், ”மாநிலங்களுக்கு உரிமையே இல்லை; என்னையே குறி வைத்திருக்கிறார்கள், என்னுடைய பிணத்தின்மீதுதான் ஜி.எஸ்.டி. வரவேண்டும்” என்று சொன்னார்.இப்படியெல்லாம் அவர் எதை எதை சொன்னாரோ, அவை அத்தனையும் இப்பொழுது தலைகீழாக இருக் கின்றது என்பதை மறைப்பதற்காக பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
வேலை வாய்ப்பின்றி இளைஞர்கள் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
எவையெல்லாம்இந்தியஅரசமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட அமைப்புகளோ, பொது நிறுவ னங் களோ அவை அரசமைப்புச் சட்ட ரீதியாக சுதந்திர மாகச் செயல்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்பது இப் பொழுது நாடாளுமன்றக் கூட்டத்திலேயே தெரிந்தது.
அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலேயே இப்படி யொரு நிகழ்வு நடந்திருக்கின்றதே என்று எதிர்க் கட்சிகள் எல்லாம் கவலை தெரிவித்த நிலையில், அது குறித்து பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்து பேசு வதற்குத் தயாராக இல்லை.
மக்கள் நலத்திற்கு அவர் அக்கறை செலுத்துகிறார்; பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்கிறார் என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்களே – அதற்கு எதிர்மறை யாகவே நடந்துகொண்டுள்ளார் என்பதற்குத் தமிழ் நாடே அதற்கு உதாரணம்.
கடந்தசிலவாரங்களுக்குமுன்மிக்ஜாம்புயலால் பாதிக்கப்பட்டசென்னைஉள்ளிட்டசிலமாவட்டங் களிலும், அதற்குப் பிறகு மழை, வெள்ளத்தால் தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபொழுதும், ஒன்றியத்தி லிருந்து வந்த குழுவினர் அவற்றையெல்லாம் பார்த்து விட்டு, தமிழ்நாடு மிகவும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறது; இருந்தும் தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
இதுவரை ஒன்றிய அரசிடமிருந்து எந்தவிதமான நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை!
ஆனால், இதுவரை ஒன்றிய அரசிடமிருந்து எந்த விதமான நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில், சாதாரண நிகழ்வுகளுக்கு, நிலைகளுக்குக் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளிக்கிறது ஒன்றிய அரசு.
நாம் கட்டுகின்ற வரிப் பணத்தையே, நமக்குத் திருப்பிக் கொடுப்பதற்கு ஒன்றிய அரசு தயாராக இல்லை. 29 பைசாதான், ஒரு ரூபாய்க்குக் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்.
அதேநேரத்தில், ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாட் டிற்குப் படையெடுக்கிறார்களே தவிர, அதனால் எந்தவிதமான பயனும் இல்லை.
இராமர் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை மக்களுக்குக் கொடுக்கலாம் என்ற முடிவினை எடுத்திருக்கிறார்கள்!
எந்த வகையிலும் தங்களுக்கு மக்களிடையே ஆதரவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கட்சியினர், பக்தி மார்க்கத்தின்மூலமாக, தேர்தலில், இராமர் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை மக்களுக்குக் கொடுக்கலாம் என்ற முடிவினை எடுத் திருக்கிறார்கள்.கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை, அவசர அவசரமாகத் திறக்கவேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.
இதுவரை இந்த நாட்டில் மட்டுமல்ல, வேறு எந்த நாட்டிலும்கூட பிரதமரே ஒரு கோவிலுக்கு அடிக்கல் நாட்டி, அவரே அதனைத் திறந்து வைத்ததில்லை.
இந்த சூழ்நிலைதான் இன்றைக்கு நாட்டில் இருக் கிறது.
பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டுத்தான், இவர்கள் தேர்தலைச் சந்தித்தார்களா?
செய்தியாளர்: ‘இந்தியா’ கூட்டணியில் பிரதமர் வேட்பாளரே இல்லை என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: தேவையில்லை. உதாரணமாக, மூன்று மாநிலங்களில் பா.ஜ.க.வினர் வெற்றி பெற்று இருக்கிறார்களே, தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தார்களா? மத்திய பிரதேசத்திற்கு இவர்தான் முதலமைச்சர் என்று சொல்லிவிட்டா, தேர்தலை சந்தித்தார்கள்?
இல்லை. இன்னுங்கேட்டால், ஏற்கெனவே இருந்த கூட்டணியில்கூட, ஜனசங்கம் என்ற பெயரில் இருந்த பாரதீய ஜனதா, அப்பொழுது அவர்கள் தேர் தலை சந்திக்கும்பொழுது, பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டுத்தான், தேர்தலைச் சந்தித்தார்களா? என்றால் இல்லை.
அது தேவையும் இல்லை. அது அவரவர்களுடைய வசதியைப் பொறுத்தது.
‘இந்தியா’ கூட்டணிக்கு, கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒப்புக்கொண்ட பிறகு, யார் யாருக்கு வாய்ப்பிருக்கிறதோ, அதனை அவர்கள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்.
பா.ஜ.க. ஆட்சி, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ‘மனுதர்மம்’தான் இந்திய அரசமைப்புச் சட்டமாக மாறும்!
அவர்களிடையே ஒரு பொதுத் திட்டம் இருக்கிறது. இன்றைக்குத்தேவையான,அடிப்படையானதிட்டம் என்னவென்றால்,இந்தியஅரசமைப்புச் சட்டம் காப்பாற் றப்படவேண்டும்; இன்றைக்கு இருக் கின்ற ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ‘மனுதர்மம்’தான் இந்திய அரசமைப்புச் சட்டமாக மாறுமே தவிர, வேறு கிடையாது.
ஆகவேதான், ‘இந்தியா’ கூட்டணியைப் பொறுத்த வரையில், பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவேண்டிய அவசியமில்லை. அது ஜனநாயகத்திற்கும் உகந்ததல்ல.
உண்மையான ஜனநாயகம் என்னவென்றால், யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அவர்களால் பிரதமர் பதவிக்கு உரியவர் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் நூற் றுக்கு நூறு சரியான உண்மையான ஜனநாயகம்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுது சொன்னவற்றை நிறைவேற்றவில்லையே?
செய்தியாளர்: ஒன்றிய அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சொல்கிறீர்களே, மாநில அரசு என்று எடுத்துக்கொண்டால், எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபொழுது, சில வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தார். பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்றும் சொல்லியிருந்தார். ஆனால், அவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், அதனை நிறைவேற்ற வில்லையே?
தமிழர் தலைவர்: நான் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்கு நீங்கள் முதலில் பதில் சொல்லுங்கள்.
ஒன்றிய அரசினுடைய நிதியமைப்பும், மாநில அரசினுடைய நிதியமைப்பும் இரண்டும் ஒன்றா?
தமிழ்நாடு அரசு – தி.மு.க. அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள்தான் முடிந்திருக்கின்றன. ஆனால், ஒன்றிய அரசு – பா.ஜ.க. அரசு ஆட்சி பொறுப்பு என்பது இரண்டாவது முறையாகப் பதவி யேற்று, பொதுத் தேர்தலும் வரவிருக்கிறது.
இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக் கிறது. ஒன்றிய அரசு செய்யவில்லை என்று கேட்பதற்கு நூற்றுக்கு நூறு உரிமை உண்டு.
திரும்பத் திரும்பக் கேட்டால்தான், ஜி.எஸ்.டி. பணத்தைக்கூட கொடுக்கிறது ஒன்றிய அரசு!
தமிழ்நாடு அரசுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. அடுத்தபடியாக, நமக்கு வரவேண்டிய பணத்தையே ஜி.எஸ்.டி. பணத்தைக்கூட கொடுக்காமல், மீண்டும் மீண்டும் வற்புறுத்தி, வற்புறுத்திக் கேட்டால் தான், திரும்பத் திரும்பக் கேட்டால்தான் கொடுக்கிறது ஒன்றிய அரசு.
தமிழ்நாட்டில், புயல், மழை, வெள்ளப் பாதிப்பால் மிகப்பெரிய அளவிற்குச் சேதாரம் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு நிவாரணம் கொடுங்கள் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியும், பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்தும் முதலமைச்சர் வலியுறுத்தினார். ஆனால், இதுவரை எந்த நிவாரண நிதியையும் ஒன்றிய அரசு கொடுக்கவில்லை.
மேலும் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைப் பார்வையிட பிரதமர் மோடி வர வில்லை; திருச்சி விமான நிலையத் திறப்பு விழாவிற்கு வந்து, விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார்; ஆனால், புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவில்லை.
இந்தியாவிற்கே வழிகாட்டியது தமிழ்நாடுதான்!
நம்முடைய வருமானம்தான் ஒன்றிய அரசின் நிதிக்குப் போகிறது; அதைத் திருப்பிக் கொடுக்கமாட் டோம் என்கிறார்கள்.
விற்பனை வரி என்பதில் இந்தியாவிற்கே வழிகாட் டியது தமிழ்நாடுதான்; இராஜகோபாலாச்சாரிதான் வழிகாட்டினார்.
ரயில்வே திட்டங்களை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை.
ஆகவேதான், நாம் கேட்பது நம்முடைய உரிமையைத்தானே தவிர, சலுகையே அல்ல.
நம்முடைய பணத்தை ஒன்றிய அரசுக்குக் கொடுத்துவிட்டு, திரும்பி வாங்குவதற்கு அவர்களைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தவேண்டி இருக்கிறது; அப்படி வலியுறுத்தினாலும், அவர்கள் தருவதற்குத் தயாராக இல்லை.
மாநிலத்தில் பேரிடர் ஏற்பட்டால், பேரிடர் நிதியி லிருந்து கொடுக்கவேண்டியதுதான் ஒன்றிய அரசின் கடமை! ஆனால், அதனை அவர்கள் செய்தார்களா?
அரசமைப்புச் சட்டப்படி அரசாங்கத்தினுடைய ஒரு பகுதிதான் ஆளுநர்!
செய்தியாளர்: சேலம் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியில் இருக்கிறார். இந்த நிலையில், அந்தப் பல்கலைக் கழகத்திற்கு ஆளுநர் வருவது சரியா? அவர் வருகைக்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்களே?
தமிழர் தலைவர்: ஆளுநர் என்பவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள் வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
அந்தப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்மீது வழக்கு நிலுவையில் இருக்கிறது.
ஆளுநர் என்பவர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவின்படி, அரசாங்கத்தினுடைய ஒரு பகுதிதான்.
ஓர் அரசாங்கம் வழக்குப் போட்டிருக்கிறது என்றால், ஆளுநர் என்பவர் அங்கே போகக்கூடாது.
துணைவேந்தர் ஒருவர் குற்றவாளி என்று அவர்மீது வழக்குப் போட்டு, அவர் கைது செய்யப்பட்டு, பிணை யில் வெளியில் இருக்கும்பொழுது, ஆளுநர் நேரில் சென்று விசாரிக்கிறார் என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்? அதிகாரிகளை மிரட்டுவதற்காகத்தான்.
பி.ஜே.பி. அரசியலை இதிலும் அவர் நடைமுறைப்படுத்துகிறார்!
”பார்த்தீர்களா, ஆளுநரே என் பக்கம்தான் இருக் கிறார்; என்னை ஒன்றும் நீங்கள் செய்ய முடியாது” என்று – துணைவேந்தர்மீது தொடுக்கப்பட்ட வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்குரிய முயற்சிகளை செய் கிறார்கள்.
பல குற்றங்களை, அடுக்கடுக்காக செய்துகொண் டிருக்கின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, இதிலும் தன்னு டைய சுய உருவத்தைக் காட்டி, பி.ஜே.பி. அரசியலை இதிலும் அவர் நடைமுறைப்படுத்துகிறார்.
அதனால்தான், பல்கலைக் கழக மாணவர்கள் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக் கிறார்கள்.
மனித உரிமைப் பறிப்புச் சட்டங்களைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்!
செய்தியாளர்: இந்தியன் பீனல் கோடு (அய்பிசி) சட்டத்தை நீக்கிவிட்டு, புதிய சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியிருக்கிறதே?
தமிழர் தலைவர்: மனித உரிமைகளைப் பறிப்பதில் நம்பர் ஒன் பா.ஜ.க.. ஏனென்றால், வெள்ளைக்கார சட்டத்தை, ரவுலட் சட்டம் என்றும், கருப்புச் சட்டம் என்றும் சொன்னார்கள்.
காலனியச் சட்டங்களை நீக்கிவிட்டு, புதிய சட்டங் களைக் கொண்டு வரவேண்டும் என்றால், அதைவிட அதிகமான அளவிற்குக் கடுமையான மனித உரிமைப் பறிப்புச் சட்டம்.
அதைப் பொறுத்தவரையில், நீதிமன்றத்தில் நிற்குமா? என்கிற ஒரு கேள்வி இருந்தாலும், நாடெங்கிலும் இருக்கின்ற வழக்குரைஞர்கள், மனித உரிமையாளர்கள் அதனை எதிர்த்து இப்போது குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
விசாரிக்கலாம் என்பதினாலேயே, குற்றவாளி என்பது முடிவாகிவிடாது!
செய்தியாளர்: ‘முரசொலி’ அலுவலகம் இருக்கும் இடம் ‘பஞ்சமி நிலம்’ என்று வழக்குத் தொடரப்பட்டு, அவ்வழக்கு விசாரணையின் முடிவில், புதிய குழு அமைத்து விசாரிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறதே?
தமிழர் தலைவர்: விசாரிக்கலாம் என்பதினாலேயே, குற்றவாளி என்பது முடிவாகிவிடாது. விசாரிக்கத்தானே சொல்லியிருக்கிறது உயர்நீதிமன்றம் – விசாரணைக்கு அவர்களும் தயாராக இருக்கிறார்கள்.
ஏனென்றால், பஞ்சமி நிலம் இல்லை என்பதற்கு ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. விசாரணை நடத்தினால் நல்லதுதானே!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment