உலகின் மூத்த மொழிகள் என்று கூறினால் தமிழ், சீனம், அரபி, போன்று இன்றும் உயிர்ப்போடு இருக்கும் மொழிகளோடு கிரேக்கம் லத்தீன் ஹிபுரு, சமசுகிருதம் போன்ற வழக்கொழிந்த மொழிகளையும் கூறலாம்.
கிரேக்கம் சிதைந்து கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அய்ரோப்பிய மொழிகளாக கரைந்துவிட்டது, லத்தின் சிதைந்து பிரான்ஸ், போஸ்க், போர்ச்சுகீஸ், சுபானிசு, ஆங்கிலம், டச்சு போன்ற மொழிகளாக உருப்பெற்றுவிட்டது,
பழைய ஹிபுரு மொழிக்கும் தற்போதையை ஹிபுரு மொழிக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இன்று யூதர்கள் பேசும் மொழி என்பது லத்தீன்கலந்த ஹிபுரு ஆகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளாக யூதர்கள் அய்ரோப்பாவில் குடியேறி பிறகு 59 ஆண்டுகளுக்கு முன்பு இசுரேல் வந்ததால் அவர்களின் மொழியான ஹிபுரு சிதைவடைந்து கலப்பு ஏற்பட்டு பழைய உருவை இழந்துவிட்டது.
சீனமும் அரபியும் நவீனத்தின் பால் மாற்றம் ஏற்படுத்திக்கொண்டன, மரக்கலன் ஏறி வணிகம் செய்ய அரபு தேசங்களுக்குச் சென்ற தமிழர்கள் கண்ட அரபி வேறு – இன்றைய அரபுமொழி வேறு, இசுலாமியர்களின் புனித நூல் எனப்படும் குரானில் உள்ள அரபிக்கும் தற்போது உள்ள அரபிக்கும் 70 விழுக்காடு வேறுபாடு உள்ளது.
அரபு மொழி சிதையவில்லை. ஆனால் நவீன காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டதால் அது பழைமை என்ற அடையாளத்தை இழந்துவிட்டது.
இதே நிலைதான் சீனத்திலும் – சீனாவின் பெயர் வரக்காரணமாக இருந்த சீனப் பெருஞ்சுவரை எழுப்பிய குவின் சின் ஹூவாங் (Qin Shin Huang) கி.மு. 250-210 சீன எழுத்துச் சீர்திருத்ததைக் அறிமுகப்படுத்தினார். அதனால் சீனாவில் பெரும் இலக்கிய – இலக்கண புரட்சிகள் ஏற்பட்டு சீனாவில் கல்வியறிவு பெரும் எழுச்சியைப் பெற்றது, அதன் பிறகும் சில மன்னர்கள் சீன எழுத்துக்களை நவீனப்படுத்தி உள்ளனர்.
இறுதியாக சீனப்புரட்சியாளர் மா சே துங் சீன எழுத்துகளை ஒழுங்கு படுத்தி எளிமைப்படுத்தினார். அவருக்குத் தெரிந்திருந்தது எதிர்காலம் நவீன மயமாகும் – அப்போது இதே சீனம் உலக ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள முடியாமல் பின் தங்கிவிடும் என்ற காரணத்தால் எழுத்தை சீர்படுத்தினார். அவரது சிந்தனைக்கு ஏற்றவாறே நவீனத்தோடு சீனம் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதே நேரத்தில் பழைய சீன மொழியைப் பின்பற்றும் வழிமுறையையும் கொண்டுவந்தார். இருப்பினும் Qin Shin Huang காலத்து சீனத்திற்கும் இன்றைய சீனத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளது, சீனத்தில் 4000 ஆண்டுகால எழுத்துப் பெட்டகங்கள் துவக்க காலத்தில் ஆமை ஓடுகளில் எழுதப்பட்டது, பின்னர் மரப்பட்டையைக் கூழாக்கி சமப்படுத்தி காயவைத்து அதில் தாவரச்சாயம் கொண்டு எழுதினார்கள். பின்னர் அதுவே காகிதம் செய்வதற்கான முக்கிய காரணமாகியது, ஆகையால் சீனத்தில் எழுத்துப்புரட்சி என்பது 3000 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துகொண்டே வந்துள்ளது.
சமசுகிருதம் இறந்த மொழிதான், இன்று நடக்கும் கூத்து எல்லாம் இறந்த உடலுக்கு அணிலகன் அணிவித்து அதை உயிர்பிக்க சூ மந்திரக்காளி போடும் வேலையைத்தான் ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியாளர்கள் செய்கின்றனர். மொழியியலாளர்களின் கூற்றுப்படி,
மனிதர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஓசைகளை உருவாக்கி அந்த ஓசைக்கு வரி வடிவம் கொடுத்து, அந்த வரி வடிவம் எழுத்துக்களாக மாறி, அந்த எழுத்துக்கள் சொற்களாக்கி, பின்னர் அந்தச்சொற்களை வரிசைப்படுத்தி, வரிசைப்படுத்தப்பட்ட சொற்களுக்கு விதிமுறைகளை வகுத்து அந்த விதிமுறைகளுக்கு என்று இலக்கணம் உருவாகி. அந்த இலக்கணத்தை பகுத்து ஒழுங்குபடுத்த இலக்கண நூல்கள் உருவாகுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் என்பது குறைந்த பட்சம் 7000 முதல் 4000 ஆண்டுகள் வரை தேவைப்படும் கீழடியும் ஆதிச்ச நல்லூரும் தமிழர்களின் 3000 ஆண்டுகால நகரீக வரலாற்றைக் கூறுகின்றன.
கடல் கொண்ட கபாட புரமும், காவேரிப்பூம்பட்டினமும் தமிழர்களின் 6000 ஆண்டுகால வரலாற்றைச் சொல்கிறது, இந்தக் கூற்றுப்படி தமிழ் – தமிழர் வரலாறு குறைந்தபட்சம் 8000 ஆண்டுகளைக் கொண்டவையாக இருக்கலாம் என்று மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
நதிக்கரை நகரீகங்கள் தோன்றுவதற்கு முன்பே இந்தியத் தீபகற்பத்தின் தெற்கே முழுமையடைந்த மொழிகளைப் பேசும் ஒரு சமூகம் வாழ்ந்துள்ளதற்கான சான்றுகளைத் தேடுவதற்கு உலகம் தயங்குகிறது. காரணம் அப்படி ஒரு முழுமையடைந்த மொழி பேசும் மக்களை கொண்ட வாழிடத்தை உறுதிப்படுத்திவிட்டால் ஒட்டுமொத்த மனித இனம் அறிவுபெற்ற கொள்கையை மாற்றவேண்டும், மேலும் நதிக்கரை நாகரீகம் என்ற கொள்கையில் மாற்றம் செய்யவேண்டி இருக்கும் என்பதால் இந்திய தீபகற்பத்தின் தெற்குப் பகுதி குறித்த ஆய்வை மோற்கொள்ள தயக்கம் கொள்கின்றனர்.
கீழடி என்று ஒன்று உள்ளதே 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் தெரியவருகிறது.
அதற்குரிய முழுமையான ஆய்வறிக்கையை இன்றளவும் ஒன்றிய அரசு வெளியிட மறுக்கிறது.
இத்தகைய பெரும் வரலாற்றைக்கொண்ட மொழியைச் சிதைக்க சமய இலக்கியங்கள் காலத்திலேயே கால்கோள் இடப்பட்டது.
முதல், இரண்டாம் மாற்றும் மூன்றாம் தமிழ்ச்சங்க காலத்தில் சிதைக்கப்படாத தமிழ் – அய்ம்பெருங்காப்பியம், நன்னெறி நூல்கள் இயற்றப்பட்ட காலத்தில் சிதைக்கப் படாத மொழியில் சமய இலக்கியங்கள் என்ற பெயரால் வடமொழி கலக்கப்பட்டது, இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கணி, துளு போன்ற திராவிட மொழிகளோடு மராட்டி, ஒரியா போன்ற மொழிகளும் உருவாகின. இருப்பினும் தமிழ் தன்னை தக்கவைத்துக்கொண்டது.
ஆனால், அந்தத் தமிழை தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க அவர்களின் மொழியைச் சிதைத்தால் தானகவே அவர்களின் கலாச்சாரம் அழிந்துபோகும். கலாச்சாரம் அழிந்தால் தங்களின் உரிமைகளை மறந்து அடிமையாகிவிடுவார்கள் என்ற ஒரே கொடுநெஞ்சத்தோடு களமிறங்கியது பார்ப்பனியம். இதனை அடையாளம் கண்டு கொண்ட தந்தை பெரியார் தமிழோடு தமிழினத்தைக் காப்பாற்ற களமிறங்கினார்.
உதிரத்தோடு கலந்த தமிழ்
1926ஆம் ஆண்டு பெரியார் ‘குடிஅரசில்’ ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி உயர்வுக்கு வகை தேடவே பார்ப்பனர்கள் ஹிந்தியைத் திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதினார்.
1930ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் ஹிந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். மறைமலை அடிகளார் போன்ற தமிழ் அறிஞர்களும் ஹிந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தே இராஜகோபாலாச்சாரி பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கி 1938 பிப்ரவரி 25ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர உத்தரவிட்டார். ஹிந்தியைத் திணிக்கும் ஆணையைப் பிறப்பித்தார். தமிழ்நாடு கொந்தளித்தது.
1938 பிப்ரவரியில் காஞ்சிபுரத்தில் மாபெரும் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. மாநாட்டில் பெரியார் ஹிந்தியை எதிர்த்து போர்முரசு கொட்டினார். “ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை ஒழித்தால் மட்டும் போதாது. அதற்கான உள் காரணங்களையும் ஒழிக்க வேண்டும்” என்று கூறிய பெரியார், அவை என்ன என்பதையும் விளக்கினார். “தமிழ் மக்களை புராண காலம் போல் பார்ப்பனியத்துக்கு நிரந்தர அடிமைகளாய் ஆக்குவதே, இதன் நோக்கம் – சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொண்டிருக்கும் பார்ப்பனிய மத உணர்ச்சியை மீண்டும் சரியானபடி புகுத்துவதற்கே ஹிந்தித் திணிப்பு” என்று அதன் நோக்கத்தை அம்பலப்படுத்தி போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தார்.
தந்தை பெரியார் அறைகூவலை அடுத்து திரள் திரளாக போராட்டத்தில் இறங்கினர் 1271 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்கள் 73 பேர்; குழந்தைகள் 32 என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தைகளோடு சிறைசென்ற தாய்மார்களால் தான் இன்றும் தமிழ் தமிழர்களின் உதிரத்தில் கலந்துள்ளது. “தான் வீழ்ந்தாலும் தமிழ் வீழாது” என்ற உறுதியோடு நின்றார்கள்.
சென்னை எழும்பூரில் உள்ள வானுயர் கட்டடத்தில் உயரத்தில் கம்பீரமாக பொறிக்கப்பட்டுள்ள தாளமுத்து – நடராஜன் என்ற பெயர் மொழிக்காக உயிர்நீத்த தமிழர்களின் புகழை என்றும் முரசறைந்துகொண்டே இருக்கும்.
எந்தச் சீனரும், அராபியரும், மொழிக்காக போராடி உயிர் துறக்கவில்லை. வேறுஎந்த மொழிக்காரர்களும் தங்களது பெயரோடு மொழியைச் சேர்க்கவில்லை. ஆனால் தமிழர்கள் மட்டுமே தங்களின் மொழியோடு வாழ்ந்தார்கள்.
மொழியோடு பெயர் வைப்பதைப் பெருமையாக கொண்ட ஒரே இனம் தமிழ் இனம் மட்டுமே.
மொழி அழிப்பு
22.01.2024 அன்று அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் ஒன்று வெளியானது. அதாவது, ராமன் கோவில் திறப்புவிழா குறித்த விளம்பரம். இந்த விளம்பரத்தில் என்ன எழுதி உள்ளது என்று ஹிந்திக்காரர்களுக்கே தெரியாது.
எழுதியது என்னவோ ஹிந்தி வார்த்தைகளில் தான். ஆனால், அதற்கு என்ன பொருள் என்று ஹிந்திக்காரர்களுக்குக் கூடத் தெரியாது.
தமிழ்நாட்டில் தமிழ் நாளிதழ்களில் தமிழர்களுக்குப் புரியாத ஒருமொழியில் விளம்பரம், ஹிந்திகாரர்களுக்கும் தெரியாத அந்த விளம்பரத்தை எதற்குப் போட்டார்கள் என்று மோடிக்கு வேண்டுமென்றால் தெரிந்திருக்கலாம்.
“அவதபுரி ரஜன பனாயோ” என்பது அந்த நாளிதழ் விளம்பரம்.
அதில் அயோத்தி நகரில் புதுப்பிக்கப்பட்ட பல இடங்களை ஹிந்தி பெயர்களோடு பதிவிட்டிருந்தனர்.
“அவதபுரியின் அழகைப் பாருங்கள்” என்பதுதான் அந்த விளம்பரத்தின் பொருள்.
தமிழ்நாடு – தமிழர்கள் தமிழ் பேசும் நாடு, அதே போல் அவத மொழி பேசும் ஊர் அவதபுரி.
அயோத்தியில் உள்ளவர்களே தற்போது அவத மொழி பேசுவதில்லை, ஒரு மொழியை அழித்துவிட்டு அந்த மொழியை விளம்பரத்திற்கு பயன்படுத்தும் கொடூரம் பாசிசசக்திகளுக்கு மட்டுமே வரும்.
இன்று உச்சரிக்கத் தெரியவில்லை என்றாலும் நான் தமிழிலேயே திருக்குறளைக் கூறுவேன் என்று தமிழ்நாட்டு மேடைகளில் அடம் பிடித்து பேசுபவர்களின் உள்ளச்சிந்தனை என்பது எப்படி அழிந்து போன ஒரு மொழியில் விளம்பரங்களைச் செய்து அந்த மொழி பேசிய வம்சத்தினரை கிண்டலடிக்கும் வேலையைச் செய்கிறார்களோ – அதே போன்று தான் தமிழில் அவர்கள் பேசி தமிழையும் தமிழர்களையும் கிண்டல் அடிக்கிறார்கள்.
தமிழ் இன்று நேற்று வந்ததல்ல – பல்லாயிரம் ஆண்டு கடந்த மொழி, கோடிக்கணக்கான மக்களின் உதிரத்தில் கலந்து தலைமுறைகளோடு நம்மோடு வாழும் மொழி.
அந்த மொழிபேசும் இனத்தில் பிறந்த நாம் பெருமைகொள்வோம்.
(குறிப்பு: “தமிழ்தான் தேசிய மொழி” என்ற தலைப்பில் 25.01.2024 அன்று விடுதலை வாசகர் வட்ட கூட்டத்தில் சரவணா ராஜேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து…)
No comments:
Post a Comment