இம்பால்,ஜன.26- மணிப்பூரில் கிராம பாதுகாவலர் உட்பட அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப் பட்டதை கண்டிக்கும் வகையில் கூட்டுக்குழுவினர் நடத்திய 48 மணிநேர மறியல் காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது.
இடஒதுக்கீடு
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதலமைச்சர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கூகி மற்றும் மெய்தி சமூகத்தினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக பெரும் கலவரம் ஏற்பட்டு, ஏராளமானோர் பலியாகினர்.
சமீப காலமாக வன்முறை சற்று குறைந்திருந்த நிலையில், புத்தாண்டு நாளன்று மணிப்பூரில் தெங்னோபால் மாவட்டத்தின் மோரே நகரில் அடையாளம் தெரியாத நபர்கள், பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தலைமறை வாகினர். இச்சம்பவத்தில் நான்கு பேர் பலியாகினர்.
கடந்த 17ஆம் தேதி பாதுகாப்புப் படையினரின் முகாம் மற்றும் அவர்களின் வாகனங்களின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையேயான தாக்குதல், அருகே உள்ள தவுபால், பிஷ்ணுபூர், இம்பால் மேற்கு ஆகிய மாவட்டங்களிலும் பரவியது.
சந்தைப் பகுதி
தொடர்ந்து இரண்டு நாட்கள் நீடித்த இச்சண்டையில், இரண்டு காவல் துறையினர் உட்பட ஏழு பேர் பலியாகினர். மூன்று எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் கிராம பாதுகாவலர் மனோரஞ்சன் சிங் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில் மணிப்பூரில் இயங்கும் கூட்டு செயற்குழுவினர், மணிப்பூர் மாநிலத்தில் மத்தியப் படைகளை திரும்பப் பெறுவது, தேசிய குடிமக்கள் பதிவை அமல்படுத்துவது உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை 24 மணி நேரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என, மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கிற்கு கெடு விதித்தனர்.
இக்குழுவினரின் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றாததால், மாநிலம் முழுதும் 23.1.2024 அன்று முதல், 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு கூட்டு செயற்குழுவினர் அழைப்பு விடுத்தனர்.
இதன் காரணமாக, மாநில தலைநகர் இம்பால் உட்பட இதர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகரின் முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள், சந்தைப் பகுதிகள் உள்ளிட்டவை வெறிச்சோடிக் காணப்பட்டன.
No comments:
Post a Comment