ராமன் எத்தனை பேருக்கு வழிபாட்டுத் தெய்வம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 27, 2024

ராமன் எத்தனை பேருக்கு வழிபாட்டுத் தெய்வம்?

பாணன்

இசுலாமிய நாடு என்றால் மக்கள் அனைவரும் ஓர் இறைவழிபாட்டை கொண்டவர்கள். இசுலாமியர்களிடையே ஷியா – சன்னி என்ற பிரிவுகள் இருந்தாலும் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது சில மதவாத சச்சரவுகளைத் தவிர (இந்தச் சச்சரவுகள் குண்டு வைக்கும் வரை சென்று அடிக்கடி உயிரிழப்புகள் உண்டு) இருப்பினும் அங்கு வழிபாட்டுத்தலங்களுள் அனைவரும் ஒன்றே.
ஆனால் இங்கே.. ஹிந்து தேசம் என்றால். மகாராட்டிராவில் ராமனைத் தேடமுடியாது, பெண் தெய்வ வழிபாடுதான், அதே போல் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வாழும் மக்கள் ஜெய் மாதா ஜி – பெண் தெய்வ வழிபாடுதான்.
தெற்கே பகவதியும், மாரியம்மனும், சாமுண்டியும், எல்லம்மாவும் பவானியும், துர்க்காவும், மாகாளியும் தான் இந்திய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை துவங்கி தக்காண பீடபூமி முழுவதும் மற்றும் கிழக்கு வங்க விரிகுடா எல்லை வரை பெண் தெய்வ வழிபாடுதான், பூரி ஜெகனாதர் ரதயாத்திரையை காட்டும் தொலைக்காட்சிகள் பல லட்சம் பேர் கூடும் வீரம்மா தாலி கோவில் தேர்த் திருவிழாவை என்றாவது காட்டியுள்ளனவா?
வீரம்மா படம் இல்லாத சாமானிய தெலுங்கு மக்களின் வீடே ஆந்திரா, தெலங்கானாவில் கிடையாது.

கருநாடகாவில் வீட்டில் ஒரு குழந்தைக்காவது சாமுண்டி மற்றும் எல்லாவின் ஒரு எழுத்தாவது வருமாறுதான் பெயர் சூட்டுவர்கள். நெல்லையில் இன்றும் நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்குச் செல்லாத ஹிந்துக்கள் என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மக்கள் உண்டு. (எனது தாத்தா பாட்டி கடைசி வரை அங்கு சென்றதே கிடையாது. இத்தனைக்கும் எங்கள் ஊரில் இருந்து மார்க்கெட் போகவேண்டும் என்றால் நெல்லை டவுணிற்கு என்று மட்டும் 29 ஆம் நம்பர் பேருந்து உண்டு.
இதில் என்ன கூத்து என்றால் உத்தரப்பிரதேசத்தில் 62 விழுக்காடு ஹிந்துக்கள் சிவனை வழிபடும் ஹிந்துக்கள் இவர்கள் ராமனை வணங்கமாட்டர்கள். உத்தராகண்டில் சிவன்தான் முதல் தெய்வம், இதனை மறைத்துத்தான் கேதர்நாத்தை முன்னிறுத்துகின்றனர்.
ஜார்கண்ட், சத்தீஷ்கர் சென்றால் அங்கும் மகிஷவர்த்தினிதான் வெகுஜனம் வழிபடும் தெய்வம், வடகிழக்கு மாநிலங்களில் பெண் தெய்வ வழிபாடுதான் முதன்மை, அவதிபுரி எனப்படும் அயோத்தி மற்றும் பீகார் – நேபாள் எல்லையில் உள்ள ஜனக்பூர் இந்த இரண்டு இடங்களில் மட்டும் தன் அங்குள்ள மக்கள் ராமனை கடவுளாக வழிபடுகின்றனர். ஜனக்பூரிலும் சீதாராமர் தான் வழிபாடு தெய்வம். அப்படிப் பார்த்தால் அவதிமொழி பேசும் அவதபூரி என்ற அயோத்தியில் வாழும் மக்களின் வழிபாட்டுத் தெய்வம் மட்டுமே ராமன்.

அயோத்தியில் சுமார் 80,000 பேர் பூர்வீகமாக வாழ்பவர்கள். இவர்களில் 5000 பேர் பார்ப்பனர்கள், 12,000 பேர் உயர் ஜாதியினர், 7000 இஸ்லாமியர்கள் மற்றவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர். அயோத்தியில் நாடோடிகள் மிக மிகக் குறைவு. அதன்படி அயோத்தியில் கூட 17,000 பேர் மட்டுமே ராமனை மட்டும் கும்பிடுபவர்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருமே அவர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த கங்கை அம்மனின் சகோதரி என்று கூறிக்கொள்ளும் Swaaha Devi (Svaahaa Dhevee) சுவாகா தேவியைக் கும்பிடுபவர்கள். ஆனால், இன்றைய தலைமுறைக்கு சுவாகா தேவி என்றால் யார் என்றே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

சூத்திரர்களும் பிற்படுத்தப்பட்டவர் களும் ராமன் படம் பொறித்த அடையாளத்தை கழுத்தில் அணியக் கூடாது என்பதற்காக அவர்கள் வழிபட்ட சுவாகா தேவியின் கணவர் அனுமான் என்று கதைவிட்டு அனுமான் அடையாளத்தை சூத்திரர்கள் கழுத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
நாம், வைக்கத்தை பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம். ஆனால் அயோத்தி தெருக்களில் அருகில் உள்ள கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்கள் இதுவரை நடந்ததே இல்லை.
2016ஆம் ஆண்டில் வாரணாசியில் ஒரு திருமணத்திற்குச் சென்ற போது அயோத்தியாவிற்கும் சென்றேன். பழைய காலத்து அக்ரகாரம் போன்றுதான் அங்குள்ள தெருக்கள் காணப்பட்டன.
புதிதாக ஒன்றுமில்லை. எங்குபார்த்தாலும் கோவில்களும் காவிச்சாமியார்களும் பழுப்பேறிய ஆடையோடு அங்கே இங்கே சுற்றிக்கொண்டு மக்களை பூஜைக்கு அழைத்துச்செல்லும் ஏஜெண்டுகளால் நிறைந்திருந்தது நகரம்.
ராமன் படம் போட்ட டாலர்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர். ஆனால் சின்ன அனுமார் சிலைகொண்ட காவி நிற கயிறுகள் தான் அதிகம் விற்பனையானது.

இது குறித்துக் கேட்ட போது ஒரு சிறுவன் கூறியது, “இராமன் டாலர் போட்டு நாங்க ஊருக்குச் சென்றால் பசங்க அடிப்பாங்க (உயர்ஜாதியினர்)” என்று கூறினான்.
அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாமரத்தோப்பு ஒன்றில் நண்பரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற போது வழியில் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்த சில நடுத்தர வயது நபர்களிடம் பேசும் போது “அயோத்தியில் உள்ள ராமன் கோவிலுக்குச் சென்றுள்ளீர்களா” என்று கேட்க அவர்களோ, “எங்களுக்கு அங்கு செல்ல நேரம் ஏது!” என்றுமட்டுமே கூறினார்கள்.
உண்மையில் அவர்களை அங்கு அனுமதிக்க மாட்டார்கள் – ஒரு நந்தனார் தெற்கே தீயில் இறங்கி தன்னைப் புனிதப்படுத்திக்கொண்டு சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தார்.

ஆனால் அங்கே லட்சக்கணக்கான நந்தனார்கள் அயோத்திதெருக்களைக்கூட பார்க்காமல் அருகில் உள்ள ஊர்களில் வசிக்கின்றனர்.
இவர்கள் விருப்பப்பட்டுச்சென்றாலும் அங்கே அவர்களுக்கு அவமானங்கள் தான் மிஞ்சும்.
இன்றும் அயோத்தி உள்ளிட்ட பல நகரங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடிதிருத்தமாட்டார்கள். புதிதாக யாரும் வந்தால் அவர்கள் எந்தக் கிராமம், கிராமத்தில் எந்தப் பகுதி என்று எல்லாம் விசாரித்துவிட்டு அவர்கள் உயர்ஜாதியினர் என்றால் மட்டுமே முடிவெட்டும் தீண்டாமை 2016-இலும், அயோத்தி, வாரணாசி போன்ற நகரங்களில் இருந்ததை பார்த்த நேரடி சான்றாக நிற்கிறேன்.
22.01.2024 அன்று மட்டும் மின்னொளியில் மிதந்த அயோத்தியின் மறுபுறம் – வீடுகளுக்கு கதவு வைக்கக் கூடாது. செங்கல் வைத்த வீடுகள் கட்டக் கூடாது – அப்படியே கட்டினாலும் ஆடம்பரமாக தெரியக்கூடாது போன்ற பல கொடுமையான எழுதப்படாத சட்டங்கள் அயோத்தியைத் சுற்றியுள்ள கிராமங்களில் உண்டு.
ராமன் படம் மடங்களிலும் உயர் ஜாதியினரின் வீடுகளின் முன்பும் இருக்கும். ஆனால், அயோத்தியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் ராமன் படம் இல்லை. வேண்டுமென்றால் ராமன் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அவர்கள் வற்புறுத்தி கொடுத்த ராமன் படத்தை வேண்டுமென்றால் வீட்டின் ஏதாவாது ஒரு மூலையில் ஒட்டி வைத்திருப்பார்களே தவிர, அவர்களிடம் ராமன் படத்தை பூஜைக்காக வீட்டில் வைக்கும் துணிச்சலைக் காணமுடியாது.
அயோத்தியில் வசிக்கும் பூர்வ குடிகளுக்கே ராமன் வழிபாட்டுத் தெய்வமாக இல்லாத நிலையில் நாடெங்கும் எப்படி ஜெய் சிறீராம் மயமாக இருக்கும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது.

ஜெய் சிறீராம் என்பது என்றால் என்ன? இந்தச் சொல்லைக் கூறச் சொல்லி சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர். ஆம்! ஜனவரி 22ஆம் தேதி ஜெய்சிறீராம் என்ற காட்டுக்கூச்சல் – 30ஆம் தேதி “ஹேராம்” என்ற முணுமுணுத்தலோடு காந்தியாரின் உதட்டில் இருந்து இளஞ்சூடான இறுதி சுவாசமாக வெளியேறியது. ஒருவேளை இன்று கோட்சே இருந்திருந்தால் “ஜெய் சிறீராம்” என்று கூறிக்கொண்டே காந்தியாரைச் சுட்டுக் கொன்றிருக்க அதிக வாய்ப்பு உண்டு.
அது என்ன ஜனவரி 22இல் ராமன் கோவில் திறக்க தேதி குறித்தார்கள் என்றால், வரலாற்றுக் கடிகாரத்தை 1948 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாளுக்குத் திருப்பினால், காந்தியாரைக் கொலை செய்ய அய்ந்தாம் முறையாக திட்டமிட்டு பிர்லாபவனில் குண்டுவைத்தார்கள். ஆனால் குண்டு வெடிக்கவில்லை.
குண்டுவைத்த மதன்லால் பக்வா சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், குண்டு வெடிக்காமல் போகவே காவல்துறையிடம் பிடிபடுகிறார். மற்றவர்கள் ஓடி விடுகின்றனர்.

அப்படி ஓடியவர் ஆனந்தபர்பத் என்ற இடத்தில் ஜனவரி 22 அன்று கூடி இம்முறை, அதாவது ஆறாவது முறை எந்த ஒரு தவறும் நடக்காமல் காந்தியாரைக் கொல்வது என்ற திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று சபதம் எடுத்தனர்.
ஒருவேளை அப்படி சபதம் எடுத்து கலைந்துசெல்லும் போது “ஜெய் சிறீராம்” என்று கூச்சலிட்டார்களோ என்னவோ! ஆகையால் தான் ஆர்.எஸ்.எஸ். ஜனவரி 22ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தது.
ஆனாலும், காந்தியாரின் அனுதாபிகள் ஜனவரி 30 அன்று ராமன் கோவில் திறக்கப்படும் தேதியாக குறிக்கப்படவில்லையே என்று நிம்மதி அடைந்திருக்கலாம்.

No comments:

Post a Comment