தந்தை பெரியார் பொங்கல் வாழ்த்து
பொங்கல் வாழ்த்து என்பது பொதுமக்கள் இடையில் அண்மையில் செல்வாக்குப் பெற்றுவிட்டது. இதற்குக் காரணம் பொங்கல் விழா தமிழர்கள் விழாவாகக் கருதப்பட்டு வருவதேயாகும்.
உண்மையில் இன்று தமிழர்களுக்குத் தமிழர் விழா என்று சொல்லத்தக்க வண்ணமாக பொங்கல் விழாவைத் தவிர வேறு விழா எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.
ஆகவே, தமிழர்கள் இந்த உண்மைக் காரணத்தினாலேயே பொங்கல் நாளை பொங்கல் விழாவாகக் கொண்டாடுவதோடு அதைத் தனிப்பெரும் தமிழ் நாளாகவும் கொண்டாட வேண்டியவர்கள் ஆனார்கள். இப்படிப்பட்ட இந்த கொண்டாட்ட விழா நாளில் தமிழர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வாழ்த்தை அனுப்ப ஆசைப்படுவது தமிழர் இயல்பேயாகும். அந்த முறையில் நான் ஒவ்வொரு தமிழருக்கும் பொங்கல் வாழ்த்தாக நல்வாழ்த்து “திராவிட நாடு’’ மூலம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
என்ன வாழ்த்து என்றால், தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டு தமிழர்க்கு இன்றுள்ள இழிவும் குறைபாடுகளும் நீங்கி, மனிதப் பண்பு பெற்று மானமுள்ள மக்களாக வாழவேண்டும் என்பதான வாழ்த்துதல்தான்.
– ஈ.வெ.ராமசாமி, 14.01.1949
(14.01.1949 – திராவிட நாடு இதழில் பகுத்தறிவுப் பகலவன்
தந்தை பெரியார் தம் கைப்பட எழுதிய பொங்கல் வாழ்த்து)
• • •
பொங்கல் குறித்து அண்ணா
ஒரு கலை விழாவாக, ஒரு பண்பாட்டு விழாவாக தமிழ்நாட்டிலே நடத்தப்படுவது பொங்கல் விழா.
உழவர் திருநாள் இப்பொங்கல் புதுநாள் என்பதை அனைவரும் இன்று அறிந்து போற்றுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சங்கராந்திப் பண்டிகையாகவும் சூரிய நமஸ்காரப் பண்டிகையாகவும் இருந்து வந்த நிலைமாறி, இதுபோது, அறுவடை விழா என்றும், உழவர் திருநாள் என்றும், தமிழர் விழா மற்றும் திராவிடர் திருநாள் என்றெல்லாம் ஏற்றம் பெற்று விளங்கிடக் காண்கிறோம்.
எல்லாப் பண்டிகைகளும் நம்மைப் பிற இனத்தாரின் எடுபிடிகளாக்குவதற்கே பெரிதும் பயன்பட்டு வருவது கண்டு பேராசிரியர் பலரும், சிந்தனையாளர்களும், சீர்திருத்தச் செம்மல் களும், தமிழருக்கே உரித்தானதும் தனிச் சிறப்பளிப்பதுமான இப்பொங்கல் புதுநாள் மாண்பினை மக்கள் அறிந்திடச் செய்துள்ளனர்.
• • •
மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல்…
தமிழர்களே, தமிழர்களே!
மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்றாரே!
பாவேந்தர் பாரதிதாசன் – அன்று
மூவேந்தர் பரம்பரை கொண்டாடிய
பொங்கலை என்றும்
தொடருகின்ற தமிழர் விழாவாகக் கொண்டாடுவோம்!
வான் முட்ட வண்ணக் கொடிகள் பறக்கட்டும்!
வாழ்த்துக்கள் முரசு கொட்டட்டும் வகை வகையாக!
தெருவெல்லாம் தோரணங்கள் –
திண்ணைகளில் கோலங்கள் –
தேன் கலந்த மழலை மொழியும்
ஊன் கலந்து உயிரோடு இணையும்
கோலமங்கைக்கு குளிர் விழியும்
காலமெல்லாம் வாழ்க தமிழ் என்று
சீலமிகு செம்மொழியைப் பாடட்டும்!
– முத்தமிழறிஞர் கலைஞர்
– 2007ஆம் ஆண்டு எழுதிய கவிதை
No comments:
Post a Comment